- சவுக்கு அயலகத்திலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட மரப்பயிராகும்.
- சவுக்கு விரைவாக வளரும் இயல்புடைய, பசுமை மாறா அழகிய தோற்றம் கொண்ட, ஊசியிலைகளைக் கொண்ட மரமாகும்.
- கடற்கரைப்பகுதிகளில் நன்கு வளரும் இயல்பை உடையது.
- சவுக்கு வறட்சியைத் தாங்கிக்கொண்டு வளரக்கூடிய மரமாக இருப்பதால் வறட்சியான பகுதியில் அதிகம் வளர்க்கப்படுகிறது.
சவுக்கு மரம் எப்படி பயிரிடுவது…?
இரகங்கள் :
சவுக்கு மரம் – நாட்டு வகைகளை தவிர கப்பாளங்-குப்பாங், திமுர், சுங்குனியானா என்ற இரகமானது அதிகளவில் பயிரிடப்படுகிறது.
பருவம்
மழைக் காலத்தில் நடவு செய்ய வேண்டும். ஜப்பசி, கார்த்திகை மாதங்கள் ஏற்ற பருவம் ஆகும்.
மண்
மணல், வண்டல்மண், செம்மண் நிலங்கள் ஏற்றவை. அமிலத்தன்மை உள்ள களிமண்ணிலும், காரத்தன்மை மிக்க சுண்ணாம்புச் சத்துள்ள மண்ணிலும் நன்கு வளரும் தன்மை கொண்டது.
விதைநேர்த்தி
விதைகளை கேப்டான் அல்லது திரம் ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவு கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
நாற்றங்கால் அமைத்தல்
மணல், செம்மண் 9:1 என்ற விகிதத்தில் கலந்து சுமார் 30 செ.மீ உயரத்துக்கு தாய்பாத்தி அமைக்கவேண்டும். அதிக அளவு மணல், விதைகள் அழுகுவதையும், பூஞ்சாண் பாதிப்பையும் தடுக்க உதவும். விதைகளை சம அளவு மணலுடன் கலந்து விதைப்பதால் அவற்றைச் சீராக பரவலாக விதைக்கலாம். இந்த விதைகள் காற்றில் அடித்து செல்லாமல் இருக்க சிறிதளவு மணலை விதைகளை மூடும் அளவுக்குத் தூவ வேண்டும். வைக்கோல், தழைகளைக் கொண்டு தாய்ப்பாத்தியை மூடி, பூவாளியால் தினம் இருமுறை நீர் தெளித்து வரவேண்டும். சவுக்கு மர விதைகள் 10 தினங்களில் முளைத்து விடும். ஒரு கிலோ விதையிலிருந்து சுமார் ஒரு லட்சம் நாற்றுகள் வரை கிடைக்கும். 50 சதவீதம் முளைத்த நாற்றுகள் சுமார் 3-5 செ.மீ உயரம் அடைந்தவுடன் உரம் மற்றும் மண் கலவை நிரப்பப்பட்ட 10-20 செ.மீ அளவுள்ள பைகளுக்கு மாற்ற வேண்டும்.
அந்தப் பைகளில் பிராங்கியா பாக்டீரியா சேர்ப்பது வீரிய வளர்ச்சிக்கு உதவும். பைகளுக்கு மாற்றப்பட்ட நாற்றுகள் சுமார் 3 மாதங்களில் 25 முதல் 30 செ.மீ உயரம் வளர்ந்து நடவுக்குத் தயாராகிறது.
நிலம் தயாரித்தல்
சவுக்கு சாகுபடிக்காக தேர்வு செய்யும் நிலத்தை ஐந்து மாதங்கள் காயப்போட வேண்டும். பிறகு ஏக்கருக்கு இரண்டு டன் அளவில் தொழுவுரத்தை இட்டு மூன்று அல்லது நான்கு முறை உழவு செய்ய வேண்டும்.
விதைத்தல்
தயார் செய்துள்ள நிலத்தில் 0.30×0.30×0.30மீ அளவுள்ள குழிகளை 1மீ x 1மீ அல்லது 2மீ x 2மீ இடைவெளியில் எடுக்க வேண்டும். குழிகளில் தொழுஉரம் மற்றும் மண்புழு உரம் இடுவது வளர்ச்சியை மேலும் கூட்ட உதவும்.
நடவு செய்யப்பட்ட, முதல் 2-3 ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக சுமார் 3 மீட்டர் உயரம் வரை வளரும். தாய்லாந்து நாட்டு கலப்பின வகையான சுங்குனியானா சவுக்கு மட்டும் சுமார் ஐந்து ஆண்டுகளில் 20 மீட்டர் உயரமும், 25 செ.மீ குறுக்கு விட்டமும் கொண்ட மரமாகிறது.
நீர் நிர்வாகம்
சுங்குனியானா மரங்களுக்கு வறட்சிக் காலங்களில் நீர் பாய்ச்சுவது செடிகளின் இழப்பை முழுக்க தவிர்க்க பயன்படும். நாட்டு சவுக்கு மரங்களுக்கு நீர் கண்டிப்பாக தேவை. இல்லையேல் வளர்ச்சி பாதிக்கப்படும். கப்பாளங்-குப்பாங், திமுர் ஆகிய சவுக்கு மரவகைகள் குறைவான நீரிலேயே நன்கு வளரும் தன்மை கொண்டவை.
சவுக்கு மரங்களுக்கு சொட்டு நீர்ப்பாசனம் தான் சிறந்தது. இதனால் களைகளும் கட்டுப்பாட்டில் இருக்கும்.
சவுக்கு மரம் உரங்கள்:
சவுக்கு மரத்தின் வேர் முடிச்சுக்கள் நைட்ரஜனை தக்க வைக்கும் திறன் உடையவை. எனவே ஒரு எக்டருக்கு 40-50 கிலோ யூரியாவை சமகால இடைவெளியில் இடவேண்டும். ஒரு எக்டருக்கு 150 கிலோ சூப்பர்பாஸ்பேட், முயூரியேட் பொட்டாஸ் 100 கிலோ ஆகியவற்றை 4 முதல் 5 கால இடைவெளியில் சமப்பகுதியாக பிரித்து கொடுக்க வேண்டும்.
சவுக்கு மரம் பாதுகாப்பு முறைகள்:
களை நிர்வாகம்
நடவு செய்யப்பட்ட முதல் ஆண்டு மட்டும் களை எடுப்பது அவசியமாகிறது. அதன் பின் மரத்திலிருந்து விழும் சிறு கிளை துண்டுகள் போர்வை போல அமைந்து களைகளின் வளர்ச்சியை முழுக்க கட்டுப்படுத்துகிறது.
மரத்தின் முக்கால் பகுதிக்கு கீழ் உள்ள பக்கக்கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். இதன் மூலம் 6-12 மாதங்களில் நல்ல கழிகள் கிடைக்கும்.
பயிர் பாதுகாப்பு
பட்டைப்புழு
பாதிக்கப்பட்ட சேத பகுதிகளை நீக்கிவிட்டு அப்பகுதியில் மோனோகுரோட்டோபாஸ் என்ற பூச்சிக்கொல்லியை பஞ்சில் நனைத்துப் பூச்சி துளையிட்ட பகுதியில் வைக்க வேண்டும்.
தண்டு துளைப்பான்
கம்பியின் மூலம் தண்டு துளைப்பான் புழுவை வெளியேற்றி அப்பகுதியில் மோனோகுரோட்டோபாஸ் லிட்டருக்கு 5 மி.லி கலந்த கலவையை துளைகளில் ஊற்ற வேண்டும்.
மாவுப்பூச்சி
மீதைல் டெமட்டான் அல்லது டைமெத்தோயேட் ஒரு லிட்டர் நீருக்கு 2 மி.லி என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
கரையான்
குளோரிபைரிபாஸ் ஒரு லிட்டர் நீரில் 2 மி.லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
வேர் அழுகல் நோய்
வேர்கள் நனையும் படி காப்பர் ஆக்ஸி குளோரைடு 0.25% ஊற்ற வேண்டும். நாற்று நடுமுன் குழிகளில் 5 கிலோ மக்கிய குப்பையுடன், 25 கிராம் டிரைக்கோடெர்மா (அல்லது) சூடோமோனாஸ் கலந்து இடவேண்டும்.
பின் கருகல்
பாதிக்கப்பட்ட பகுதியை நீக்கிவிட்டு மாங்கோசெப் 0.2% அல்லது காப்பர் ஆக்ஸி குளோரைடு 0.25% தெளிக்க வேண்டும்.
அறுவடை
இம்மரத்தை 3 முதல் 5 ஆண்டுகளில் தேவைக்கேற்ப வெட்டலாம். கழிகள் மற்றும் விறகுக்கு 3 ஆண்டுகளிலும், சிறு நாற்காலிகள், மரத் தளவாடப் பொருள்கள், சிறு கருவிகள், நீண்ட கழிகளுக்கு 5 ஆண்டுகளிலும் வெட்ட வேண்டும்.
மகசூல்
மூன்று ஆண்டுகளில் 4 x 4 அடி இடைவெளியிலோ 5 x 5 இடைவெளியிலோ நடுவதன் மூலம் ஒரு எக்டருக்கு 125 முதல் 150 டன் பெறலாம். இந்த விளைச்சலை சிறந்த நீர் நிர்வாகம், உர நிர்வாகம் மூலம் மேம்படுத்தலாம்.
சவுக்கு மரம் பயன்கள்:
- வளர்ந்த மரத்திலிருந்து சிறுசிறு பர்னிச்சர்கள், விவசாய கருவிகள் செய்யலாம். கட்டுமானப் பணிகளில் சாரம் அமைக்க தாங்கு கழிகளாகவும், சிறு வீடுகளின் கூரை மற்றும் கம்பங்களுக்கும் பயன்படுகிறது.
- காகித உற்பத்தி தொழிற்சாலைகளில் மூலப்பொருளாக இதனைப் பயன்படுத்தலாம். இம்மரத்தை தோட்டங்களின் எல்லையில் காற்றுத் தடுப்பானாகவும் வளர்க்கலாம்.
- இம்மரத்தின் வேர்களில் காணப்படும் பிராங்கியா எனப்படும் பாக்டீரியா காற்றிலுள்ள நைட்ரஜனை நைட்ரேட் உப்புகளாக மாற்றி நிலத்தில் சேமிப்பதால் மண்வளம் மேம்படுகிறது.
- தூளாக்கப்பட்ட விதையிலிருந்து தயாரிக்கும் களிம்பு தலைவலியைப் போக்கும் மருந்தாக பயன்படுகிறது. இதன் கிளைகளில் உள்ள 6-18 டேனின் கம்பளிகள், பட்டுத்துணிகள் தயாரிக்கவும், மீனவர் வலைகளை உறுதிப்படுத்தவும் பயன்படுகிறது.
சவுக்கு மர நாற்று மற்றும் விதைகள் சேலம், ஆத்தூர் பகுதிகளில் எங்கு கிடைக்கும் . தகவல் வேண்டும் 9487615853
மதுராந்தகம் பகுதியில் சவுக்கு மரவிதைகள் எங்கு கிடைக்கும்.plz.
200 டன் சவுக்கு மரம் விற்பனைக்கு உள்ளது தொடர்புக்கு 8838443209
நாற்று
மதுராந்தகம் பகுதியில் சவுக்கு நாற்று எங்கு கிடைக்கும்