நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித்தோட்டத்தில் ஜாதிமல்லி பயிரிடும் முறை யை இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்
- 50லிட்டர் கொள்ளளவு கொண்ட டிரம்
- அடியுரமாக இட மணல், தென்னை நார்க்கழிவு மக்கியது, மண்புழு உரம், செம்மண், வேப்பம் பிண்ணாக்கு, பஞ்சகாவ்யா
- பதியன் குச்சிகள் அல்லது வேர்ச்செடிகள்
- நீர் தெளிக்க உதவும் பூவாளி தெளிப்பான்
- கவாத்து உபகரணங்கள்
தொட்டிகள்
அடியுரமாக மண், தென்னை நார்க்கழிவு, இயற்கை உரம் என மூன்றையும் சம அளவில் கலந்து நிரப்பி தொட்டியை ஒரு வார காலத்திற்கு ஆற விட வேண்டும்.
உரங்களை நிரப்பும் பொழுது, அதன் நீளத்தில் ஒரு அங்குலத்துக்குக் கீழ் இருக்குமாறு நிரப்ப வேண்டும், முழுமையாக நிரப்பக் கூடாது.
இது நீண்ட கால செடி என்பதால் தென்னை நார்க்கழிவு சேர்க்க வேண்டும். அப்பொழுது தான் மண் இலகுவாக செடி வளர்வதற்கு ஏற்றதாக இருக்கும்.
விதைத்தல்
பதியன் குச்சி அல்லது வேர்ச்செடிகளை நிரப்பப்பட்டுள்ள கலவையின் மையத்தில் நடவு செய்ய வேண்டும். வேர்ப்பகுதி முழுவதும் மறையும் படி ஊன்ற வேண்டும்.
நீர் நிர்வாகம்
செடிகளை ஊன்றியவுடன் நீர் தெளிக்க வேண்டும். பின்னர் தினம் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
செடிக்கு தண்ணீர் தேவைப்படுகிறதா என்பதை ஒரு குச்சியை எடுத்து ஊடகத்தினுள் செருகிப் பார்க்க வேண்டும். அப்பொழுது குச்சியில் துகள்கள் ஒட்டிக்கொண்டால் தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியமில்லை.
உரங்கள்
மாதம் ஒரு முறை பஞ்சகாவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து வேர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும்.
செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும்.
சமையலறை கழிவுகளை மக்கச்செய்து உரமாக இடலாம்.
பாதுகாப்பு முறைகள்
வாரம் ஒரு முறையாவது செடியைச் சுற்றி அடி மண்ணைக் கொத்தி விட்டு நீர் ஊற்ற வேண்டும்.
வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும். இது அடி உரமாகவும் பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.
இதனை கொடியாகவும் வளர்க்கலாம். குற்றுச்செடியாக வளர்க்க செடிகளின் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். அப்பொழுது தான் பக்கக்கிளைகள் தோன்றும். குறிப்பிட்ட அளவிற்கு மேல் வளர விடாமல் கவாத்து செய்ய வேண்டும்.
பயன்படுத்தும் இடங்கள்
இதன் தொட்டியை சுவற்றின் அருகில் சிறு கற்களை இட்டு அதன் மீது வைக்க வேண்டும். அப்பொழுது தான் செடிகளை சுவற்றின் மீது படர விட ஏதுவாக இருக்கும்.
மாடியில் சிறிய பந்தல் போட்டு அதன் மீதும் படர விடலாம். மற்ற செடிகளுக்கு நிழலாகவும் அமையும்.
ஜாதிமல்லி பயன்கள்:
- பெண்கள் தலையில் சூடிக்கொள்ளும் மணம் மிகுந்த மலராகும்.
- ஜாதிமல்லி மற்றும் முல்லையில் தலா 10 பூக்களை எடுத்து அத்துடன் 2 டீஸ்பூன் பால் சேர்த்து அரைத்து முகம், உடம்பு முழுக்க தடவி 15 நிமிடங்கள் ஊற வைத்து, பிறகு பயத்த மாவு கலந்த குளியல் பொடி உபயோகித்துக் குளிக்கலாம். இது வெயில் காலத்தில் உண்டாகிற அத்தனை சருமப் பிரச்னைகளுக்கும் தீர்வு தரும்.
- வாசனைத் திரவியங்கள் தயாரிக்க பயன்படுகிறது.
Leave a Reply