பறங்கிக்காய் (பூசணிக்காய்)
பூசணிக்காய் – பறங்கிக்காய் கொடிவகை காய்கறிகளில் ஒன்று.
பூசணிக்காயின் தாயகம் வடக்கு மெக்ஸிகோவும், தென் அமெரிக்காவாகும்.
பூசணி தமிழர்களின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும்.
கோடைக்காலத்தில் உடலில் உண்டாகும் வெப்பத்தினை பூசணிக்காய் தணிக்கிறது.
எப்படி பயிரிடுவது…?
இரகங்கள் :
கோ 1, கோ 2, அர்க்கா, சூரியமுகி மற்றும் சந்தன் ஆகிய இரகங்கள் உள்ளன.
பருவம்
ஜீன் – ஜீலை மற்றும் ஜனவரி – பிப்ரவரி மாதங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.
மண்
அங்ககத் தன்மைக் கொண்ட வடிகால் வசதியுடைய மணல் கொண்ட களிமண் ஏற்றது.
நிலம் தயாரித்தல்
முதலில் தோட்டத்தை புழுதிபட உழவு செய்யவேண்டும். ஆறு அடி அகலத்தில் நீளமாக மேட்டுப்பாத்தி அமைத்து, பாத்திகளுக்கு இடையில் இரண்டு அடி அகல வாய்க்கால் விடவேண்டும். வாய்க்காலில் விதையை ஊன்றினால், ஈரமாகாத மேட்டுப்பாத்தியில் கொடிகள் படரும்.
விதையளவு
ஏக்கருக்கு 900 கிராம் விதைகள் தேவைப்படும்.
விதை நேர்த்தி
ஒரு ஏக்கருக்கு தேவையான விதைகளை கேப்டான் அல்லது பெவிஸ்டின் பூஞ்சாணக்கொல்லி மருந்து கொண்டு விதை நேர்த்தி செய்து கொள்ளவும்.
விதைத்தல்
குழிகள் 30 x 30 x 30 செ.மீ என்ற அளவில் 2 x 2 மீ இடைவெளியில் தோண்ட வேண்டும். பின்பு குழிக்கு 5 விதைகள் வீதம் விதைக்க வேண்டும்.
நீர் நிர்வாகம்
ஏழிலிருந்து ஒன்பது நாளில் விதை முளைத்து, இலைகள் துளிர்த்து விடும். ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
சாதாரணமாக, வறண்ட காலங்களில் வாரம் இருமுறையும், மற்ற காலங்களில் வாரம் ஒரு முறையும் பாசனம் செய்யலாம். சொட்டு நீர் பாசனம் அமைத்தால், தண்ணீர் செலவையும், களைகளையும் குறைக்க முடியும்.
உரங்கள்
விதைப்பயிருக்கு 22 கிராம் யூரியாவை நட்ட 30வது நாளில் மேலுரமாக இடவேண்டும்.
10 கிகி தொழுவுரம், 100 கி தழைசத்து அடியுரமாக அளிக்க வேண்டும். நடவு செய்த 30 நாட்களுக்குப் பிறகு நைட்ரஜனை குழிக்கு 10 கி அளிக்கவும். அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா எக்டருக்கு 2 கிகி மற்றும் சூடோமோனஸ் எக்டக்கு 2.5 கிகி அதனுடன் 50 கிகி தொழுவுரம் மற்றும் வேப்பம் பிண்ணாக்கு 100 கிகி கடைசி உழவிற்கு முன் அளிக்க வேண்டும்.
முதல் களைக்கு பின் ஒரு டேங்குக்கு 10 கிராம் பூச்சிக் கொல்லி (கார்பரில்) மருந்தைக் கலந்து, ஏக்கருக்கு 10 டேங்க் தெளிக்க வேண்டும். இரண்டாம் களைக்கு பின், ஒரு டேங்குக்கு 50 மில்லி பூச்சிக்கொல்லி (மோனோ குரோட்டாபாஸ்) கலந்து, ஏக்கருக்கு 15 டேங்க் தெளிக்க வேண்டும்.
பாதுகாப்பு முறைகள்
களை நிர்வாகம்
குழிகளில் களைகள் இல்லாமல் பராமரிப்பது மிக முக்கியம். மூன்றாவது வாரத்தில் கொடி படரத்தொடங்கும் போது முதல் களையும், 40-ம் நாள் இரண்டாம் களையும் எடுக்க வேண்டும்.
பயிர் பாதுகாப்பு
அடிச்சாம்பல் நோய்
அடிச்சாம்பல் நோயை மேன்கோசெப் அல்லது குளோர்தலானில் 2 கி ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்த முடியும். 10 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.
சாம்பல் நோய்
சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த டைனோகேப் 1 மிலி அல்லது கார்பன்டாசிம் 0.5 கி ஆகியவற்றை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம்.
பழ ஈக்கள்
பழ ஈக்களை கட்டுப்படுத்த வேப்ப எண்ணெய் 3.0 சதவீதம் இலைத் தெளிப்பாக தெளிக்க வேண்டும்.
அறுவடை
பழங்கள் பச்சை நிறத்திலிருந்து மஞ்சள் நிறத்திற்கு மாறும்போது அறுவடை செய்ய வேண்டும். நன்கு முதிர்ந்த பழங்களை நடவு செய்த 85 முதல் 90 நாட்களுக்குள் அறுவடை செய்து விடலாம்.
மகசூல்
எக்டருக்கு 18 முதல் 20 டன் வரை கிடைக்கும்.
பயன்கள்
- உடலுக்கு மிகுந்த குளிர்ச்சியை தருகிறது. சிறுநீர் நன்கு பிரிய உறுப்புகளைத் தூண்டுகிறது. திடீர் திடீர் என்று ஏற்படும் வலிப்பு நோய்களை குணமாக்கும் தன்மை கொண்டது.
- நன்கு பழுத்த பூசணியின் சதையை மட்டும் எடுத்துக் கொதிக்கும் தண்ணீரில் சிறுசிறு துண்டுகளாய் நறுக்கிப் போடவும். ஆறியதும் இரு தேக்கரண்டி சர்பத் சேர்த்து அருந்தவும்.
- இது இதயம் பலகீனமாய் உள்ளவர்கள், இரத்த சோகை நோயாளிகள், புற்றுநோயாளிகள், உடல் உடையை அதிகரிக்க விரும்புகிறவர்கள் இந்த மருந்தை தினமும் (ஒருவேளை) தயாரித்து அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
- இது தசை மண்டலம் பகுதிக்கு உறுதியை சேர்க்கிறது.
- பூசணியின் சதையை மட்டும் எடுத்து வெயிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும். பிறகு, அதை இடித்துப் பொடி செய்து சாப்பிட்டால் இரத்த வாந்தி, கோழை முதலியன குணமாகும்.
Leave a Reply