முல்லைப்பூ கொடிவகையை சார்ந்த தாவரமாகும்.
இது இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மியான்மர் போன்ற நாடுகளில் காணப்படுகிறது.
இதன் பூக்கள் நறுமணமுடையவை. பெண்கள் பூவினை தலையில் சூடிகொள்ளவும், நறுமண பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகின்றன.
தமிழகத்தில் முல்லைச்செடியினை வீடுகளிலும், தோட்டங்களிலும் பந்தலிட்டு வளர்க்கின்றனர்.
எப்படி பயிரிடுவது…?
இரகங்கள் :
முல்லையில் ஆம்பூர் முல்லை, ஆற்காடு முல்லை, பச்சை முல்லை, குட்டை கூர்முனை, குட்டை வட்டமுனை, நடுத்தர கூர்முனை, நீண்ட கூர்முனை, நீண்ட வட்ட முனை என உள்ளூர் வகைகள் பல உள்ளன. அதைதவிர பாரிமுனை, கோ 1, கோ 2 இரகங்களும் உள்ளன.
பருவம்
ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை நடவுக்கு ஏற்ற மாதங்கள் ஆகும்.
மண்
செம்மண், களிமண், கரிசல்மண் ஆகியவை ஊசிமல்லி சாகுபடிக்கு ஏற்றவை.
நிலம் தயாரித்தல்
நிலத்தை நன்கு உழுது 30 செ.மீ நீளம், அகலம் மற்றும் ஆழம் உள்ள குழிகளை தயார் செய்ய வேண்டும். பின்பு குழிக்கு 10 கிலோ தொழு உரம் இட்டு மண்ணுடன் நன்கு கலந்து ஆற விடவேண்டும்.
விதையளவு
ஓரு எக்டரில் பயிரிட 1,000 செடிகளும், அடர் நடவு முறையில் பயிரிடுவதற்கு 4,000 செடிகளும் தேவைப்படும்.
விதைநேர்த்தி
10 லிட்டர் தண்ணீரில், 300 மில்லி பஞ்சகாவ்யா கலந்து 8 மாத வயது கொண்ட முல்லைப் பதியன்களை அக்கரைசலில் நனைத்து விதைநேர்த்தி செய்ய வேண்டும்.
விதைத்தல்
வரிசைக்கு வரிசை 1.5 மீட்டர், செடிக்குச் செடி 1.5 மீட்டர் இடைவெளியில் குழியின் மையப்பகுதியில் விதைநேர்த்தி செய்த பதியன்களை நடவு செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம்
நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பிறகு மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 7-ம் நாளில் புதுத்துளிர் வளர ஆரம்பிக்கும். பிறகு, வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
உரங்கள்
இயற்கை உரமிடல் முறையில் 60-ம் நாளில் ஒவ்வொரு செடிக்கும் 5 கிலோ கோழி எரு வைத்து, கிளறிவிட வேண்டும். 20-ம் நாளில் இருந்து தொடர்ச்சியாக 20 நாட்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகாவ்யா, தலா 10 மில்லி வீதம் சூடோமோனஸ், டிரைக்கோடெர்மா விரிடி, வேம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து தெளிக்க வேண்டும்.
செயற்கை உரமிடல் முறையில் செடி ஒன்றிற்கு தழைச்சத்து 120 கிராம், மணிச்சத்து 240 கிராம் மற்றும் சாம்பல் சத்து 120 கிராம் தரக்கூடிய உரங்களை 6 மாத இடைவெளியில் இருமுறை கொடுக்கவேண்டும்.
பாதுகாப்பு முறைகள்
களை நிர்வாகம்
20 நாட்களுக்குப் பிறகு 6 மாதங்களுக்கு ஒரு முறை களைகளை அகற்ற வேண்டும். செடிகள் வளர்ந்து நிழல் கட்டிக்கொண்டால் களை தோன்றாது. ஜனவரி மாதத்தில் தரைமட்டத்திலிருந்து 45 செ.மீ உயரத்தில் வெட்டிவிட்டு கவாத்து செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் பக்ககிளைகள் அதிகமாக தோன்றும். பின்னர் உரமிட்டு நீர்ப் பாய்ச்சவேண்டும்.
சிவப்பு சிலந்திப்பூச்சி
சிவப்பு சிலந்திப்பூச்சியை கட்டுப்படுத்த நனையும் கந்தகம் 2 கிராம் மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
பூ மொட்டு புழு
பூ மொட்டு புழுவை கட்டுப்படுத்த மோனோகுரோட்டோபாஸ் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
அறுவடை
மே – நவம்பர் மாதங்களில் பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். நன்கு வளர்ந்த மொக்குகளை காலை வேளையில் பறிக்கவேண்டும்.
மகசூல்
ஒரு எக்டருக்கு 10,000 கிலோ பூ மொக்குகள் வரை மகசூல் கிடைக்கும்.
பயன்கள்
- முல்லைப்பூவின் சாறு பிழிந்து 3 துளி மூக்கில் விட தீராத தலைவலிகள் தீரும்.
- முல்லைப்பூவின் சாறு 2 அல்லது 3 துளிகள் கண்ணில் விட்டு வர கண்பார்வை குணமாகும்.
- ஒரு கைப்பிடி அளவு முல்லைப் பூவை நீர் விட்டுக் காய்ச்சி பாதியாக வற்றியதும் 15 மில்லி அளவு குடித்து வர மாதவிடாய் கோளாறுகள் குணமாகும்.
- முல்லை மலரை தலையில் சூடிக் கொண்டு, அதன் மணத்தை முகர்ந்தால் மனவியாதிகள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும் என்றும் கூறப்படுகிறது.
மணிகண்டன் says
நான் முல்லைப்பூ 500 செடிகள் வளர்த்து வருகிறேன் இரண்டு வருடங்கள் ஆகிறது ஆனால் செடிகள் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது பாதிக்கு பாதி மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது பூக்களும் அதிகமாக வரவில்லை இதற்கு என்ன தீர்வு மண் பிரச்சனையா இல்லை செடிகள் பிரச்சனையா இதுக்கு எனக்கு ஒரு தீர்வு வேண்டும்…
Venkatesan says
முல்லை செடி மற்றும் காகட்டான் செடி வேண்டும் எங்கு கிடைக்கும்.. நல்ல ரகம் தெரிந்தால் சொல்லுங்க