குடைமிளகாய் என்பது மற்ற பயிர்களை போலவே பயிரிடப்பட்டு விற்பனையாகும் காய்கறிகளில் ஒன்றாகும். குடைமிளகாய்ச் செடியின் பெயர் காப்சிக்கம் ஆன்னம் என்பதாகும்.
இது பல நிறங்களில் காணப்படுகிறது. குறிப்பாக சிவப்பு, மஞ்சள், பச்சை, ஆரஞ்சு நிறங்களில் காணப்படுகிறது.
குடைமிளகாய்ச் செடி மெக்சிக்கோ, நடு அமெரிக்கா, தென் அமெரிக்காவின் வடபகுதி ஆகிய இடங்களில் இயற்கையில் விளையும் செடியாகும்.
எப்படி பயிரிடுவது…?
இரகங்கள்
கே டீ பி எல் -19, பயிடாகி கட்டி ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.
பருவம்
ஜூன் – ஜூலை மாதங்கள் சாகுபடி செய்ய சிறந்த பருவம் ஆகும்.
மண்
நல்ல வடிகால் வசதியுடைய, உவர்ப்புத் தன்மை இல்லாத களிமண் குடை மிளகாய் சாகுபடிக்கு ஏற்றது. 6.5-7.0 வரை கார அமிலத் தன்மை கொண்ட மண்ணில் நன்கு வளரும்.
விதையளவு
ஒரு எக்டருக்கு 500 கிராம் விதைகள் வீதம் தேவைப்படும்.
விதைநேர்த்தி
ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கலந்து விதைநேர்த்தி செய்ய வேண்டும்.
நாற்றங்கால் தயாரித்தல்
நாற்றங்கால் அமைக்க 7 மீ நீளம், 1.2 மீ அகலம் மற்றும் 15 செ.மீ உயரம் கொண்ட 10-12 படுக்கைகளை அமைக்க வேண்டும். விதைகளை 10 செ.மீ வரிசை இடைவெளியில் 0.5 செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும். 15-20 கிலோ நன்கு மட்கிய உரம் மற்றும் 500 கிராம் 15:15:15 NPK உரத்தினை விதைத்த 15-20 நாட்களில் ஒவ்வொரு படுக்கைக்கும் அளிக்க வேண்டும்.
நிலம் தயாரித்தல்
நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறைகள் நன்கு உழவு செய்ய வேண்டும். கடைசி உழவுக்கு முன் ஒரு எக்டருக்கு 15 டன் தொழுவுரம் அடி உரமாக இட்டு நன்கு உழவேண்டும். நடவு வயலில் 4 அடி அகலம் உடைய மேட்டுப் பாத்திகளை ஒரு அடி இடைவெளியில் அமைக்க வேண்டும். சொட்டு நீர் பாசனமாக இருந்தால் பக்கவாட்டுக் குழாய்கள் மேட்டுப்பாத்தியின் மத்தியில் இணையாகச் செல்லுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
விதைத்தல்
நடுவதற்கு முன் நடவு வயலில் நீர் பாய்ச்ச வேண்டும். 35 நாட்கள் வயதான செடிகளை 0.5 சதவீத சூடோமோனாஸ் புளோரசன்ஸ் கரைசலில் 30 நிமிடங்கள் நனைத்தபிறகு இரு வரிசை நடவு முறையில் 90 x 60 x 60 செ.மீ என்ற இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம்
நடும் பொழுது நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். அதன்பின் மூன்றாம் நாள் உயிர்தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் மண்ணின் தன்மைக்கேற்ப பாசனம் செய்ய வேண்டும்.
உரங்கள்
எக்டருக்கு 20 கிலோ தழைச் சத்து மற்றும் 20 கிலோ சாம்பல் சத்தினை நட்ட மூன்று வாரங்களுக்கு பிறகும், 40 கிலோ தழைச்சத்து மற்றும் 40 கிலோ சாம்பல் சத்தினை நட்ட ஆறு வாரங்களுக்கு பிறகும் மேலுரமாக இட வேண்டும்.
சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 0.5 சதவீதத்தை 15 நாட்கள் இடைவெளியில் இலைகளின் மீது தெளிக்க வேண்டும்.
வளர்ச்சி ஊக்கிகள்
டிரையகாண்டனால் என்ற வளர்ச்சி ஊக்கியினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1.25 மி.லி என்ற அளவில் நடவு செய்த 15 மற்றும் 30ம் நாட்களில் தெளிக்க வேண்டும்.
பாதுகாப்பு முறைகள்
களை நிர்வாகம்
நடவு செய்த 30 மற்றும் 60ம் நாள் களையெடுத்து பராமரிக்க வேண்டும்.
பயிர் பாதுகாப்பு
ஆந்தராக்னோஸ்
ஆந்தராக்னோஸ் நோயை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீரில் 2 கிராம் மேன்கோசெப் கலந்து தெளிக்க வேண்டும்.
காய் அழுகல் நோய்
ஒரு லிட்டர் தண்ணீரில் 2.5 கிராம் காப்பர் ஆக்ஸி குளோரைடை கலந்து தெளிப்பதன் மூலம் காய் அழுகல் நோயை கட்டுப்படுத்தலாம்.
சாம்பல் நோய்
0.3 சதவித நனையும் கந்தகத்தை தெளிப்பதன் மூலம் சாம்பல் நோயை கட்டுப்படுத்தலாம்.
அறுவடை
நன்கு வளர்ச்சி அடைந்த காய்களை நடவு செய்த 70ம் நாள் முதல் அறுவடை செய்யலாம். காய்களின் அளவைப் பொறுத்து தரம் பிரித்து விற்பனைக்கு அனுப்ப வேண்டும். சிறிய வளைந்த மற்றும் உருமாற்றமுள்ள காய்களைத் தனியாக பிரித்தெடுக்க வேண்டும்.
மகசூல்
ஒரு எக்டரில் இருந்து 25 – 35 டன் காய்கள் வரை மகசூல் கிடைக்கும்.
பயன்கள்
- செரிமானப் பிரச்சனைகளுக்கு குடைமிளகாய் மிகவும் நல்லது. வயிற்று வலி, வாயுத் தொல்லை, வயிற்றுப் போக்கு ஆகியவற்றுக்கும் இது ஒரு நல்ல நிவாரணியாக உள்ளது.
- உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் குடைமிளகாயை உணவில் சேர்த்து வர நல்ல பலனளிக்கும். குடைமிளகாயில் கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால், சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும்.
- குடைமிளகாயில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. குறிப்பாக வைட்டமின் சி, மினரல்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் ஆகியவை அதிகம் உள்ளன.
- வாதம் தொடர்புடைய நோய்கள், வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்றவைகளுக்கு எதிராக செயல்படுகிறது.
- குடைமிளகாயில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், அது ஒரு நல்ல ஆன்டி-ஆக்ஸிடண்ட்டாக உள்ளது. இரத்த நாளங்கள், சருமம், எலும்புகள் ஆகியவை சீராகச் செயல்பட இது உதவுகிறது. ஸ்கர்வி என்னும் நோயைத் தவிர்ப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதிலும் குடைமிளகாய் வல்லது.
- இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தி, அதனைக் கட்டுப்படுத்துகிறது.
Swarna says
It has lots of chemicals i want to know chemical free capsicum farming
Navinkumar V says
மிகவும் பாதிக்கப்பட்ட பயிர்களை உடனடியாக சீராக்க செயற்கை உரங்களை பயன்படுத்தி செடியை காப்பாற்றுங்கள். மற்ற இயற்கை உரங்களை நீங்க பயன்படுத்தி பயன்பெறுங்கள்