சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே மிளகு தமிழகத்தில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. மிளகின் தாயகம் இந்தியா ஆகும்.
ஆனால் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே எகிப்து நாட்டிற்கு மிளகு பண்டமாற்றாகக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
மிளகு என்பது செடி அல்ல, அது ஒரு கொடி. சிவப்பு, இளஞ்சிவப்பு, பச்சை, கறுப்பு, வெள்ளை என்று வெவ்வேறான வண்ணங்களில் கிடைக்கிறது. பழுக்காத மிளகை பறித்தால் பச்சையாக இருக்கும். நன்கு பழுத்து காய்ந்தது கறுப்பு நிறமாக வரும். இப்படி பறிக்கும் நாட்களைப் பொறுத்து அதன் வண்ணங்கள் மாறுபடுகின்றன.
முற்காலத்தில் ஒருவரிடம் இருந்த மிளகின் அளவை வைத்து அவர் செல்வந்தரா, ஏழையா? என்பதையும் கணக்கிட்டுள்ளார்கள். பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டில் கூட உண்ணலாம் என்பது பழமொழி. மிளகின் விஷ முறிவு தன்மைக்காக இவ்வாறும் சொல்லப்படுகிறது.
எப்படி பயிரிடுவது…?,
இரகங்கள்
கிரிமுண்டா, கொட்ட நாடன், சுபகாரா, பஞ்சமி, பெளர்ணமி, ஒட்டப்பிளாக்கல் 1, கல்லுவள்ளி, பாலன்கொட்டா, ஐஐஏஸ்ஆர் சக்தி, ஐஐஏஸ்ஆர்தேவம், ஐஐஏஸ்ஆர் மலபார் எக்செல், உதிரன் கொட்டா மற்றும் பன்னியூர் 1,2,3,4,5 ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.
பன்னயூர் 5 இரகம் நிழலைத் தாங்கி வளரும் தன்மை கொண்டது. இது பொதுவாக பாக்குத் தோப்புகளில் வளர்க்க ஏற்றது. பன்னயூர் 1 மற்றும் கிரிமுண்டா இரகங்கள் வறட்சியை தாங்கி வளரக்கூடியது.
பருவம்
ஜீன் – டிசம்பர் மாதங்களில் மிளகு பயிரிடலாம். இதனை மானாவாரியாகவும் பயிர் செய்யலாம்.
மண்
நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண்ணில் நன்கு வளரும். களிமண் பூமியிலும், மணற்பாங்கான நிலங்களிலும் இப்பயிர் நன்கு வளராது. மண்ணின் கார அமிலத் தன்மை 4.5 முதல் 6.6 வரை இருந்தால் நல்லது. கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரம் வரையுள்ள அனைத்து மலைப்பகுதிகளிலும் இப்பயிர் நன்கு வளரும்.
விதைகள்
மிளகு பயிர் கொடிதுண்டுகள் மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது. ஒரு மீட்டர் நீளமுள்ள ஒரு கொடியினை தாய்ச்செடியிலிருந்து எடுத்து 2 அல்லது 3 கணுக்களுடன் கூடிய சிறு துண்டுகளாக வெட்டி பாலித்தீன் பைகளில் நடவு செய்ய வேண்டும். வேர் பிடித்த பின்பு இந்த துண்டுகளை நடவிற்குப் பயன்படுத்தலாம் அல்லது நாற்றங்கால் மூலம் நடவு செய்யலாம்.
நாற்றங்கால் தயாரிப்பு
நல்ல நிழலுடன், தண்ணீர் தேங்காமல் இருக்கும் பகுதிகளில் 1 மீட்டர் அகலம் மற்றும் 5.6 மீட்டர் அளவு நீளமும் கொண்ட உயரப் பாத்திகள் அமைக்க வேண்டும். மண்ணை நன்கு கொத்தி பின்பு ஒரு பாத்திக்கு 12 கிலோ தொழு உரம், 5 கிலோ மண்புழு உரம், 250 கிராம் உயிர் உரங்கள், 5 கிலோ மணல் மற்றும் 5 கிலோ செம்மண் கலந்து பாத்திகளைச் சீராக்க வேண்டும்.
நல்ல ஆரோக்கியமான தாய் கொடிகளின் அடிப்பகுதியில் வளரும் ஓடு கொடிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட துண்டுகளின் அருகில் ஒரு குச்சியை நட்டு ஓடு கொடிகளை மண்ணில் வேர்விடாமல் குச்சியில் சுருளுமாறு கட்டிவைக்க வேண்டும். பிப்ரவரி, மார்ச் மாதத்தில் 2 மீட்டர் நீளம் கொண்ட இத்தகைய ஓடுகொடிகளை தாய்க் கொடியில் இருந்து வெட்டி நீக்க வேண்டும். பின்பு ஓடுகொடியின் மேற்பகுதியில் மூன்றில் ஒரு பகுதியையும், கீழ்ப்பகுதியில் மூன்றில் ஒரு பகுதியையும் தவிர்த்து விட்டு நடுப்பகுதியை தண்டுத்துண்டுகள் (Cuttings) தயாரிப்பதற்காக தேர்ந்தெடுக்க வேண்டும். இளம் ஓடு கொடிகளையும், முதிர்ந்த ஓடு கொடிகளையும் தவிர்க்க வேண்டும்.
பின்னர் ஓடு கொடியிலிருந்து 2-3 கணுக்களை கொண்ட தண்டுத் துண்டுகளை சீராக கத்தியால் வெட்டி தயாரிக்க வேண்டும். இத்தகைய தண்டுத் துண்டுகளின் அடிப்பகுதியை பஞ்சகாவ்யா 3 சதம் கரைசலில் 30 நிமிடம் நனைத்து பின்பு பாத்திகளிலோ அல்லது பாலித்தீன் பைகளிலோ நட வேண்டும். பாலித்தீன் பைகளில் (7×5 அங்குல அளவு) ஒரு பாகம் வளமான மேல் மண், ஒரு பாகம் ஆற்று மணல், ஒரு பாகம் தொழுஉரம் மற்றும் ஒரு பாகம் மண்புழு உரம் கலந்த கலவையை நிரப்ப வேண்டும். அதில் ஒரு ஏக்கருக்கு தேவையான நாற்றங்கால் பாத்திகளில் 250 கிராம் அசோஸ்பைரில்லம், 250 கிராம் பாஸ்போ பாக்டீரியா போன்றவற்றை நன்கு கலக்க வேண்டும். உரக்கலவையை இடுவதற்கு முன்னரே தேவையான சிறிய துளைகளை பைகளில் இட வேண்டும். பாத்திகளிலும், பாலித்தீன் பைகளிலும் தண்டு துண்டுகளை நட்ட பின்னர் போதிய நீர் விட்டு நிழலில் வைக்க வேண்டும். இரு முறை தேவையான அளவு நீரை பூவாளியால் ஊற்ற வேண்டும். வளரும் சிறு பதியன்கள் 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி பஞ்சகாவ்யா என்ற அளவில் கலந்து 15 நாட்களுக்கு ஒரு முறை ஊற்ற வேண்டும். பந்தல் அல்லது மூங்கில் தப்பைகள், பாலித்தீன் உறைகளை கொண்டு கூடாராம் அமைத்து அதில் பாலித்தீன் பைகளை வரிசையாக அடுக்க வேண்டும். பாலித்தீன் பையில் நடப்பட்ட துண்டுகள் மூன்றாம் வாரத்தில் வேர்விடத் தொடங்கி நடுவதற்கு தயாராகிவிடும்.
நிலம் தயாரித்தல்
இதற்கு நிழல் மிகவும் அவசியம். எனவே இதனை தனி பயிராக சாகுபடி செய்ய முடியாது. தென்னை, பாக்கு தோட்டங்களில் இதனை வளர்க்கலாம். ஆகவே இதற்கான நிலம் தயாரிக்க வேண்டிய அவசியம் இல்லை.
நடவு செய்தல்
தென்னை மரம் என்றால், ஒரு மரத்துக்கு இரு கன்றுகள் வீதமும், பாக்கு என்றால் ஒரு மரத்துக்கு ஒரு கன்று வீதமும் மிளகை நடவு செய்ய வேண்டும். மிளகுக் கொடிகள் இந்த மரங்களைப் பற்றிக் கொண்டு வளர்ந்துவிடும். தென்னையின் அடிப்பகுதியில் வேர்கள் இறுக்கமாக இருக்கும் என்பதால், மரத்திலிருந்து இரண்டரை முதல் மூன்று அடி தூரம் தள்ளி மிளகுக் கன்றுகளை நடவு செய்ய வேண்டும். அதேசமயம் கொடிகள் மரத்தை எட்டிப் பிடிக்க, ஏதுவாக சிறு குச்சிகளை அருகில் ஊன்றி வைக்க வேண்டும். கொடிகள் தென்னை மரத்தில் படர ஆரம்பித்தபின் அவற்றை எடுத்துவிட்டு, தரையோடு தரையாகக் கொடியை வைத்து, மண்ணால் மூடி மரத்துக்கு அருகில் இருந்தே கொடி முளைத்து ஏறுவது போல் செய்ய வேண்டும். இதனால் மண்ணுக்குள் இருக்கும் கொடிப்பகுதியில் புதிய வேர்கள் உருவாகும்.
நீர் நிர்வாகம்
நட்டவுடன் நீர்ப் பாய்ச்ச வேண்டும். பின்னர் வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தண்ணீர் அதிகம் பாய்ச்சுவதும் ஆபத்தானது. ஏனெனில் கொடிகள் செழிப்பாக வளர்ந்தால் காய்க்கும் திறன் குறைவாக இருக்கும். இது நிழல் பகுதியில் வளர்வதால் தண்ணீர் தேவையை உணர்ந்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
உரங்கள்
கொடிகள் நன்கு வளர்ந்த பின்பு ஒரு வருடத்திற்கு, ஒரு கொடிக்கு நன்கு மட்கிய தொழு உரம் 5 கிலோ மற்றும் மண்புழு உரம் 5 கிலோ என்ற அளவில் மே – ஜீன் மற்றும் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் மண்ணில் இட வேண்டும். உதிர்ந்த இலைகளை மூடாக்காக போட வேண்டும். அதுவே சிறந்த உரமாக மாறிவிடும்.
இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கொடிக்கு 500 கிராம் சுண்ணாம்பு அல்லது டாலமைட் இட வேண்டும்.
பாதுகாப்பு முறைகள்
களை நிர்வாகம்
கொடிகள் நன்கு வளரும் வரை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். ஜீன் – ஜீலை மற்றும் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் இரண்டு முறை களை எடுக்க வேண்டும்.
கவாத்து செய்தல்
மிளகுக் கொடிகளின் நுனியைக் கிள்ளி விடுவதன் மூலம் பக்கக் கிளைகள் அதிகமாக வளரும். முதல் இரு வருடங்களில் மிளகுக் கொடியில் காய்க்கும் அனைத்து பூங்கொத்துக்களையும் உருவி நீக்கிவிட வேண்டும். அத்துடன் மிகுதியான பக்கக் கிளைகளை உருவாக்க தேர்ந்தெடுக்கப்பட்ட இலைகளையும் கிள்ளிவிட வேண்டும். மிளகுக் கொடி படர் மரங்களின் உயரத்தைத் தொடும் அளவிற்கு வந்தவுடன், மேலும் பற்றிப்படர படர் மரம் இல்லாததால் கொடிகள் கீழ்நோக்கித் தொங்கிக் கொண்டிருக்கும். அவற்றை அப்புறப்படுத்தி, தண்டுகளை நாற்றுக்களாக உற்பத்தி செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்.
பயிர் பாதுகாப்பு
பூச்சி மற்றும் வண்டு தாக்குதல்
பொல்லு வண்டு, இலை சுருட்டு தத்துப் பூச்சி மற்றும் இலைப்பேன் தாக்குதல் உள்ள இடங்களில் ஜீலை மற்றும் அக்டோபர் மாதங்களில் காய்ப்பிடிக்கும் போது வேப்ப எண்ணெயை (400 மி.லியை 100 லிட்டர்) நீரில் கரைத்து தெளிக்க வேண்டும். மேலும் பஞ்சகாவ்யா 3 சத கரைசலை 15 நாட்கள் இடைவெளியில் 3 முறை தெளிக்க வேண்டும்.
நூற்புழுக்கள்
ஒரு செடிக்கு 100 கிராம் என்ற அளவில் வேப்பம் புண்ணாக்கினை, தொழு உரத்துடன் கலந்து இட்டு நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.
அடி அழுகல் நோய்
டிரைக்கோடெர்மா, சூடோமோனாஸ் கலவையை வருடத்திற்கு ஒரு கொடிக்கு, 50 கிராம் என்ற அளவில் இடுவதன் மூலம் இந்நோயை கட்டுப்படுத்தலாம்.
அறுவடை
மிளகு நட்ட மூன்றாம் ஆண்டில் காய்க்கத் தொடங்கி ஆறு ஆண்டுகளில் கொடிகள் நல்ல மகசூல் கொடுக்கத் துவங்கும். மிளகு பூக்க ஆரம்பித்த பின் 6 முதல் 7 மாதங்களில் அறுவடைக்குத் தயாராகிவிடும். சமவெளிப் பகுதிகளில் அறுவடைக்காலம் நவம்பர் முதல் ஜனவரி வரை இருக்கும். மலைப்பகுதிகளில் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை இருக்கும். நன்கு முற்றிய மிளகுக் காய்களை பழுப்பதற்கு முன்பே அறுவடை செய்ய வேண்டும். கைகளினால் அறுவடை செய்ய வேண்டும். அறுவடை செய்த காய்களை துளையிடப்பட்ட அலுமினியப் பாத்திரம் (அல்லது) மூங்கில் கூடையில் வைத்து, 80 சென்டிகிரேடு கொதி நீரில் 1 நிமிடம் மூழ்கவைத்து பின்னர் 7-10 நாட்கள் சூரிய ஒளியில் உலர்த்த வேண்டும். காய்களை அவ்வப்போது கிளறி விட வேண்டும். காய்களை கிளறாமல் விட்டால் பூஞ்சாண வளர்ச்சி ஏற்படும்.
மகசூல்
ஒரு வருடத்திற்கு ஒரு கொடியிலிருந்து 2 முதல் 3 கிலோ உலர்ந்த மிளகு கிடைக்கும்.
பயன்கள்
- மிளகுடன் பனை வெல்லம் கலந்து காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைப்பாரம், தலைவலி போன்றவை குணமாகும்.
- 10 மிளகை தூளாக்கி அரை லிட்டர் நீர் விட்டு காய்ச்சி கசாயமாக செய்து குடிக்க கோழை மற்றும் இருமல் தீரும்.
- மிளகு சேர்க்கப்பட்ட உணவு உடலில் உள்ள வியர்வைகளை வெளியேற்றுவதுடன், எளிதில் சிறுநீரை கழிக்கவும் உதவுகிறது.
- அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், அமிலச்சுரப்பு போன்றவற்றை மிளகு தடுக்கிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.
- கருப்பு மிளகை நன்றாக பொடி செய்து ஒரு கப் தயிருடன் கலந்து அந்தக் கலவையை தலையில் பரவலாகத் தடவ தலையில் உள்ள பொடுகு ஒழியும்.
- கருமிளகு மனச்சோர்வையும், களைப்பையும் போக்குகிறது. மூளையின் அறிதல் செயல்பாட்டையும் அதிகரிக்கிறது.
Manivannan says
Please tell contact number for every plants how to buy my area thanjavur tamilnadu
Ashok says
Sir… Pepper plant vandhu karisalmal LA valaradha sir??
வெங்கடேசன் says
மிளகு விதை மூலம் கொடிகள் வளர வைக்க முடியுமா? மிளகு கொடி எங்கு கிடைக்கும் தகவல் தரவும். நன்றி.