நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித்தோட்டத்தில் இஞ்சி பயிரிடும் முறையை இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்
- Grow Bags அல்லது Thotti
- அடியுரமாக இட மணல், தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம், செம்மண், பஞ்சகாவ்யா.
- விதைக்கரணைகள்
- பூவாளி தெளிப்பான்
தொட்டிகள்
இதற்கு தொட்டி அல்லது பைகளை எந்த வடிவமாக இருந்தாலும் பயன்படுத்தலாம். அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு தென்னை நார்க்கழிவு, ஒரு பங்கு இயற்கை உரம் ஆகியவற்றை கொண்டு தொட்டியை நிரப்ப வேண்டும்.
கிழங்கு வகையை சேர்ந்ததால் தென்னை நார்க்கழிவு சேர்க்க வேண்டும். அப்பொழுது தான் இஞ்சி வளர எளிதாக இருக்கும். மண் இறுகிப்போகும் பிரச்னை இருக்காது.
விதைத்தல்
இஞ்சி கரணைகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி நேரடியாகவே நடவு செய்யலாம். ஒவ்வொரு செடிக்கும் அரை அடி இடைவெளி இருக்குமாறு நடவு செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம்
விதைத்தவுடன் பூவாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும். பின்னர் தினமும் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
உரங்கள்
காய்கறி கழிவுகள், டீத்தூள், முட்டை ஓடு ஆகியவற்றை மக்கச்செய்து உரமாக போடலாம்.
மண்புழு உரத்தை மாதம் ஒருமுறை இட்டு கிளறி விட வேண்டும்.
பஞ்சகாவ்யா 10 மில்லியை இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து வாரம் ஒரு முறை பைகளில் ஊற்ற வேண்டும்.
பாதுகாப்பு முறைகள்
இலைகளில் பூச்சி தாக்குதல், இலை சுருண்டு காணப்பட்டால் வேப்பந்தூளை தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும். இது சிறந்த பூச்சி விரட்டியாக செயல்படும்.
அறுவடை
பொதுவாக ஆறு மாதத்தில் அறுவடை செய்ய வேண்டும்.
பயன்கள்:
- ஜலதோஷத்தின் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கும் தன்மை கொண்டது. தலைவலியைப் போக்குகிறது.
- இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது. மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது. செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது.
- தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும்.
- இஞ்சியானது பசியைத் தூண்டுவதுடன், தேவையற்ற கழிவுகளை வெளிக்கொணர உதவுகிறது. உடலின் ஜீரண உறுப்புகள், சிறுகுடல், பெருங்குடல் உள்ளிட்டவை இஞ்சி சாறு மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது.
- பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக இருக்கும் மலச்சிக்கலை அறவே அகற்றி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.
- பொதுவாக அசைவ உணவு வகைகளை சமைக்கும்போது, வெள்ளைப்பூண்டும், இஞ்சியும் அதிக அளவில் சேர்த்து சமைப்பார்கள். இஞ்சியின் மருத்துவ குணங்களில் முக்கியமான ஒன்று உடலின் ஜீரணத்தை துரிதப்படுத்துவது ஆகும்.
- இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு சம்பந்தமான நோய்கள் தீரும்.
Leave a Reply