மணம் தருவதும், செரிமான ஊக்கியாகவும் பயன்படும் சித்தரத்தை பல மருத்துவ குணங்களைக் கொண்ட மூலிகையாகும். பன்னெடும் காலமாக தென்னாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற ஒரு மூலிகையாகும். கிழக்கு ஆசிய நாடுகளில் “சீன இஞ்சி” என்று அழைக்கிறார்கள்.
தமிழ் பெயர்: சித்தரத்தை
தாவரவியல் பெயர்: Alpinia galanga
குடும்பம்: Zingeberaceae
சித்தரத்தையின் வகைகள்
சித்தரத்தையில் இரு பிரிவுகள் உள்ளன. சிறிய சித்தரத்தை மற்றும் பெரிய சித்தரத்தை (பேரரத்தை). இந்தியாவில் அதிகம் பயிரிடப்படுகிறது. இது மஞ்சள் மற்றும் இஞ்சி போன்ற கிழங்கு வகையை சேர்ந்தது மற்றும் மருத்துவத்தில் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது.
வளர்ச்சி மற்றும் தோற்றம்
சித்தரத்தை எல்லா நிலங்களிலும் வளரக்கூடியது. செம்மண் கலந்த சரளையில் நன்கு வளரும். இது ஒரு செடி வகையை சேர்ந்தது. இதன் தாயகம் தெற்கு ஆசியா, பின் மலேஷியா, லாவோஸ், தாய்லாந்து போன்ற நாடுகளுக்குப் பரவியுள்ளது.
இது இஞ்சி வகையை சார்ந்த குறுஞ்செடியாகும். சுமார் 5 அடி உயரம் வளரக்கூடியது. இதன் இலைகள் நீண்டு பச்சையாக மஞ்சள் இலைபோன்று இருக்கும். குத்தாக பக்கக்கிளைகள் விட்டு வளரும். கிழங்குகள் மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படும்.
இதன் வேர் பாகத்தில் கிழங்குகள் பரவிக்கொண்டே இருக்கும். அதனால் செடி பக்கவாட்டில் வளர்ந்து கொண்டிருக்கும். இதன் வேரில் உண்டாகும் கிழங்குதான் மருத்துவ குணம் கொண்டது. இந்தக் கிழங்கு மிகவும் கடினமாக இருக்கும். கிழங்குகள் குறுமிளகின் வாசனையுடன் இருக்கும். இதன் பழம் சிவப்பாக இருக்கும். பூக்கள் மிகவும் அழகாக இருக்கும். இதன் பக்க கிழங்குகள் மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மூலிகைகளில் சித்தரத்தையும் ஒன்றாகும்.
சித்தரத்தை மருத்துவ பயன்கள்:
சித்த ஆயுர்வேத வைத்தியர்கள் இதை கபம், வாதம், இழுப்பு, இருமல், வீக்கம், காய்ச்சல் போன்றவற்றிற்கு பயன்படுத்துவார்கள் என்றாலும் நெஞ்சிலுள்ள கபத்தை வெளியேற்றுவதில் அதிக திறன் மிக்கது.
சித்தரத்தைகிழங்கை பச்சையாக எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி காயவைத்து பக்குவப் படுத்தி வைப்பார்கள். இது ஒரு வலி நிவாரணி, சளியைக் குணப்படுத்தும், இருமலைக் குணப்படுத்தும். மூட்டு வாத வீக்கம் குணப்படுத்தும். வயிற்றுப் புண் எனப்படும் அல்சரைக் குணப்படுத்தும். தொண்டைப் புண்ணையை குணப்படுத்தும்.
நுரையீரல் நுண்குழாய்களை விரிவடையச் செய்து மூச்சு எளிதாக வரச் செய்யுவதுடன் இக்குழாய்களிலும், மூச்சுக்குழல் மற்றும் தொண்டையிலும் உள்ள சளியை வெளியேற்றுகிறது.
ஒரு காலத்தில் தென்னகம் எங்கும் எல்லா வீட்டு மருந்துப் பெட்டிகளிலும் சித்தரத்தை இடம் பெற்றிருந்தது. கபம், சளி போன்றவை மட்டுமின்றி எல்லாவிதமான மூச்சுக்குழல் தொடர்புடைய நோய்களுக்கும் இது சிறந்த மருந்தாகும். கக்குவான் இருமல் உள்ள குழந்தைகளுக்கு சித்தரத்தை அரைத்து தேனில் குழைத்து கொடுக்க இருமலும் இயல்பாக குறையும்.
சித்தரத்தை ஒரு சிறந்த மணமூட்டியாக இருப்பதால், இதை வாயிலிட்டுச் சுவைக்க வாய் நாற்றம் மறையும். இதன் நறுமணம் காரணமாக இதை பல வகை ஆயுர்வேத மருந்துகளில் சேர்ப்பதுண்டு.
ஆஸ்த்மா பாதிப்பால் ஏற்படும் இழுப்பு, இருமல் மற்றும் மூச்சிரைப்பு உள்ளவர்கள் சித்தரத்தை, அதிமதுரம், தாளிசபத்திரி, திப்பிலி மற்றும் மிளகு ஆகிய மூலிகைகளை இலேசாக வறுத்து அரைத்து பொடியாக்கி வைத்துக் கொண்டு, தினமும் இதில் சிறிதளவு எடுத்து, தேனில் குழைத்து சாப்பிட்டுவர பாதிப்புகள் விரைவில் நீங்கிவிடும். மேலும் சளி தொல்லையும் நீங்கி விடும்.
இடுப்பில் தண்டுவட எலும்புக்கள் முடியுமிடத்தில், சிலருக்கு கடும் வலி தோன்றி, இயல்பான பணிகளை மேற்கொள்ள முடியாமல் சிரமப்படுவர். அவர்கள், அம்மியில் இஞ்சியின் சாற்றை சிலதுளிகள் விட்டு, சிறு துண்டுகளாக வெட்டி உலர்ந்த சித்தரத்தை அதில் வைத்து தேய்த்து சிறிது இஞ்சி சாற்றை மறுபடியும் கலந்து தண்ணீர் சிறிது கலந்து கொதிக்க வைத்து அந்த கலவையை இளஞ்சுட்டில் இடுப்பில் வலி உள்ள பகுதியில் தடவி வர, விரைவில் இடுப்பு வலி விலகிவிடும்.
முதுமையின் பாதிப்பால், உடலில் வியாதிகள் ஏற்பட்டு எதிர்ப்பு சக்தி குறைந்து, கை கால் மூட்டுகளில், எழும்புகளின் இணைப்பில் வலிகள் தோன்றும், இதனால் வயது முதிர்ந்தவர்கள், உட்கார நடக்க முடியாமல் சிரமப்படுவர். இந்த பாதிப்பு நீங்க, நன்கு உலர்ந்த சித்தரத்தை மற்றும் அமுக்கிரா கிழங்கை எடுத்து இடித்து தூளாக்கிக்கொண்டு, இந்தப் பொடியை சிறிதளவு தேனில் குழைத்து தினமும் இருவேளை என ஒரு மண்டலம் என்ற கால அளவில் சாப்பிட்டு வர வெகுநாட்கள் துன்பம் தந்த வலிகள் எல்லாம் குணமாகும். எலும்புகளின் ஆற்றல் அதிகரிக்கும். உடலுக்கு சக்தியை அதிகரிக்கும்.
இருமல் ஏற்படும் போது சிறு துண்டு சித்தரத்தையை வாயில் இட்டு மென்மையாக சுவைக்கவேண்டும். காரமும், விறுவிறுப்பும் கலந்த தன்மை அப்போது தோன்றும். இருமல் நின்றுவிடும். உடல் சூடு காரணமாகவும் இருமல் தோன்றும். அப்போது சித்தரத்தையுடன், பனங்கற்கண்டு சிறிது கலந்து சுவைக்கவேண்டும். இது இருமலை போக்கும் சிறந்த மருந்து.
குழந்தைகளின் மாந்தம் எனும் பால் செரியாமை, இளைப்பு சளி போன்ற பாதிப்புகள் விலக. உலர்ந்த சித்தரத்தை துண்டை விளக்கெண்ணெயில் தோய்த்து நெருப்பில் இட்டு கரியாக்கி, அதை தேனில் தேய்க்க உண்டாகும் தேன் கலந்த தூளை, கைகுழந்தைகளுக்கு நாக்கில் தடவ, விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
சிலருக்கு வாகனங்களில் பயணம் செய்யும்போது, வாந்தி ஏற்படும். அந்த தொந்தரவு இருப்பவர்கள் பயணம் செய்யும்போது சிறு துண்டு சித்தரத்தையை வாயில் இட்டு சுவைத்துக் கொண்டிருந்தால் வாந்தி வராது. வயிற்றை புரட்டுவது போன்ற அவஸ்தைகளும் ஏற்படாது.
சித்தரத்தை சிறந்த மணமூட்டி, சிறு துண்டை வாயில் இட்டு சுவைத்தால், வாய் நாற்றம் நீங்கும், ஈறுகளில் உள்ள நோய்த்தொற்றும் குணமாகும். நோய்கள் வரும்போது சித்த மருத்துவர்களின் ஆலோசனை பெற்று மேற்கண்ட மருத்துவ முறைகளை பின்பற்றவும். ஏனெனில் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதான்.
வளர்ப்பு மற்றும் பராமரிப்பு
இந்த மூலிகை வீட்டின் பின்புறம் அல்லது நிழல் பகுதியில் வளர்க்கலாம். தோட்டங்களில் வளர்ப்பதற்கு ஏற்ற மூலிகையாகும்.
Leave a Reply