வெள்ளரிக்காய் ஒரு கொடிவகை தாவர வகைகளில் ஒன்று.
வெள்ளரி உற்பத்தியில் சீனா முதலிடம் வகிக்கிறது.
இது உடலுக்கு குளிர்ச்சியை தருவதால் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு காயாகும்.
எப்படி பயிரிடுவது…?
இரகங்கள் :
கோ.1, ஜப்பானி லாங் கிரின், ஸ்ரோயிட் எய்ட், பாயின்செட்டி ஆகிய இரகங்கள் உள்ளன.
பருவம்
கோடைக்காலத்தில், பிப்ரவரி – மார்ச் மாதத்திலும் மழைக்காலத்தில் ஜீலை மாதத்திலும் பயிர் செய்யலாம்.
மண்
வெள்ளரிக்காயை களிமண்ணிலிருந்து மணல் கலந்த வண்டல் மண் வரை அனைத்து வகையான நிலங்களிலும் சாகுபடி செய்யலாம். மிதமான வெப்பமும், காற்றில் அதிக ஈரப்பதமும் இதன் வளர்ச்சிக்கு ஏற்றது. சிறந்த மகசூலுக்கு கார அமிலத்தன்மை 6.5-7.5 இருக்க வேண்டும்.
நிலம் தயாரித்தல்
விதைகளை நடவு செய்வதற்கு, நிலத்தை குறுக்கு – நெடுக்காக நான்கு முதல் ஐந்து உழவு செய்ய வேண்டும். பின்பு, எட்டுக்கு எட்டு அடி இடைவெளி கொடுத்து, நீளம், அகலம், ஆழம் அனைத்தும் ஒரு அடி இருக்கும் வகையில் குழி எடுக்க வேண்டும். ஏக்கருக்கு 550 முதல் 600 குழிகள் வரை கிடைக்கும். ஒவ்வொரு குழிக்கும் 2 கிலோ எருவைப் போட்டு, மேல்மண் கொண்டு மூடிவிட வேண்டும்.
விதைநேர்த்தி
வடித்தக் கஞ்சியில் 100 கிராம் அசோஸ்பைரில்லம், 100 கிராம் டிரைக்கோடர்மா விரிடி ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். விதைகளை இந்தக் கரைசலில் 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
விதைத்தல்
விதைநேர்த்தி செய்த விதைகளை அரைமணி நேரம் நிழலில் உலர்த்தி, குழிக்கு ஜந்து விதைகள் வீதம் நடவு செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம்
விதைகள் விதைத்த மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் விடவேண்டும். நன்கு முளைத்தவுடன் ஒரு தண்ணீரும், அதன் பின் வாரம் ஒரு முறையும் வாய்க்கால்களின் வழியாக தண்ணீர் பாய்ச்சவேண்டும். கூடவே, ஏக்கருக்கு 10 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலையும் தண்ணீரோடு கலந்துவிட்டால் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
உரங்கள்
விதைத்த 30 ஆம் நாளில் செடிகளை கொத்திவிட்டு மேல் உரமாக 50 கிராம் யூரியாவை ஒவ்வொரு குழிக்கும் இட்டு நீர்ப்பாய்ச்ச வேண்டும்.
அல்லது 30 – ம் நாளில் இருந்து தொடர்ந்து பத்து நாள் இடைவெளியில் பத்து லிட்டர் டேங்குக்கு அரை லிட்டர் பஞ்சகாவ்யாவை கலந்து தெளித்தால், செடிகளின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
வளர்ச்சி ஊக்கி
செடிகளில் பெண் பூக்களின் எண்ணிக்கையை அதிகரித்து விளைச்சலை அதிகரிக்க எத்ரல் என்ற வளர்ச்சி ஊக்கியை 10 லிட்டர் நீரில் 2.5 மில்லி என்ற அளவில் கலந்து விதைத்த 15ம் நாளிலிருந்து வாரம் ஒரு முறை நான்கு முறை தெளிக்கவேண்டும்.
பாதுகாப்பு முறைகள்
களை நிர்வாகம்
விதைத்த 20-25 ஆம் நாளும், பின்னர் ஒரு மாத இடைவெளியிலும் களை எடுக்கவேண்டும்.
பயிர் பாதுகாப்பு
பழ ஈக்கள் மற்றும் வண்டுகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்த மாலத்தியான் மருந்தை ஒரு லிட்டர் நீரில் இரண்டு மில்லி என்ற அளவில் தெளிக்கவேண்டும்.
சாம்பல் நோய்
இதை கட்டுப்படுத்த கார்பென்டாசிம் 0.1 சதம் என்ற அளவில் தெளிக்கவேண்டும். டிடிடீ, பிஎச்சி, தாமிரம் மற்றும் கந்தகப்பவுடர் போன்ற மருந்துகளை உபயோகப்படுத்தக்கூடாது.
அறுவடை
விதைத்த 45 நாட்கள் கழித்து காய்களை அறுவடை செய்யலாம். மொத்தம் 8 முதல் 10 முறை அறுவடை செய்யலாம்.
மகசூல்
எக்டருக்கு 90 நாட்களில் 8 முதல் 10 டன்கள் வரை பிஞ்சுக் காய்கள் கிடைக்கும்.
பயன்கள்
- 95 சதவீத நீர் சத்துடன், சாதாரண நீரை விட சத்து மிகுந்த நீரைக் கொண்டிருப்பதால் உடல் வெப்ப நிலையையும், நீர்ச்சத்தையும் சீராகப் பராமரித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.
- வெள்ளரியில் உள்ள வைட்டமின்களும், மாங்கனீசு, பொட்டாசியம், சிலிக்கான் ஆகிய தாதுக்கள், தோல் பாதுகாப்புக்கு உதவுகின்றன.
- வெள்ளரிச் சாற்றில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்து ஆகியன ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க உதவுகின்றன.
- வாய் துர்நாற்றத்தைப் போக்கவும், பல், ஈறுகளைப் பாதுகாக்கவும் வெள்ளரி உதவுகிறது. சீரண மண்டலத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல், குடல்புண் ஆகியவற்றைக் குணமாக்கி ஜீரணத்திற்கு உதவுகிறது. மேலும் மலச்சிக்கலைப் போக்கும் தன்மை கொண்டது.
- வெள்ளரி விதைகள் நாடாப்புழுக்களை வெளியேற்ற உதவுகிறது.
- இதில் உள்ள சிலிகான், மூட்டுத் தசைகளுக்கு வலு அளிப்பதாலும், வைட்டமின்கள் ஏ, பி6, சி, போலேட், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியன யூரிக் அமில அளவைக் குறைப்பதாலும், மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கிறது.
- இன்சுலினைச் சுரக்கும் கணைய செல்களுக்கு தேவைப்படும் வளர்ச்சி ஊக்கி (ஹார்மோன்) வெள்ளரியில் உள்ளது. இதனால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் வெள்ளரி இனியது.
Yogesh says
வெள்ளரியின் கரு(EMBRYO) details send pannunga sir
Navinkumar V says
கண்டிப்பாக பதிவிடுகிறேன் என்னை தொடர்புகொள்ளுங்கள். 8050815727