தேவையான பொருட்கள்
ஆற்றல் மிக்க ஆய்வு வகை நுண்ணுயிரிகளுடைய செயலுள்ள அல்லது செயலற்ற உயிரணுவை கொண்ட தயாரிப்பே உயிர் உரங்கள் ஆகும். இதனால், விதை அல்லது மண்ணின் வழியாக அளிக்கும் போது பயிர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்க உதவி செய்கிறது. பயிர்கள் மண்ணிலிருந்து ஊட்டச் சத்துக்களை நுண்ணுயிரி முறைகளால் எளிதில் எடுத்துக் கொள்ள உதவுகிறது.
இயற்கையில் நுண்ணுயிரிகள் ஆற்றல் மிக்கதாக இல்லாமல் இருக்கும். செயற்கையாக இந்த நுண்ணுயிரிகளைப் பெருக்கி மண்ணில் நுண்ணுயிரிகளின் செயலை அதிகப் படுத்தலாம். ஊட்டச்சத்து மேலாண்மையில் உயிர் உரங்களின் பயன்பாடு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.
அசோலா
அசோலா என்பது பெரணி வகையைச் சார்ந்த நுண்தாவரம். அசோலாவைக் கால்நடைகள் விரும்பி உண்ணும். உடல் ஆரோக்கியத்துக்குத் தேவைப்படும் அமினோ அமிலங்கள், உடல் வளர்ச்சிக்குத் தேவைப்படும் தாதுக்களான கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, துத்தநாகம், மாங்கனீஸ், வைட்டமின்கள், தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, புரதச் சத்து போன்றவற்றையும் உள்ளடக்கியது.
தயாரிக்கும் முறை
அசோலா நீரில் மிதக்கக்கூடிய ஒரு நீர்ப் பெரணியாகும். அனபீனா அசோலா என்ற நீலப்பச்சை பாசியுடன் இணைந்து தழைச்சத்தை நிலை நிறுத்துகிறது. நிழற்பாங்கான இடத்தில் 10 அடி நீளம், 2 அடி அகலம், 1 அடி ஆழம் கொண்ட பாத்தி அமைக்கவும். நேரடி சூரிய ஒளி ஒரு நாளைக்கு 3 மணி நேரத்திற்கு மேல் இருக்காதவாறு இடத்தினை தேர்வு செய்ய வேண்டும். பாத்தியின் அடித்தளத்தில் சில்பாலின் காகிதத்தை சீராக விரிக்க வேண்டும்.
பாலித்தின் காகிதத்தின் மேல் 2 செ.மீ அளவிற்கு செம்மண்ணை இட்டு சமன் செய்ய வேண்டும். இதன் மேல் 2 செ.மீ அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். பின் பாத்தி ஒன்றிற்கு 100 கிராம் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 5 கிலோ பசுஞ்சாணம் கரைத்து இடவேண்டும். அதன் பின் இப்பாத்தியில் 5 கிலோ அசோலா தாய்வித்து இடவேண்டும்.
தினமும் காலை அல்லது மாலையில் பாத்தியில் உள்ள மண்ணை நன்கு கலக்குவதால் மண்ணில் உள்ள சத்துக்கள் தண்ணீரில் கரைந்து அசோலாவிற்கு எளிதாக கிடைக்கும். 15 நாட்களில் ஒரு பாத்தியில் (10X2X1 அடி) 30 முதல் 50 கிலோ அசோலா தயாராகி விடும். மூன்றில் ஒரு பங்கு அசோலாவை பாத்தியிலேயே விட்டு எஞ்சிய 2 பகுதியை அறுவடை செய்யலாம்.
பராமரிப்பு
10 நாட்களுக்கு ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு தண்ணீரை வெளியேற்றி சுத்தமான தண்ணீரை ஊற்ற வேண்டும்.
மாதம் ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு மண்ணை வெளியேற்ற வேண்டும். பிறகு சுத்தமான சலித்த செம்மண்ணை இட வேண்டும்.
6 மாதத்திற்கு ஒரு முறை அசோலா விதைகளை தவிர அனைத்து இடுபொருட்களையும் வெளியேற்றி புதியதாக இட வேண்டும்.
10 நாட்களுக்கு ஒரு முறை 5 கிலோ பசுஞ்சாணம் கரைத்து விட வேண்டும்.
பூச்சி தாக்குதல் காணப்பட்டால் 5 மில்லி வேப்பெண்ணையை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து பாத்தியில் தெளித்து கட்டுப்படுத்தலாம். அசோலாவின் உற்பத்தி கோடை காலங்களில் சிறிது குறைந்தும், மழைக்காலங்களில் அதிகரித்தும் காணப்படும்.
இதர உயிர் உரங்கள்
ரைசோபியம்
ரைசோபியம் மண்ணில் வாழக்கூடிய நுண்ணுயிரி. இது பயிறு வகை பயிர்களின் வேர்களில் வாழ்ந்து, காற்றிலுள்ள தழைச்சத்தை இணை வாழ்த்தன்மையுடன் நிலைப்படுத்துகிறது. வேர் முடிச்சுக்களில் தன்னிச்சையாக வாழும் நுண்ணுயிரிகளிலிருந்து ரைசோபியத்துடைய வெளித்தோற்றம், இயல்நிலை வேறுபடுகிறது. தழைச்சத்தின் அளவை நிலைப்படுத்துவதில் இது ஆற்றல் மிகுந்த உயிர் உரமாகும். பயிர்களின் வேர்களில் இருந்து கசியும், வேர்க்கசிவுகளும் வேர் முடிச்சுகளில் இருந்து வெளியாகும் வேதிப்பொருள்களும் மண்ணின் வளத்தை மேம்படுத்துகின்றன. ரைசோபியம் நுண்ணுயிர் உபயோகத்தால் தழைச்சத்து உரத்தைச் சேமித்து அதிக மகசூல் பெறலாம்.
அசட்டோபாக்டர்
அசட்டோபாக்டர் பலதரப்பட்ட வகைகளில், காற்றோட்டமுள்ள மண்ணில் அதிகமாக வளரக்கூடியது. இது தழைச்சத்தை வளர்ச்சி ஊடகத்தில் நிலைப்படுத்தக் கூடியது. நுண்ணுயிரி உற்பத்தி செய்யக் கூடிய எண்ணற்ற பசையானது மண் ஒருங்குபடுவதற்கு உதவுகிறது.
அசோஸ்பைரில்லம்
அசோஸ்பைரில்லம் லிபோபெரம் மற்றும் அசோஸ்பைரில்லம் ப்ரேஸிலென்ஸ் மண்ணில் உயிர் வாழக் கூடியவை. புல்வகை பயிர்களில் வேர்த்தண்டுப் பகுதி மற்றும் வேர்ப்பகுதியின் இடைப்பட்ட பகுதிகளில் உயிர் வாழும். நுண்ணுயிரி பேரினமான அசோஸ்பைரில்லம் வேர் மற்றும் மண்ணின் மேல்பகுதியில் உள்ள பயிர்களிலிருந்து தழைச்சத்தை நிலைப்படுத்தக்கூடிய நுண்ணுயிரிகள் மூலம் பிரித்தெடுக்கப்பட்டது. விப்ரியோ அல்லது ஸ்பெரில்லம் என்ற உயிரணு எண்ணற்ற அளவில் குவிக்கப்பட்டிருக்கும்.
அசோஸ்பைரில்லத்தில் 5 வகைகள் உள்ளன. அவை அசோஸ்பைரில்லம் ப்ரேஸிலென்ஸ், அசோஸ்பைரில்லம் லிப்போபெரம், அசோஸ்பைரில்லம் அமெசோஎன்னஸ், அசோஸ்பைரில்லம் ஹேலோப்ரேபிசன்ஸ் மற்றும் அசோஸ்பைரில்லம் இராகென்ஸ். இது காற்றோட்டம் உள்ள மற்றும் காற்றோட்டம் இல்லாத நிலையிலும் வளரும் தன்மை கொண்டவை. வளர்ச்சித் திரவத்தில் இருக்கக்கூடிய அல்லது இல்லாத நிலையிலும் இது வளரும். தழைச்சத்தை நிலைப்படுத்துவது மட்டுமல்லாமல் வளர்ச்சி ஊக்கி உற்பத்தி, நோய் எதிர்ப்புத் தன்மை மற்றும் வறட்சி சகிப்பு போன்றவை அசோஸ்பைரில்லம் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளாகும்.
பாஸ்போ பாக்டீரியா
இது மண்ணில் உள்ள மணிச்சத்தை கரைத்து பயிர்களுக்கு வழங்குகிறது. சில வகை அமிலங்களை இந்த பாக்டீரியா உற்பத்தி செய்து மண்ணிலுள்ள கரையாத பாஸ்பேட்டை கரைத்து செடிகளுக்கு கொடுக்கிறது. இதை பயன்படுத்துவதால் 20 சதவீதம் மணிச்சத்து தரும் இரசாயன உர பயன்பாட்டை குறைக்கலாம். வேர்கள் செழித்து வளரவும், திசுக்கள் வளம் பெற்று கதிர்கள் செழித்து வளரவும், தழைச்சத்தை அதிக அளவு ஈர்க்கவும் பாஸ்போ பாக்டீரியா பயன்படுகிறது.
சைனோபாக்டீரியா
தன்னிச்சையாக உயிர்வாழும் தன்மையுடைய சைனோபாக்டீரியா இந்தியாவின் நெல் சாகுபடி முறைக்கு தகுந்தவாறு உள்ளது. கூட்டு வளர்ச்சி மாறுபட்டு கூடுடைய நீலப்பச்சைப் பாசிகளான நாஸ்டாக், அனபீனா, ஆலுசீரியா மற்றும் பல ஆரம்ப உட்புகுத்தலாக உறையிடப்பட்ட பானைகளில் வளர்க்கப்படுகிறது. பின் வயலில் இது பலமடங்காக பெருக்கப்படுகிறது. நெல் வயல்களில் ஒரு எக்டக்கு 10 கிலோ என்ற அளவில் மண் கலந்த கட்டிகளாக அளிக்கப்படுகிறது.
நீர்ம உயிர் உரங்கள்
உயிர் உரங்களான ரைசோபியம், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா ஆகியவை பயிர்களுக்கு தழைச்சத்தை நிலை நிறுத்துதல் மற்றும் மணிச்சத்தை கரைக்கும் முறைகளின் மூலம் தருகிறது. நெல், பயிறு வகைகள், சிறுதானியங்கள், பருத்தி, கரும்பு, காய்கறி மற்றும் இதர தோட்டப் பயிர்களுக்கு இந்த உயிர் உரங்கள் பயன்படுத்தப்படுகிறது. அங்கக வேளாண்மையில் உயிர் உரங்கள் ஒரு முக்கியமான இடுபொருளாகும். பயிர் வளர்ச்சி மற்றும் விளைச்சலை அதிகப்படுத்துவது மட்டுமல்லாமல், மண் நலத்தை மேம்படுத்தி, மண் வளத்தை காக்கிறது. மாற்றாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் நுண்ணுயிர் துறை உற்பத்தி செய்த நீர்ம உயிர் உரங்களின் தயாரிப்பு தொழில்நுட்பம் அதிக நன்மைகளைத் தருவதாக உள்ளது.
அளிக்கும் முறைகள்
- விதை நேர்த்தி
- வேர் குளியல்
- மண் அளிப்பு
விதை நேர்த்தி
விதை நேர்த்தி தான் பொதுவாக பயன்படுத்தப்படும் முறையாகும். சிறிய எடை அளவு உடைய விதைகள் (5 கிலோ எடை வரை) நெகிழி பையில் வைத்து பூசப்படுகிறது. இதற்காக, நெகிழிப்பை 21 x 10 அளவு அல்லது பெரிய அளவு பை பயன்படுத்தப்படுகிறது. இந்தப்பையை 2 கிலோ விதை அல்லது அதிக விதைகளை கொண்டு நிரப்ப வேண்டும். பையை காற்றுப் புகாதவாறு அடைக்க வேண்டும். பையை 2 நிமிடத்திற்கு அழுத்தி, விதை முழுவதும் ஈரமாகுமாறு செய்ய வேண்டும். பின் பையைத் திறந்து, ஊதி, மெதுவாகக் குலுக்க வேண்டும். விதைகள் முழுவதும் ஒரே மாதிரியாக பூச்சு ஆனவுடன் குலுக்குவதை நிறுத்த வேண்டும். பின் பையைத் திறந்து, விதைகளை 20 – 30 நிமிடங்களுக்கு நிழலில் உலர்த்த வேண்டும். அதிகளவு எடையைக் கொண்ட விதைகளை, வாலியில் வைத்து உயிர் உரத்தை கையால் கலக்க வேண்டும். ரைசோபியம், அசட்டோபாக்டர், அசோஸ்பைரில்லம் ஆகியவற்றுடன் சேர்த்து விதை நேர்த்தி செய்யலாம்.
இரண்டு அல்லது அதிக நுண்ணுயிரிகளுடன் கலந்து விதை நேர்த்தி செய்யலாம். இதனால் பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது. விதைகள் ரைசோபியம், அசட்டோபாக்டர் அல்லது அசோஸ்பைரில்லம் உடன் முதலில் பூச்சு செய்ய வேண்டும். ஒவ்வொரு விதையும் நுண்ணுயிரியால் பூசப்பட்ட பின்பு பாஸ்பேட் கரைக்கும் நுண்ணுயிரிகளுடன் வெளியில் ஒரு தரம் பூச வேண்டும். இந்த முறையால் அதிகளவு நுண்ணுயிரிகளை உற்பத்தி பண்ண முடியும்.
வேர் குளியல்
அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்பேட் கரைக்கும் நுண்ணுயிரிகள், நெல் நாற்றுகள் நடும் போது மற்றும் காய்கறி பயிர்களில் இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. தேவையான அசோஸ்பைரில்லம் / பாஸ்பேட் கரைக்கும் நுண்ணுயிரிகள் 5 – 10 லிட்டர் அளவுத் தண்ணீரில் வயலின் ஒரு மூலையில் வைத்து கலந்து, நாற்றுகளை நடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு இந்த கரைசலில் மூழ்க வைக்கவேண்டும்.
மண் மூலம் அளிப்பு
ஒரு ஏக்கருக்கு 200 மி.லிட்டர் அளவு பாஸ்பேட் கரைக்கும் நுண்ணுயிரியை பயன்படுத்த வேண்டும். 400 முதல் 600 கிலோ அளவு மாட்டுச்சாணத்தை, பாஸ்பேட் கரைக்கும் நுண்ணுயிரியுடன் அரை மூட்டை ராக் பாஸ்பேட்டுடன் கலக்க வேண்டும். இந்தக் கலவையை மரத்தின் அடியில் வைத்து நிழலில் இரவு முழுவதும் 50 சதவீதம் அளவு ஈரப்பதம் இருக்குமாறு உலர்த்த வேண்டும். இந்த கலவையை மண் சமம்படுத்தும் போது அளிக்க வேண்டும்.
நன்மைகள்
நுண்ணுயிரி செயல்பாட்டின் கால அவகாசம் மிக அதிகமாக உள்ளதால் மண் வளம் அதிகரிக்கும். உயிர் உரங்கள் மண்ணின் இயற்கை வாழ்விடத்தை பராமரிக்க உதவுகிறது.
உயிர் உரம் ஒரு வாழும் பொருள் என்பதால் அவை தாவர வேர்களுடன் எளிய வழியில் இணைய முடியும். ஈடுபட்டிருக்கும் நுண்ணுயிரிகள் உடனடியாகவும், பாதுகாப்பாகவும் சிக்கலான கரிம பொருட்களை எளிய கலவைகளாக மாற்றிவிடுகின்றன. இதனால் தாவரங்கள் எளிதில் இவற்றை எடுத்து கொள்ளும்.
இது பயிர் மகசூலை 20-30% அதிகரிக்கிறது. இது இரசாயன நைட்ரஜன், மற்றும் பாஸ்பரஸ் அளவை 25% குறைத்து தாவர வளர்ச்சியை தூண்டுகிறது. இதனால் வறட்சி மற்றும் மண் மூலம் பரவும் சில நோய்களுக்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது.
Ponraj says
Very useful