சாமந்தி இருவித்திலைத் தாவர வகையைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும்.
சாமந்தி ஆசியா மற்றும் வடமேற்கு ஐரோப்பாவைத் தாயகமாகக் கொண்டது.
சாமந்தி எப்படி பயிரிடுவது…?
இரகங்கள் :
கோ1(மஞ்சள் நிறப்பூ) , கோ 2(கரும்பழுப்பு நிறப்பூ) மற்றும் எம்.டி.யு 1(மஞ்சள் நிறப்பூ) ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.
பருவம்
ஜுன் – ஜுலை மாதங்கள் பயிர் செய்ய ஏற்ற பருவங்கள் ஆகும்.
மண்
நீர்த்தேக்கமுள்ள வடிகால் வசதி குறைந்த, கனமாக களிமண் சார்ந்த மண் வகைகள் சாமந்தி பயிருக்கு ஏற்றவை.
நிலம் தயாரித்தல்
தேர்வு செய்த நிலத்தை 2 அல்லது 3 முறை உழுது பண்படுத்திய பிறகு கடைசி உழவின் போது எக்டருக்கு 25 டன் நன்கு மக்கிய தொழு உரம் இட்டு மண்ணுடன் கலக்கி விடவேண்டும். நிலத்தை நன்கு சமப்படுத்திய பிறகு சுமார் ஒரு அடி இடைவெளியில் பார்கள் அமைத்துக் கொள்ள வேண்டும்.
விதையளவு
வேர்ப்பிடித்த தளிர்களை தான் நடவு செய்ய பயன்படுத்த வேண்டும். ஒரு எக்டருக்கு 1,11,000 செடிகள் தேவைப்படும்.
விதைநேர்த்தி
வேர்ப்பிடித்த தளிர்களை, எமிசான் கரைசலில் ஒரு கிராமுக்கு ஒரு லிட்டர் தண்ணீர் கலந்த கலவையில் நனைத்து நடவு செய்ய வேண்டும்.
விதைத்தல்
வேர் பிடித்த இளம் தளிர்களைப் பார்களின் ஒரு பக்கத்தில் வரிசையாக செடிக்குச் செடி 30 செ.மீ இடைவெளி இருக்குமாறு நடவு செய்ய வேண்டும். நடும்போது வேர்ப்பாகம் மடியாமல் நேராக மண்ணுக்குள் செல்லுமாறும், வேர்ப்பாகம் அனைத்தும் மறையும்படியும் நடவு செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம்
நடவு செய்யும் போது தண்ணீர் பாய்ச்சி நட வேண்டும். நட்ட மூன்று நாட்களுக்குப் பின்னர் உயிர்த் தண்ணீர் பாய்ச்சவேண்டும். பின்னர் வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும்.
சாமந்தி உரங்கள்:
நிலத்திற்கு அடியுரமாக எக்டருக்கு 25 டன் தொழு எரு கடைசி உழவின்போது இடவேண்டும். அதன் பின் செடி நடும் முன்னர் 60 கிலோ தழைச்சத்து, 120 கிலோ மணிச்சத்து, 25 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய இரசாயன உரங்களை, பார்களின் அடிப்பகுதியில் இட்டு, இலேசாகக் கிளறி மண்ணிணுள் மூடவேண்டும். மேல் உரமாக 60 கிலோ தழைச்சத்து கொடுக்கக்கூடிய இரசாயன உரத்தை நட்ட 30 நாட்கள் கழித்து இடவேண்டும்.
வளர்ச்சி ஊக்கிகள்
பூக்கள் அதிகம் பிடிக்க நட்ட 30, 45 மற்றும் 60வது நாட்களில் ஜிப்ரலிக் அமிலம் 50 பிபிஎம் கரைசலைத் தெளிக்கவேண்டும்.
சாமந்தி பாதுகாப்பு முறைகள்:
களை நிர்வாகம்
பொதுவாக களை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். செடிகள் நட்ட ஆறு வாரங்களுக்குள் நுனிக்கிளையினை ஒடித்து விட வேண்டும். அப்போது தான் பக்கக் கிளைகள் நன்றாக வளரும். நவம்பர் மாதத்தில் பூத்து ஓய்ந்துவிடும். அதன் பின்னர் டிசம்பர் மாதத்தில், செடிகளைத் தரைமட்டத்திலிருந்து வெட்டி விட்டு, களை எடுத்து, உரமிட்டு நீர் பாய்ச்ச வேண்டும்(மறு தாம்பு பயிர்).
பயிர் பாதுகாப்பு
இலைப்புள்ளி நோய்
இலைப்புள்ளி நோய்யை கட்டுப்படுத்த மேன்கோசெப் 2 கிராம் மருந்தை, ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும்.
வேர் வாடல் நோய்
வேர் வாடல் நோய் காணப்பட்டால் காப்பர் ஆக்ஸி குளோரைடு 2.5 கிராம் மருந்தை, ஒரு லிட்டர் நீரில் கரைத்து செடிகளைச் சுற்றி ஊற்றவேண்டும்.
அசுவினி தாக்குதல்
அசுவினி மற்றும் இலைப்பேன் காணப்பட்டால் மானோகுரோட்டாபாஸ் 2 மில்லி மருந்தை, ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
அறுவடை
செடி நட்ட 3 மாதங்களில் அறுவடைக்கு வந்துவிடும். பூக்களை சூரிய வெப்பத்திற்கு முன்னால் காலை வேளைகளில் பறிக்கவேண்டும்.
மகசூல்
எக்டருக்கு நடவுப்பயிரில் 20 டன் மலர்கள் கிடைக்கும். மறுதாம்புப் பயிரில் 10 டன்கள் வரை கிடைக்கும்.
சாமந்தி பயன்கள்:
- சாமந்தியானது மூளை காய்ச்சலை குணப்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தால் ஏற்படும் ஒற்றை தலைவலியை சரிசெய்யும் தன்மை இதில் உள்ளது.
- உடல் சூடானால் பல நோய்களுக்கு ஆளாக நேரிடலாம். இத்தகைய உடல் சூடு மாற செவ்வந்திப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் சூடு நீங்கும்.
- சாமந்தி இலைகளை பயன்படுத்தி தோல் அரிப்பு, சிவப்பு தன்மை மற்றும் அக்கி புண்களுக்கான மருந்து தயாரிக்க பயன்படுத்தலாம்.
- சாமந்தி எண்ணெயை படர் தாமரை, அரிப்பு ஆகியவைகளுக்கு உபயோகப்படுத்தலாம்.
- மெலிந்து இருப்பவர்கள், சோர்வாக இருப்பவர்கள் சாமந்திப் பூவின் இதழ்களை காயவைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். அடிக்கடி சோர்வு ஏற்படாது.
- சாமந்தி எண்ணெய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். ஆகவே தழும்புகள் மறைவதற்கு இந்த எண்ணெயை பயன்படுத்தலாம்.
Leave a Reply