- தேக்கு மரம் தென்னாசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உரியது.
- தேக்கு உயரமாக வளர்வதுடன் மிகவும் உறுதியானதுமாகும்.
- உலகில் மதிப்பு வாய்ந்த மர இனங்களில் தேக்கு மரமும் ஒன்றாகும்.
- இம்மரம் தமிழகம், மத்திய பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம், கேரளா மற்றும் மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் வறண்ட பகுதிகளில் வளர்கிறது.
தேக்கு மரம் எப்படி பயிரிடுவது…?
இரகங்கள் :
தேக்கு மரம் சாகுபடி – டெக்டோனா கிராண்டிஸ், டெக்டோனா ஹமில்டோனியா, டெக்டோனா பிலிப்பினென்சிஸ் ஆகிய இரகங்கள் உள்ளன.
பருவம்
வெயில் காலத்தைத் தவிர மற்ற மாதங்களில் கன்று நடலாம். கார்த்திகை மாதம் சிறப்பானது.
மண்
இம்மரம் நல்ல வடிகால் வசதியுள்ள ஆற்று வண்டல், மணல் கலந்த நிலங்கள், செம்மண் நிலங்கள், செம்புறை மண் நிலங்கள் மற்றும் மணல் கலந்த களி நிலங்களிலும் நன்கு வளரும்.
காய்க்கும் பருவம்
தேக்கு நட்ட ஆறு ஆண்டுகளில் பூக்க தொடங்கினாலும் நன்கு பூக்க 15 ஆண்டுகள் தேவைப்படுகிறது. ஜுன்-செப்டம்பர் மாதங்களில் பூக்கத்தொடங்கி மார்ச்-ஏப்ரல் மாதங்களில் விதைகள் முற்றி கீழே விழ ஆரம்பிக்கும். 20 வயதுடைய மரத்திலிருந்து சராசரியாக ஒரு மரத்திற்கு 10 கிலோ தேக்கு விதைகள் கிடைக்கும். ஒரு கிலோவிற்கு சராசரியாக 1300 விதைகள் இருக்கும்.
விதை சேமிப்பு
நாற்று உற்பத்திக்கு, தேக்கு விதைகளை 15 ஆண்டுகளுக்கு மேல் உள்ள மரங்களிலிருந்து சேகரிக்க வேண்டும். மேலும் பக்க கிளைகள் அதிகம் இல்லாத நேராக, உயரமாக வளர்ந்த, நோய் தாக்காத மற்றும் நல்ல பருமனமான தேக்கு மரங்களிலிருந்து விதைகளை தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு விதைகளை சேகரித்து தோட்டம் உற்பத்தி செய்தால், நல்ல தரமான மரங்கள் கிடைக்கும்.
விதை நேர்த்தி
தேக்கு மர விதைகளை விதை நேர்த்தி செய்வது அவசியமாகும். ஏனெனில் விதையின் உறக்க நிலை காரணமாக முளைப்புதிறன் குறைவாக இருக்கும். இந்த விதை உறக்க நிலையை நீக்க விதைகளை சாக்குப்பைகளில் நிரப்பி நன்றாக கட்டி சாணப்பாலில் இரண்டு நாட்கள் ஊற வைக்க வேண்டும். பின்னர் சாணப்பாலிலிருந்து வெளியே எடுத்து இளம் வெயிலில் 12 மணி நேரம் உலர்த்த வேண்டும். மீண்டும் விதைகளை சாணப்பாலில் ஒரு நாள் ஊற வைக்க வேண்டும். பின்னர் சாணப்பாலிலிருந்து வெளியே எடுத்து இளம் வெயிலில் 12 மணி நேரம் உலர்த்த வேண்டும். மீண்டும் விதைகளை சாணப்பாலில் ஒரு நாள் ஊற வைக்க வேண்டும். இவ்வாறு சுமார் ஒரு வாரம் விதை நேர்த்தி செய்வதன் மூலம் விதைகளின் முளைப்புத்திறன் அதிகரிக்கும். இவ்வாறு விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை தாய்பாத்தியில் விதைக்க வேண்டும்.
நாற்றுகள் தயாரித்தல்
தேக்கு நாற்றுகளை பாலித்தீன் பைகளில் உற்பத்தி செய்தும், தேக்கு நாற்றுக்குச்சிகள் மூலமும் தோட்டம் அமைக்கலாம். தேக்கு நாற்றுக்குச்சிகளை தயாரிக்கத் தேவையான தாய்பாத்தி 10மீX1மீX0.3மீ அளவுள்ள மேட்டுப்பாத்தியாக அமைக்க வேண்டும். இதற்கு 50 சதவீதம் மணலும், 25 சதவீதம் செம்மண்ணும், 25 சதவீதம் வண்டல் மண்ணும் நன்றாக கலந்து அமைக்க வேண்டும்.
தாய்பாத்தியின் மேல் சுமார் ஒரு அங்குல கனத்தில் குறு மணலை பரப்ப வேண்டும். இந்த மணலில் தொழுஉரமோ, சாண எருவோ கலக்க கூடாது. அவ்வாறு கலந்தால் வேர்புழுக்கள் தோன்றி நாற்றுக்கள் சேதமாகும். பூச்சிக்கொல்லிகளை குறிப்பாக சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் உயிர் பூச்சிக்கொல்லியான மைக்கார் (Mycar formites) அல்லது வேம்பு பாலை தாய்பாத்தியில் தெளித்து பூச்சிகள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்தியில் 8 கிலோ என்ற அளவில் தேக்கு விதைகளை விதைக்க வேண்டும். தேக்கு விதைகளுக்கு இடையே 2 செ.மீ இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். விதைகள் விதைத்த பின்பு தேக்கு விதை கனத்திற்கு குறுமணலை விதைகள் மேல் ஒரே சீராக பரப்ப வேண்டும். அதன்மேல் வைக்கோல் அல்லது தென்னங்கீற்றை பரப்பி மூடி விட வேண்டும். தினமும் காலை மாலை இருமுறை பூவாளி மூலம் தாய்பாத்திக்கு 15 நாட்களுக்கு நீர் ஊற்ற வேண்டும். பின்பு தினமும் ஒரு முறை வீதம் 30 நாட்களுக்கு நீர் ஊற்ற வேண்டும். விதைகள் சுமார் 10 நாட்களிலிருந்து 15 நாட்களில் முளைக்க தொடங்கி 30-35 நாட்கள் வரை முளைத்து கொண்டிருக்கும். இந்நிலையில் வைக்கோல் மற்றும் தென்னங்கீற்றுகளை அகற்றி விட வேண்டும்.
தாய்பாத்தியில் மூன்று மாதத்திற்கு பின்பு பஞ்சகாவ்யா கரைசலை ஒரு லிட்டர் நீரில் 30 மில்லி லிட்டர் என்ற அளவில் கலந்து மாதத்திற்கு ஒரு முறை கைத்தொளிப்பான் மூலம் தெளிப்பதால் நாற்றங்கால் நன்கு வளர்ச்சியடையும். மேலும் நாற்றுகள் பூச்சிகளால் தாக்கப்படாமலிருக்க பஞ்சகாவ்யா கரைசலை ஒரு லிட்டர் நீரில் 30 மில்லிலிட்டர் என்ற அளவில் கலந்து கை தெளிப்பான் மூலம் 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும்.
நடவு செய்தல்:
தேக்கு நடவு செய்யப்படும் இடத்தை நன்றாக சுத்தம் செய்து களைகளை அப்புறப்படுத்தி விட வேண்டும். சம பகுதியாக இருப்பின் நடவு செய்ய வேண்டிய இடத்தை உழுது விடவேண்டும். பின்னர் 1 ஏக்கருக்கு 2மீX2மீ இடைவெளியில் 45X45X45 செ.மீ அளவுள்ள 1000 குழிகள் எடுக்க வேண்டும். குழிகள் நன்கு காய்ந்த பின் மக்கிய 2 கிலோ தொழு உரத்துடன் வண்டல் மண் மற்றும் செம்மண் சமமாக கலந்து குழியில் 95 சதவீதம் நிரப்ப வேண்டு்ம்.
மழைக்காலம் ஆரம்பித்தும் குழிகளில் உள்ள எருக்கலவை நன்கு ஈரமாகும். இந்நிலையில் கடப்பாரையால் குழியின் மையப் பகுதியில் துவாரம் இட்டு அவைகளில் தேக்கு நாற்றுக்குச்சிகளை நட்டு குச்சி சேதமடையாமல் மேல் மண்ணை கொண்டு அணைத்து காற்று புகாமல் இறுக்கமாக கைகளால் கெட்டிப்படுத்த வேண்டும். அதே சமயம் நாற்றுக்குச்சிகளின் கழுத்துப் பகுதியும் குழியின் மேல்மட்டமும் தரை மட்டத்திற்கு இருக்குமாறும், குச்சியின் மேல் பகுதி 2 செ.மீ அளவிற்கு தரை மட்டத்திற்கு மேலே இருக்குமாறும் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் குச்சியின் மேல் பகுதியில் மண் கொண்டு மூடிவிட்டால் துளிர்வருவது தடைப்படும்.
நீர் நிர்வாகம்
நாற்றுக் குச்சிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் வீதம் 15 நாட்களுக்கு போதுமான அளவு நீர் விடவேண்டும். பின்னர் வாரத்திற்கு இருமுறை வீதம் மூன்று மாதம் நீர் விடவேண்டும். மழை பெய்தால் நீர்விடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.
தேக்கு மரம் உரங்கள்:
தேக்கு மரங்களுக்கு உரம் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனுடைய இலைகளே கீழே உதிர்ந்து, மண்ணோடு மக்கி, உரமாக மாறிவிடும். மண்ணின் ஈரப்பதத்தையும், தேக்கு இலைகளே பல நாட்களுக்குப் பாதுகாக்கும்.
தேக்கு மரம் பாதுகாப்பு முறைகள்
களை நிர்வாகம்
இவ்வாறு நடப்பட்ட நாற்றுக்குச்சிகள் ஏழு நாட்கள் முதல் 15 நாட்களுக்குள் துளிர்விட ஆரம்பிக்கும். நாற்றுக்குச்சிகள் ஒன்றுக்கு மேல் துளிர்கள் வருமாயின் திடமான ஒரு துளிரை மட்டும் விட்டுவிட்டு மற்றவைகளை நடவு செய்த இரண்டு மாதம் கழித்து அகற்றிவிடவேண்டும். பின்னர் ஆறு மாதத்திற்கு ஒரு முறை செடியை சுற்றி 15 செ.மீ ஆழம்வரை கொத்தி களை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தேக்கு மரக்கன்றுகள் நன்கு வளர்ச்சியடையும்.
வரப்பு நடவு
விவசாய நிலத்தில் வரப்புபகுதியில் 2மீX2மீ இடைவெளியில் தேக்கு குச்சி நாற்றுகள் அல்லது பை நாற்றுக்களை வரப்பு நடவு செய்யலாம். மேலும் பராமரிப்பு பணியும் மேற்கூறியவாறு மேற்கொள்ள வேண்டும். வரப்பு நடவுமுறைப்படி நடப்பட்ட தேக்கு மரக்கன்றுகள் தோப்பு முறைப்படி நடப்பட்ட மரக்கன்றுகளை விட நன்கு வளரும். ஏனெனில் தேக்கு மரக்கன்றுகளுக்கு போதுமான அளவு சூரிய ஒளியும், நல்ல காற்றோட்டம் மற்றும் சத்துக்களும் கிடைக்கும்.
பக்ககிளைகளை அகற்றுதல்
தேக்கு மரங்கள் நல்ல தரமானதாகவும், பருமனாகவும், நேராகவும், பக்ககிளைகள் இல்லாததாகவும் வளர்ந்தால் தான் அதிக வருவாய் கிடைக்கும். ஆகவே பக்க கிளைகளை மரத்திற்கு சேதாரம் இல்லாமல் கழித்து விடவேண்டும். இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் ஜீலை அல்லது ஆகஸ்டு மாதத்தில் பக்ககிளைகளை வெட்டி அகற்றிவிட வேண்டும்.
பயிர் பாதுகாப்பு
பூச்சிகள்
நாற்றங்காலிலுள்ள தேக்கு மர நாற்றுகளை இலையுண்ணிகளான கம்பளி புழுக்கள், பைப்புழுக்கள், வண்டுகள், வெட்டுக்கிளிகள் மற்றும் இலை சுரண்டிகளான சிறிய இளஞ்சிவப்பு புழுக்கள் ஆகியவை தேக்கு தளிர்களையும் இலைகளையும் உண்ணும். மேலும் சாறு உறிஞ்சிகளான அசுவினி, தத்துப்பூச்சி, மாவுப்பூச்சி மற்றும் செதில் பூச்சிகள் இலைகளில் உள்ள சாறுகளை உறிஞ்சும். இதனால் செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்படும்.
மேலும் இப்பூச்சிகளை கட்டுப்படுத்த உயிர்பூச்சிக் கொல்லிகளான பஞ்சகாவ்யா அல்லது வேம்புபால் அல்லது புகையிலை வேம்பு சோப்பு கரைசலை 1 லிட்டருக்கு 30 மி.லி வீதம் 15 நாட்களுக்கு ஒரு முறை விசை தெளிப்பான் மூலம் தெளித்து பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
அறுவடை
தேக்கு மரங்கள் வளர்ந்து வரும் நிலையில் நட்ட 5ம் ஆண்டில் இடை வரிசைகளில் உள்ள மரங்களை நீக்கி மீதி மரங்கள் நல்ல பருமனாகி வளர வழி செய்ய வேண்டும். அதாவது முதல் 5வது ஆண்டில் கலைத்தல் செய்யும் போது மூலைவிட்ட வரிசையில் ஒரு வரிசை விட்டு ஒருவரிசையில் உள்ள எல்லா மரங்களையும் வெட்டி எடுத்துவிட வேண்டும். உதாரணமாக 2மீX2மீ இடைவெளியில் தேக்கு மரக்கன்றுகளை நடும்பொழுது ஏக்கருக்கு 1000 மரங்கள் இருக்கும். இதில் 500 மரங்கள் வெட்டி எடுக்க வேண்டும்.
அடுத்த 12ம் ஆண்டில் நடவு வரிசையில் ஒரு வரிசை விட்டு ஒரு வரிசையில் உள்ள எல்லா மரங்களையும் வெட்டி எடுத்து விட வேண்டும். இப்பொழுது ஏக்கருக்கு 250 மரங்கள் மீதம் இருக்கும். மேற்படி மரங்களை நன்கு பராமரித்து வளர்த்தால் சுமார் 30 ஆண்டுகளில் நல்ல மகசூல் கிடைக்கும். 30ம் ஆண்டில் 1 ஏக்கரில் 250 தேக்கு மரங்கள் வளர்ந்திருக்கும்.
ஊடுபயிர்
தேக்கு மரத்தோட்டத்தில் வேளாண் பயிர்களான மஞ்சள், உளுந்து, தட்டைபயிறு போன்றவைகளை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். தென்னை மற்றும் வாழை போன்றவைகளையும் ஊடுபயிராக பயிரிடலாம்.
தேக்கு மரம் பயன்கள்:
- தேக்கு மரத்தின் இலைகளால் செய்யப்பட்ட தேநீரை குடிப்பதன் மூலம் ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை உண்டாகிறது. மூக்கில் வடியும் ரத்தம், மூலத்தில் ஏற்படும் ரத்த கசிவை கட்டுப்படுத்துவதற்கும் இது சிறந்த நிவாரணியாக விளங்குகிறது.
- நுண் கிருமிகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாகவும் இதன் விதைகள் பயன்படுகிறது.
- சிறுநீரகப் பிரச்சினை, மார்புச்சளி, கல்லீரல் பிரச்சினை போன்றவற்றிற்கு தீர்வு தருகிறது.
- தேக்கு மரம் ஒரு உயர்தர மரமாக இருப்பதால் அதன் பயன்பாடு மிகவும் அதிகம். மரச்சாமான்கள் செய்தல், சன்னல், கதவுகள் செய்தல், கட்டில்கள் செய்தல், கப்பல் கட்டுமானம் மற்றும் அனைத்து கட்டுமான பணிகளுக்கும் தேக்கு மரம் பயன்படுகிறது.
மதிப்புக்குரிய நண்ரே…
தங்களின் கட்டுரையை வாசித்தேன் மிகவும் பயனுடையதாக இருக்கிறது.
நாற்று உற்பத்தி தாெ டர்பாக தாங்கள் குறிப்பிட்டுள்ள “சாணப்பால்” என்றால் என்ன? அதனை எவ்வாறு தயார்செய்வது பாே ன் ற விளக்கத்தை தங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறே ன்.
நன்றி
தேக்குமரத்தின் வேர்கள் பக்க வேர்களா ஆணி வேர்களா தெரியபடுத்தவும் நன்றி…
இது நம்முடைய குழு. இங்கு உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்
https://www.facebook.com/groups/agriculturetripiyarkaivivasayam
தேக்குமரத்தில் ஊடுபயிராக நல்லமிளகை பயிரிடலாமா?????
5ம் ,12ம் ஆண்டுகளில் அகற்றப்படும் தேக்கம் கண்டுகளினால் பயன்பாடுகள் ஏதாவது உள்ளதா ????
அத்த தேக்கம் கண்டுகளை மீள பயிரிட முடியுமா ?