சுரைக்காய் உணவாகப் பயன்படும் ஒரு வெப்பமண்டல கொடிவகை தாவரமாகும்.
சுரைக்காயின் தாயகம், ஆப்பிரிக்கா என்று கூறப்படுகிறது.
உலகில் மனிதனால் பயிரிடப்பட்ட முதல் தாவரங்களுள் சுரைக்காயும் ஒன்று.
தொடக்கத்தில் இது உணவுக்காகப் பயிரிடப்படவில்லை. இதன் காய்கள் நீர்கலன்களாகப் பயன்பட்டன.
தற்காலத்தில் இது உலகெங்கும் உணவாகப் பயன்படுகிறது.
சுரைக்காய் எப்படி பயிரிடுவது…?
இரகங்கள்
கோ.1, பூசா சம்மர் பிராலிபிக் லாங், பூசா சம்மர் பிராலிபிக் ரவுண்ட், பூசா நவீன், பூசா சந்தேஷ், பூசா மஞ்சரி போன்ற இரகங்கள் உள்ளன.
பருவம்
ஜூன் – ஜூலை, டிசம்பர் – ஜனவரி மாதங்கள் பயிரிட ஏற்ற மாதங்கள் ஆகும்.
மண்
நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண்ணில் சாகுபடி செய்யலாம். சுரைக்காய் வளர்ச்சிக்கு மண்ணின் கார அமிலத் தன்மை 6.5 முதல் 7.5 இருப்பது சாகுபடிக்கு நல்லது.
நிலம் தயாரித்தல்
நிலத்தை 3 முதல் 4 முறை நன்றாக உழுது கடைசி உழவின்போது எக்டருக்கு 20 முதல் 25 டன் மக்கிய தொழு உரம் இட வேண்டும்.
பின்னர் 2.5 மீட்டர் இடைவெளியில் 30x30x30 செ.மீ நீளம், அகலம், ஆழம் என்ற அளவில் குழிகள் எடுக்கவேண்டும். பின்பு ஒவ்வொரு குழியிலும் 50 கிராம் கலப்பு உரமிட்டு மேல் மண்ணுடன் கலந்து குழிகளை நிரப்ப வேண்டும்.
விதையளவு
ஒரு எக்டருக்கு 3 முதல் 4 கிலோ அளவுள்ள விதைகள் தேவைப்படும்.
விதைத்தல்
நடவுக்கு தயார் செய்துள்ள குழிகளில் குழிக்கு 5 விதைகள் வீதம் ஊன்ற வேண்டும்.
நீர் நிர்வாகம்
சுரைக்காய்க்கு வாரம் ஒரு முறை நீர்ப் பாய்ச்ச வேண்டும். விதை முளைப்புக்கு முன் குடம் வைத்து அல்லது பூவாளி மூலம் தண்ணீர் ஊற்றவேண்டும்.
வளர்ந்த பின் வாய்க்கால் மூலம் தண்ணீர் பாய்ச்சலாம்.
உரங்கள்
களை எடுத்த பின் ஒரு எக்டருக்கு 20 கிலோ தழைசத்தை மேலுரமாக இட்டு மண் அணைத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
கொடிகள் நிலத்தில் படருவதால் மழைக்காலங்களில் பாதிப்பு இல்லாமல் இருக்க சின்ன குச்சிகளை ஊன்று கோலாக பயன்படுத்தி நிலத்தில் படாமல் பாதுகாக்கலாம். இதன் மூலம் அழுகல் நோய் வராமல் தடுக்கலாம்.
சுரைக்காய் பாதுகாப்பு முறைகள்:
களை நிர்வாகம்
விதை ஊன்றிய 20 முதல் 30 தினங்கள் கழித்து களை எடுக்க வேண்டும்.
புழுக்கள்
வண்டுகள், பழஈக்கள் மற்றும் புழுக்களைக் கட்டுப்படுத்த மாலத்தியான் 50 இசி ஒரு மில்லி அல்லது மீதைல் டெமட்டான் 25 இசி ஒரு மில்லி அல்லது பென்தியான் 100 இசி ஒரு மில்லி போன்ற மருந்துகளில் ஏதேனும் ஒன்றுடன் ஒரு லிட்டர் நீர் கலந்து தெளிக்கவேண்டும்.
சாம்பல் நோய்
சாம்பல் நோயை கட்டுப்படுத்த ஒரு எக்டருக்கு டைனோகாப் 500 மில்லி அல்லது கார்பென்டைசெம் 500 கிராம் மருந்தைத் தெளிக்கவேண்டும்.
அடிச்சாம்பல் நோய்
அடிச்சாம்பல் நோயை கட்டுப்படுத்த மேன்கோசெப் அல்லது குளோரோதலானில் மருந்தை 1 எக்டருக்கு 1 கிலோ என்ற அளவில் 10 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிப்பதால் அடிச்சாம்பல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.
அறுவடை
சுரைக்காய் முற்றுவதற்கு முன்பாகவே அறுவடை செய்து விட வேண்டும். விதை ஊன்றி 70 நாட்களில் முதல் அறுவடை செய்யலாம்.
மகசூல்
இந்த வழிமுறைகளில் சாகுபடி செய்தால் ஒரு எக்டருக்கு 20 முதல் 35 டன் வரை அறுவடை செய்யலாம்.
சுரைக்காய் பயன்கள்:
- சுரைக்காய் உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை தரும் தன்மை கொண்டது. இதனால் கோடைக் காலத்தில் சுரைக்காயை அதிகளவில் பயன்படுத்துவது வழக்கம்.
- சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்தாக செயல்படுகிறது.
- சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலைப்படும்.
- பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும், இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
- குடல் புண்ணை ஆற்றும். மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்தாகும்.
- சுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும்.
Leave a Reply