பீர்க்கங்காய் வெள்ளரி இனத்தைச் சேர்ந்த கொடிவகையான காய்கறி வகையாகும்.
வடக்கு மெக்ஸிகோவும், வட அமெரிக்காவும் இதன் தாயகமாகும். இதில் நீண்ட, மத்திய, குட்டை எனப் பல வகைகள் உள்ளன.
தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் பயிர் செய்யப்படுகிறது.
பீர்க்கங்காய் எப்படி பயிரிடுவது…?
இரகங்கள் :
கோ 1, கோ 2, பி.கே.எம் 1 ஆகிய இரகங்கள் உள்ளன.
மண்
அங்ககத் தன்மைக் கொண்ட வடிகால் வசதியுடைய மணல் கொண்ட களிமண் ஏற்றது. கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 வரையிலுள்ள மண் ஏற்றது.
பருவம்
இந்தப் பயிருக்கு ஜூன், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்கள் ஏற்றது. இந்தப் பயிரை கோடை, மழைக் காலங்களிலும் சாகுபடி செய்யலாம். கோடைக் காலங்களில் வெப்ப நிலை 35 டிகிரி செல்சியஸ்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
நிலம் தயார்படுத்துதல்
நிலத்தை 3 முதல் 4 முறை நன்றாக உழுது 2.5 மீட்டர் இடைவெளியில் 60 செ.மீ. அகலமுள்ள வாய்க்கால்களை எடுத்து நிலத்தை தயார்படுத்த வேண்டும். பின்பு வாய்க்காலில் 45 செ.மீ. ஆழம், அகலம், நீளமுள்ள குழிகளை 1.5 செ.மீ. இடைவெளியில் எடுத்து, அதில் 10 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்தை மேல் மண்ணுடன் சேர்த்து இட்டு நடவுக் குழி தயார் செய்ய வேண்டும்.
விதையளவு
ஒரு எக்டருக்கு 1.50 கிலோ முதல் 2 கிலோ வரை விதை தேவைப்படும்.
விதைத்தல்
ஒரு குழிக்கு 5 விதைகள் ஊன்ற வேண்டும்.
நீர் நிர்வாகம்
விதை ஊன்றியவுடன் குடம் அல்லது பூவாளி வைத்து தண்ணீர் ஊற்ற வேண்டும். நாற்றுகள் வளர்ந்த உடன், வாய்க்கால் மூலம் 7 முதல் 10 நாட்கள் இடைவெளியில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
பீர்க்கங்காய் உரங்கள்
விதை ஊன்றிய 30 நாள் கழித்து 50 கிலோ யூரியாவை களை எடுத்து மேலுரமாக இட்டு மண் அணைத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
வளர்ச்சி ஊக்கிகள்
எத்ரல் எனும் வளர்ச்சி ஊக்கியை 250 பிபிஎம் என்ற அளவில் இரண்டு இலைப் பருவத்தில் தெளிப்பதால் பெண் பூக்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதை மீண்டும் 7 நாள்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும்.
பீர்க்கங்காய் பாதுகாப்பு முறைகள்
களை நிர்வாகம்
கொடி வளர்ந்தவுடன் பந்தல் போட்டு கொடியைப் படர விட வேண்டும். முளைத்தவுடன் நன்கு வளர்ந்த 3 செடிகளை மட்டும் விட்டு மற்ற செடிகளைப் களைக்க வேண்டும்.
அறுவடை
விதை ஊன்றிய 50 முதல் 60 நாட்களில் முதல் அறுவடை செய்யலாம். அதைத் தொடர்ந்து ஒரு வார இடைவெளியில் 10 முறை தொடர்ந்து அறுவடை செய்யலாம்.
மகசூல்
ஒரு எக்டருக்கு 15 முதல் 20 டன் வரை மகசூல் கிடைக்கும்.
ஊடுபயிர்
பந்தல் முறையில் பாகற்காய் , புடலங்காய் ஆகியவற்றை ஊடுபயிராக பயிர் செய்யலாம்.
பீர்க்கங்காய் பயன்கள்:
- மஞ்சள் காமாலை நோய்க்கு பீர்க்கங்காய் சாறு மருந்தாகப் பரிந்துரைக்கப்படுகிறது.
- தொற்றுக் கிருமிகள் தாக்காமல் உடலைக் காத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
- தொடர்ந்து பீர்க்கங்காய் சாப்பிடுகிறவர்களின் சருமம் பருக்களோ, மருக்களோ இல்லாமல் தெளிவாகிறது. சரும நோய்கள் இருப்பவர்களுக்கு ரத்தத்தை சுத்தப்படுத்தி, நோயைக் கட்டுப்படுத்துகிறது.
- வயிற்றில் அமிலச் சுரப்பு அதிகமாவதைத் தடுத்து, புண்கள் வராமலும் காக்கும்.
- ஒட்டுமொத்த உடலையுமே குளிர்ச்சியாக வைத்திருக்கக் கூடியது.
- எடை குறைக்க முயற்சி செய்கிறவர்களுக்கு பீர்க்கங்காய் மிக அவசியம். நீர்ச்சத்து அதிகம் என்பது முக்கிய காரணம். பீர்க்கங்காய் சேர்த்த உணவுகளை உண்ணும்போது நீண்ட நேரத்துக்குப் பசி எடுப்பதில்லை.
Leave a Reply