வேர்க்கடலை, கச்சான் என்று பொதுவாய் அழைக்கப்படும் நிலக்கடலை, மக்களால் விரும்பி உண்ணப்படும் கொட்டைகளைத் தரும் பருப்பு வகை தாவரமாகும்.
தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட இந்த தாவரம் இன்று உலக நாடுகள் அனைத்திலும், உண்ணும் உணவில் ஒரு முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் தென் ஆற்காட்டில் இந்த பயிர் அதிகம் விளைவிக்கப்பட்டதால் அது கிழக்கு கடற்கரை வழியாய் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து இந்தியா வந்ததாக கருதப்படுகிறது.
இன்று உலக அளவில் வேர்க்கடலை உற்பத்தியில் முன்னனி நாடாக இந்தியா உள்ளது. ஏறத்தாழ எட்டு மில்லியன் ஹெக்டேர்களில் கடலை சாகுபடி செய்யப்படுகிறது.
முக்கியமாக ஆந்திரம், தமிழகம், குஜராத், கர்நாடகம், மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் கடலை சாகுபடி அதிகமாக உள்ளது.
எப்படி பயிரிடுவது…?
இரகங்கள் :
டி.எம்.வி 7, டி.எம்.வி 10, கோ.3, கோ.ஜி.என் 4, கோ.ஜி.என் 5, ஏ.எல்.ஆர் 3, வி.ஆர்.ஐ2, வி.ஆர்.ஐ3, வி.ஆர்.ஐ.ஜி.என் 5, வி.ஆர்.ஐ 6 ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.
பருவம்
நிலக்கடலை விதைப்புக்குச் சிறந்த பருவம் ஜுன் – ஜுலை மற்றும் டிசம்பர் – ஜனவரி மாதங்களே ஆகும்.
மண்
மணற்பாங்கான வண்டல், செம்மண் நிலங்கள் நிலக்கடலை சாகுபடிக்கு ஏற்றவை.
நிலம் தயாரித்தல்
கோடை காலத்தில் நிலத்தை நன்றாக குறுக்கு உழவு செய்து, அதிலுள்ள களைகளை நீக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் கோடை மழையில் மண்ணில் மழை நீர் சேமிக்கப்படுகிறது அல்லது கோடை மழையில் சணப்பை போன்ற பயிர்களை விதைத்து பூக்கும் தருணத்தில் அதை மடக்கி உழுதும் நிலத்தைத் தயார் செய்து வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் பருவமழை வந்தவுடன் விதைப்புக்கருவி கொண்டு விதைப்பதற்கு ஏதுவாக இருக்கும்.
செம்மண் நிலங்களைப் பொறுத்தவரையில் மேல்மண் இறுக்கம் கடலை மகசூலை மிகவும் பாதிக்கிறது.
மேல் மண் இறுக்கத்தை நிவர்த்தி செய்ய எக்டருக்கு 2 டன் சுண்ணாம்பு மற்றும் 12.5 டன் தொழு உரம் அல்லது மக்கிய தென்னை நார்க்கழிவு கடைசி உழவின் போது இட வேண்டும். மேலும் அடிமண் கடின அடுக்கை உடைக்க 3 வருடத்திற்கு ஒருமுறை உளிக்கலப்பை கொண்டு உழ வேண்டும்.
விதையளவு
எக்டருக்கு 125 கிலோ விதையினைப் பயன்படுத்தவேண்டும். பெரிய விதை கொண்ட இரகங்களுக்கு விதை அளவில் 15 சதவிகிதம் கூடுதலாக தேவைப்படும்.
விதைநேர்த்தி
ஒரு கிலோ விதைக்கு சூடோமோனாஸ் 10 கிராம் அல்லது டிரைக்கோடெர்மா 4 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் விதை முளைப்புத்திறன் அதிகரிக்கப்படுவதுடன் பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கிறது. விதை நேர்த்தி மிகவும் கவனமாக செய்ய வேண்டும். ஏனெனில் விதை நேர்த்தி செய்யும் போது விதை உறையில் பாதிப்பு ஏற்பட்டால் முளைப்புத்திறன் பாதிக்கப்படும்.
விதை நேர்த்தி செய்யாவிட்டால், ஏக்கருக்கு ரைசோபியம் 4 பாக்கெட்(800 கிராம்) மற்றும் பாஸ்போபாக்டீரியா 4 பாக்கெட் (800 கிராம்) உடன் 10 கிலோ தொழு உரம் மற்றும் 10 கிலோ மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன்னால் இட வேண்டும்.
விதைத்தல்
நிலக்கடலைக்கு வரிசைக்கு வரிசை 30 செ.மீ, செடிக்கு செடி 10 செ.மீ இடைவெளியும் விட்டு விதைக்க வேண்டும். மானாவாரி செம்மண் மற்றும் செம்புரை நிலங்களில் விதைப்புக்கருவி கொண்டு விதைக்கும் போது விதையின் அளவு குறைவதுடன் மண்ணில் ஈரம் குறைவதற்குள் விதைத்து விடலாம். விதைக்கருவியின் மூலம் விதைப்பதால் சரியான பயிர் இடைவெளியை கடைபிடிக்கலாம். இவ்வாறு செய்வதால் களை நிர்வாகம் செய்வதற்கு ஏதுவாகவும் மற்றும் பயிர் வளர்ச்சி சீராகவும் இருக்கும்.
நீர் நிர்வாகம்
விதைக்கும் சமயம் ஈரப்பதம் உள்ளவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் உயிர்த் தண்ணீர் விதைத்த 4-5வது நாள் விட வேண்டும். மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து வாரம் ஒரு முறை நீர் விடவேண்டும்.
உரங்கள்
ரைசோபியம் மற்றும் பாஸ்போபாக்டீரியா உயிர் உரத்தினை ஏக்கருக்கு 4 பாக்கெட் வீதம் அடியுரமாக இடுவதால் தழைச்சத்து மற்றும் மணிச்சத்து நிலக்கடலைக்கு சீராகக் கிடைக்கும்.
ஜிப்சம் இடுதல்
நிலக்கடலை உற்பத்தியில் பயிருக்கு ஜிப்சம் இடுவது மிக அவசியம். ஜிப்சத்தில் சுண்ணாம்புச் சத்தும், கந்தகச் சத்தும் அடங்கி உள்ளன. சுண்ணாம்புச் சத்து காய்கள் திறட்சியாகவும், அதிக எடை உடையதாகவும் உருவாக வழி செய்கிறது. கந்தகச் சத்து நிலக்கடலையில் எண்ணெய்ச் சத்தை அதிகரிக்கிறது. ஒரு ஏக்கருக்கு 160 கிலோ ஜிப்சத்தை விதைத்த 40-45ம் நாள் இட்டு செடிகளைச் சுற்றி மண் அணைக்க வேண்டும்.
பாதுகாப்பு முறைகள்
களை நிர்வாகம்
நிலக்கடலையில் அதிக மகசூல் பெற களை கட்டுப்பாடு மிகவும் அவசியம். நிலத்தில் உள்ள பயிர்சத்து வீணாகாமல் தவிர்த்திடவும், களைகள் மூலம் மண், ஈரம் வீரயமாவதைத் தவிர்த்திடவும், பயிர்களுக்கு போதிய சூரிய ஒளி கிடைத்திடவும் மற்றும் பூச்சி நோய்கள் பரவாமல் தடுத்து அதிக விளைச்சல் பெறுவதற்கும் களை கட்டுப்பாடு மிகவும் அவசியமாகிறது. விதைத்த 45 நாட்களுக்குள் களைகளைக் கட்டுப்படுத்துவது அவசியம்.
பயிர் பாதுகாப்பு
சிகப்புக் கம்பளிப் புழு
சிகப்புக் கம்பளிப்புழுக்களை கட்டுப்படுத்த குவினால்பாஸ் 2.5 மி.லி, என்.பி.வி.நச்சுயிரி (300 புழுக்களை ஊறவைத்து பெறப்படும் நச்சுயிரிக்கரைசல்) மற்றும் 100 மி.லி ஒட்டும் திரவம் அல்லது ட்ரைட்டான் சேர்த்து 150 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை நேரங்களில் தெளிக்க வேண்டும்.
படைப்புழு அல்லது வெட்டுப்புழு :
படைப்புழுக்களைக் கட்டுப்படுத்த ஸ்பைனோசாடு 0.4 மி.லி (அ) புரோப்பனோபாஸ் 2 மி.லி தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்குத் தேவையான நச்சுணவு உருண்டைகளைத் தயார் செய்து பயன்படுத்தலாம். அரிசித்தவிடு 5 கிலோ, வெல்லம் 0.5 கிலோ மற்றும் கார்பரில் (50 சதம்) நனையும் தூள் 0.5 கிலோ இம்மூன்றையும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து (3 லிட்டர்) சிறுசிறு உருண்டைகளாக உருட்ட வேண்டும். இந்த நச்சுணவு உருண்டைகளைத் தயார் செய்தவுடன், வயலைச்சுற்றிலும் வரப்பு ஓரங்களிலும், வயலில் தெரியும் வெடிப்பு மற்றும் பொந்துகளிலும் மாலை வேளைகளில் வைத்து புழுக்களைக் கவர்ந்து அழிக்க வேண்டும்.
என்.பி.வி நச்சுயிரியை ஏக்கருக்கு 200 மி.லி என்ற அளவில் வெல்லம் (1.0 கிலோ, ஏக்கர்) மற்றும் டீப்பாலுடன் (100 மி.லி/ஏக்கர்) சேர்த்து 150 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை நேரங்களில் தெளிக்க வேண்டும்.
இலைப்பேன் மற்றும் அசுவினி
இவற்றைக் கட்டுப்படுத்த இமிடாகுளோபிரிட் 0.4 மி.லி. (அ) அசிபேட் 1 கிராம், ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
சுருள் பூச்சி
இதைக் கட்டுப்படுத்த ஸ்பைனோசாடு 0.4 மி.லி, இமிடாகுளோபிரிட் 0.4 மி.லி (அ) டைமெத்தோயேட் 2 மி.லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
வேரழுகல் நோய்
உயிரியல் முறை: ஒரு ஏக்கருக்கு சூடோமோனாஸ் ஃபுளூரசன்ஸ் 1.0 கிலோவுடன் 20 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் (அ) மணல் இட வேண்டும். 🌿 நோய் தென்படும் இடங்களில் கார்பன்டாசிம் 1 கிராம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். புரோப்பனோசோல் 2 கிராம், ஒரு கிலோ விதைக்கு என்ற அளவில் கலந்து விதைக்கும் முன் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
அறுவடை
முதிர்ந்த இலைகள் காய்ந்து விடுதல் மற்றும் மேல்மட்ட இலைகள் மஞ்சளாவதும் முதிர்ச்சியைக் குறிக்கும். கால அளவைப்பொறுத்து பயிர் கண்காணிக்கப்பட வேண்டும். தோராயமாக ஒரு சில செடிகளைப் பிடுங்கி காய்களை உரிக்க வேண்டும். ஓட்டின் உட்புறம் வெள்ளையாக இல்லாமல் பழுப்பு கலந்த கறுப்பு நிறத்தில் இருப்பின் அது முதிர்ச்சி நிலையைக் குறிக்கிறது.
அறுவடைக்கு முன் நீர் பாய்ச்ச வேண்டும். நீர் பாய்ந்த நிலம் சுலபமாக அறுவடைக்கு உதவுகிறது. மண்ணில் போதுமான ஈரப்பதம் இருப்பின் அறுவடைக்கு முன் நீர் பாய்ச்சத் தேவையில்லை. பிடுங்கப்பட்ட செடிகளைக் குவியலாக வைக்கக் கூடாது. ஏனெனில் ஈரமாக உள்ள போது, குறிப்பாகக் கொத்து ரகங்கள் முளைக்க ஆரம்பித்து விடும்.
காய்களை நான்கிலிருந்து ஐந்து நாட்கள் வரை வெயிலில் உலர்த்த வேண்டும். இரண்டு அல்லது மூன்று நாட்கள் காய வைப்பது முழுவதுமான காய்தலுக்கு உதவுகிறது. காய்ந்த காய்களுக்குள் ஈரப்பதம் வருவதைத் தவிர்க்க வேண்டும்.
மகசூல்
ஒரு ஏக்கருக்கு 600 கிலோ வரை கிடைக்கும்.
ஊடுபயிர்
கடலைச்செடிகளுக்கு ஊடுபயிராய் ஆமணக்கு, துவரை பயிரிடலாம்.
நிலக்கடலையின் நோய்கள்:
இலைப்புள்ளி நோய்:
விதைத்த ஒரு மாதத்தில் இந்நோய்த் தாக்கம் ஏற்படலாம்.
சிறிய சோகை (பசுமை சோகை போன்ற புள்ளிகள் தோன்றி, பின்னர் அவற்றின் நடுப்பகுதி கரும் நிறத்திற்கு மாறும்.
இலையின் அடிப்பகுதியில் அரக்கு நிறப்புள்ளிகளைக் காணலாம்.
இலை, காம்பு, தண்டு ஆகிய இடங்களில் இப்புள்ளி தேன்றும்.
பாரம்பரிய / சாகுபடி முறை:
எதிர்ப்புத் திறன் கொண்ட பயிர் வளர்த்தல்.
ஊடுபயிராக சோளத்தை வளர்க்கலாம் (சோளம் 1 பகுதி, நிலக்கடலை 3 பகுதி).
பூச்சி மற்றும் நோய்க் கிருமிகளுக்கு மாற்று ஊணூட்டி அல்லாத பயிரை ஊடுபயிராக தேர்வு செய்யலாம். பயிறு வகை அதில் சிறந்தது.
இயந்திர முறை:
பயிர் மீதங்களை நிலத்தின் அடியில் புதைத்திட வேண்டும். நோய் தாக்கப்பட்ட பயிர்களை அகற்ற வேண்டும்.
உயிரியல் முறை:
இலைகளில் படும்படி வேப்ப இலை சாற்றை (2-5%) தெளிக்க வேண்டும். விதைத்த நான்காம் வாரத்திலிருந்து மூன்று முறை (2 வார இடைவெளியில்) தெளிக்க வேண்டும்.
பின்பருவ இலைப்புள்ளி நோய்:
வித்திட்ட 55-57ஆம் நாளில் இந்நோய் தாக்குதல் வரலாம்.
கருமை நிற வட்ட புள்ளிகள் இலைகளில் தோன்றும்.
பாரம்பரிய கட்டுப்பாட்டு முறை:
எதிர்ப்புத் திறன் கொண்ட பயிர்களை நட வேண்டும்.
சோளம்/கம்பு 1 பங்கு, நிலக்கடலை 3 பகுதி என ஊடு பயிர்களை பயிரிடலாம்.
பயிர் சுழற்சி பயிறு வகை சிறந்தது.
உயிரியல் கட்டுப்பாட்டு முறை:
துரு நோய் (பக்சினியா அராக்கிடிஸ்):
ஆரஞ்சு (அரக்கு) நிறத்தில் சிறிய துரு புள்ளிகள் மேலெழுந்தவாறு தோன்றும். இவை இலையின் அடிப்பாகத்தில் காணப்படும். துருப்புள்ளிகளில் பொடி போன்ற பூஞ்சானைக் காணலாம்.
பண்பாட்டுமுறையில் நோய் கட்டுப்பாடு:
பயிர்சுழற்சி மற்றும் வயல் வரப்புகளை சுத்தமாக வைக்க வேண்டும்.
சான்றிதல் பெற்ற வித்துக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
ஜீன் மாதம் முதல் வாரத்திலேயே வித்துக்களை விதைக்க வேண்டும். இது நோய் தாக்குதலை குறைக்கும்.
ஊடுபயிரான் சோளம் 1 பகுதி நிலக்கடலை 3 பகுதி என பயிரடலாம்.
உச்சி அழுகல் நோய்:
அறிகுறிகள்:
வித்துக்கள் மொட்டு மலரும் முன்னரே அழிந்து/சிதைந்து விடும்.
பூக்கள் மலர்ந்த பின்பு இந்நோய் தாக்கினாலும் விதைகள் அழுகி விடும்.
மலரின் கீத்துப் பகுதி அழுகி காணப்படும்.
முதிர் பயிர்களில் அழுகல் அடி தண்டிலிருந்து ஆரம்பித்து பின்னர் தலைவரை பரவி, பயிரை அழித்து விடும்.
தடுப்பு முறை:
பயிர் சுழற்சி.
தாவரக் கூளங்களை அகற்றிடல் வேண்டும்.
ஆழமாக உழுவதன் மூலம், மேல் உள்ள மட்கும் குப்பைகளை நிலத்தினும் புதைக்கலாம்.
1 கிலோ வித்துடன் 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடே / டிரைக்கோடெர்மா ஹாரிசானம் எனும் நுண்ணுயிரியை கலந்து பின்னர் விதைக்கலாம். அவற்றை 25-62.5 கிலோ என்ற அளவில் ஒரு எக்டர் வயலில் இடலாம்.
அவ்வாறு வயலில் டிரைக்கோடெர்மாவை இடும்பொழுது ஆமணக்கு புண்ணாக்கு அல்லது வேப்பம் புண்ணாக்கு போன்றவற்றை அவற்றுடன் பயன்படுத்த வேண்டும்.
மொட்டு சோகை நோய்:
வெளிப்பச்சைப்பட்டை இலைகளில் தோன்றும்.
நுனிமொட்டு காய்ந்து வாடிவிடும்.
தடுப்பு முறைகள்:
முன் விதைத்தல் பலன் தரும்.
எதிர்ப்பு சக்தி கொண்ட வளர்க்கலாம்.
களைச் செடிகளை அகற்றி விட வேண்டும்.
கம்பு போன்ற ஊடுபயிர்களை பயன்படுத்த வேண்டும் (7 பங்கு நிலக்கடலை; 1 பங்கு கம்பு).
கலஹஸ்தி மலடி நோய்:
பாதிக்கப்பட்ட செடிகள், குன்றிய வளர்ச்சி மற்றும் அதிக பச்சை நிறத்தில் தோற்றமளிக்கும்.
இளம் காய்கலில் சிறிய மேலெழுந்த புள்ளிகள் காணப்படும்.
பின்னர் இப்புள்ளிகள் ஒன்றிணைந்து காயின் மொத்த உருவையும் மாற்றும்.
தடுப்பு முறைகள்:
எதிர்ப்புத் திறன் கொண்ட பயிரை வளர்க்கவும் – திருப்பதி 3, திருப்பதி 2.
நெல் விதைத்த பின்னர் நிலக்கடலையைப் பயிரிடவும். இது நோய் தாக்கத்தைக் குறைக்கும்.
விதைப்புள்ளி (பரவைக் கண்) நோய்:
சிறிய மஞ்சள் நிற புள்ளிகள் கீழுள்ள இலையில் தோன்றும் அவை இலை முழுதும் பரவும்.
முற்றிய நிலையில் இது முழு இலையையும் வாடியது போலாக்கிவிடும்.
தடுப்பு முறைகள்:
வெயில் காலத்தில் ஆழமாக உழுதல்.
நல்ல தரமான, சான்றிதழ் பெற்ற வித்தினை பயன்படுத்துதல்.
செடி கூளங்களை அகற்றல்.
பயன்கள்
- நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
- நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும்.
- நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்ஸிடண்டாகவும் திகழ்கிறது.
- இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்ஸிடண்டு உள்ளது. இது நோய் வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.
- பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக்கட்டி உண்டாவதையும் தடுக்கிறது.
- பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள் நிலக்கடலையில் நிறைந்துள்ளன. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
- மூளை வளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்கும் தன்மை கொண்டது.
Nallamuthu L says
அருமையான பதிவு
பிரகாஷ் லோகநாதன் says
உழவை காக்கவும், உழவர்களுக்கு உயிரூட்டும் உன்னத வழிகாட்டுதல்களை நெறிப்படுத்தும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉🙏👍
SRENIVAAS says
அருமையான தகவல்கள் பதிவு நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்..
கண ஜீவாமிர்தம், செறிவூட்டப்பட்ட தொழு உரம், கற்பூர கரைசல் போன்ற இயற்கை விவசாய முறைகள் பற்றிய தகவல்கள் வெளியிடுங்கள் நன்றி
karthi says
நல்ல தகவல் நன்றி