தானியக்கீரை அமெரிக்காவை தாயகமாகக் கொண்டது.
பின்னர் ஆசியாவில் முக்கியமாக இந்தியாவில் முதல் முதன்முதலாக இமயமலையில் உயரமான மற்றும் தாழ்வான பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இது வெப்பத்தை தாங்கி, வளரும் இயல்பை உடையது.
எப்படி பயிரிடுவது…?
இரகங்கள்
அன்னபூர்ணா, சுவர்ணா, GA1 மற்றும் GA2 ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.
பருவம்
சித்திரை, ஆடி, மார்கழி, மாசிப்பட்டம் சாகுபடி செய்ய ஏற்ற பருவம் ஆகும். தானியக்கீரை வெப்ப மண்டலத்திலும் குளிர் மண்டலத்திலும் பயிரிட ஏற்றது.
மண்
நல்ல மண்ணும், மணலும் கலந்த சற்றே அமிலத்தன்மை கொண்ட இருமண் பாட்டு நிலம், செம்மண் நிலம் கீரை சாகுபடிக்கு உகந்தது.
விதையளவு
ஒரு எக்டருக்கு சாகுபடி செய்ய 2.5 கிலோ விதைகள் வீதம் தேவைப்படும்.
நிலம் தயாரித்தல்
நிலத்தை 2 அல்லது 3 முறை உழவு செய்ய வேண்டும். ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் கலந்து பரவலாகக் கொட்டி உழவு செய்து மண்ணை பண்படுத்த வேண்டும். பிறகு தேவையான அளவு பாத்திகள் அமைக்க வேண்டும்.
விதைத்தல்
விதைகள் சிறியவையாக இருப்பதால் சீராக விதைக்க விதையுடன் 2 கிலோ மணல் கலந்து பாத்திகளில் நேரடியாகத் தூவவேண்டும். பின் விதைகளின் மேல் மண் அல்லது மணலை மெல்லிய போர்வை போல் தூவி மூடிவிடவேண்டும்.
நீர் நிர்வாகம்
விதைகளை விதைத்தவுடன் நீர்ப்பாய்ச்ச வேண்டும். விதைத்த மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின் நான்கு நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.
உரங்கள்
ஜீவாமிர்தக் கரைசலை மாதம் இரண்டு முறை பாசன நீரில் கலந்து விடவேண்டும். இதனால் கீரைகளின் வளர்ச்சி சீராக இருக்கும்.
எக்டருக்கு அடியுரமாக தழைச்சத்து 75 கிலோ, மணிச்சத்து 50 கிலோ, சாம்பல் சத்து 25 கிலோ கொடுக்கக்கூடிய உரங்களை அளிக்கவேண்டும்.
பாதுகாப்பு முறைகள்
களை நிர்வாகம்
ஒரு வாரத்தில் விதைகள் முளைக்க ஆரம்பிக்கும். 10 -15 நாட்கள் கழித்து களை எடுக்க வேண்டும். பிறகு 12-15 செ.மீ இடைவெளியில் செடிகளை கலைத்து விடவும்.
பயிர் பாதுகாப்பு
பூச்சி தாக்குதல்
பூச்சிகளின் தாக்குதல் காணப்பட்டால் அதனை சமாளிக்க நொச்சி, பிரண்டை, சோற்றுக்கற்றாழை ஆகிய மூன்றையும் சமமாக எடுத்து அரைத்து, ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீரில் கலந்து ஒரு நாள் வைத்திருக்க வேண்டும். பின் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி கரைசல் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
இலை கடிக்கும் புழுக்கள்
இலை கடிக்கும் புழுக்களை கட்டுப்படுத்த கார்பரில் நனையும் தூள் 2 கிராமை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும்.
வேர் அழுகல்
1 கிலோவிற்கு 2 கிராம் என்ற அளவில் பெவஸ்டின் என்ற பூஞ்சாணக் கொல்லியை கலந்த விதைப்பதால் வேர் அழுகல் நோயிலிருந்து காப்பாற்றலாம்.
அறுவடை
விதைத்த 25 நாட்களில் பசுங்கீரை அறுவடை செய்யலாம். தானியமாக அறுவடை செய்வதற்கு 90-100 நாட்களில் அறுவடை செய்ய வேண்டும்.
பயன்கள்
- இதன் விதைகளில் ஆல்புமின், குளோபுலின், புரோலமைகள், ஐசோலுசைகள் மற்றும் லைசின் போன்ற அமிலங்கள் இருப்பதால் இத்தானியத்தின் மாவினை குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவாகக் கொடுக்கலாம்.
- இக்கீரையில் வைட்டமின் ஏ மற்றும் புரோட்டின் அதிகமாக உள்ளது.
- தானியக்கீரையில் 60 சதம் கார்போஹைட்ரேட் இருப்பதால் மருந்து தயாரிக்கப்படும் தொழிற்சாலைகளில் மிகவும் பயன்படுகிறது.
- இதன் தண்டு பசுமையாக இருக்கும் போது உணவாகவும் மற்றும் காய்ந்த பின் எரிபொருளாகவும் பயன்படுகிறது. கால்நடைத் தீவனமாக பசுமையான தண்டைப் பயன்படுத்தலாம்.
Leave a Reply