கனகாம்பரம் குறுஞ்செடி வகையைச் சார்ந்தது.
இம்மலர்த்தாவரம் தென்னிந்தியா, இலங்கை மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.
இதன் சிறப்பம்சம் அதன் மலர்கள் காவி, இளஞ்சிவப்பு, மஞ்சள் போன்று கண்ணைக்கவரும் வண்ணங்களில் காட்சித் தருவதேயாகும்.
இவை ஆண்டுத்தோறும், எக்காலமும் குறிப்பிடாமல் என்றும் பூக்கும் தாவரமாகும்.
இதை வீடுகளில் அழகுக்காகவும், வணிகத்திற்காகவும் வளர்க்கிறார்கள்.
கனகாம்பரம் எப்படி பயிரிடுவது…?
இரகங்கள் :
சிகப்பு, ஆரஞ்சு, டெல்லி கனகாம்பரம் மற்றும் பச்சை கனகாம்பரம் ஆகிய இரகங்கள் உள்ளன. இதில் பச்சை கனகாம்பரம் அழகிற்காக மட்டுமே வளர்க்கப்படுகிறது.
பருவம்
ஆவணியிலிருந்து தை மாதம் வரை கனகாம்பரத்தை நடவு செய்யலாம். ஆனால் கார்த்திகைப் பட்டம் சிறந்தது. கோடைக்காலங்களில் நடவு செய்யக் கூடாது.
மண்
நல்ல வடிகால் வசதியுள்ள மணல் கலந்த வண்டல் மண் மற்றும் செம்மண் ஏற்றது. மண்ணின் அமிலக் காரத் தன்மை 6 முதல் 7.5க்குள் இருக்கவேண்டும்.
விதையளவு
ஒரு எக்டருக்கு 5 கிலோ விதை தேவைப்படும். விதைக்காக பயிரிடுவதற்கு 60 x 60 செ.மீ இடைவெளி தேவைப்படும். டெல்லி கனகாம்பரம் இரகத்திற்கு 60 x 40 செ.மீ இடைவெளி தேவைப்படும்.
நாற்றங்கால் தயாரித்தல்
நிலத்தினை நன்கு உழுது தேவையான அளவுகளில் பாத்திகள் அமைத்துக் கொள்ள வேண்டும். பின்பு பாத்திகளில் ஒரு செ.மீ ஆழத்தில் விதைகளை விதைத்து, மணல் கொண்டு மூடிவிடவேண்டும். விதைகள் முளைக்கும் வரை தினமும் நீர்ப்பாய்ச்ச வேண்டும். விதைகள் விதைத்த 60ம் நாளில் நடவுக்குத் தயாராகிவிடும்.
நிலம் தயாரித்தல்
தேர்வு செய்த நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழுது பண்படுத்த வேண்டும். கடைசி உழவின் போது எக்டருக்கு 25 டன் மக்கிய தொழு எரு இட்டு மண்ணுடன் நன்கு கலந்துவிடவேண்டும். பின்னர் தேவைக்கேற்ப பார்கள் அமைத்துக் கொள்ள வேண்டும்.
விதைநேர்த்தி
நிலத்தில் நாற்றுக்களை நடும்முன் எமிசான் (1 கிராம் / லிட்டர் ) கரைசலில் நனைத்து நடவேண்டும். இதன்மூலம் நாற்றுகள் இறப்பை கணிசமாக குறைக்க முடியும்.
விதைத்தல்
60 நாட்கள் ஆன நாற்றுக்களை 60 செ.மீ இடைவெளியில் பார்களில் நீர் பாய்ச்சி நடவு செய்யவேண்டும்.
நீர் நிர்வாகம்
வாரம் ஒரு முறை நீர்பாய்ச்ச வேண்டும். நிலத்தில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். நிலத்தில் ஈரத்தன்மை அதிகமாக இருந்தால் வேர் அழுகல் நோய் ஏற்படும். எனவே சீராக நீர் பாய்ச்சுவது அவசியம்.
கனகாம்பரம் உரங்கள்:
தேர்வு செய்த நிலத்தில் அடியுரமாக எக்டருக்கு 25 டன் தொழு உரம் கடைசி உழவின் போது இடவேண்டும். செடிகள் நட்டு மூன்று மாதங்கள் கழித்து எக்டருக்கு 75 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து, 125 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை இடவேண்டும். இந்த உர அளவை ஒவ்வொரு ஆறு மாதகால இடைவெளியிலும் கொடுக்கவேண்டும். இவ்வாறு இரண்டு வருடங்கள் வரை தொடர்ந்து இடவேண்டும். செடிகள் நட்ட மூன்று மாதங்கள் கழித்து அஸ்கார்பிக் அமிலம் 1000 பிபிஎம் என்ற அளவில் தெளித்தால் மகசூல் அதிகரிக்கும்.
டெல்லி கனகாம்பரத்திற்கு செடிகள் நட்ட 30 நாட்கள் கழித்து எக்டருக்கு வேப்பம் புண்ணாக்கு 250 கிலோ, தழைச்சத்து 40 கிலோ கொடுக்கக்கூடிய உரங்களை இடவேண்டும். பிறகு 90 நாட்கள் கழித்து 40:20:20 கிலோ என்ற விகிதத்தில் தழை, மணி, சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை 3 மாதங்களுக்கு ஒரு முறை கொடுக்கவேண்டும்.
கனகாம்பரம் பாதுகாப்பு முறைகள்:
களை நிர்வாகம்
செடிகள் நட்டவுடன் முதல் மாதத்தில் ஒரு களை எடுக்க வேண்டும். செடிகள் வளர்ந்தவுடன் களைகள் அதிகம் தோன்றாது.
பயிர் பாதுகாப்பு
நூற்புழு
நூற்புழுவை கட்டுப்படுத்த நிலத்தில் ஈரம் இருக்கும்போது செடிகளின் வேர்ப்பகுதியில் போரேட் அல்லது கார்போப்யூரான் குருணை மருந்தினை இடவேண்டும்.
வாடல் நோய்
வாடல் நோய் தென்பட்டால் எமிசான் மருந்தினை லிட்டர் நீருக்கு ஒரு கிராம் வீதம் கரைத்து செடிகளைச் சுற்றி வேர்ப்பாகத்தில் ஊற்றிவிடவேண்டும்.
அசுவினி தாக்குதல்
அசுவினிப் பூச்சிகளை கட்டுப்படுத்த டைமித்தோயேட் மருந்தினை ஒரு லிட்டர் நீருக்கு ஒரு மில்லி வீதம் கலந்து தெளிக்கவேண்டும்.
அறுவடை
செடிகள் நட்ட ஒரு மாதம் கழித்து பூக்கள் பூக்க ஆரம்பித்து விடும். நன்கு மலர்ந்த மலர்களை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பறிக்கவேண்டும்.
மகசூல்
ஒரு வருடத்தில் ஒரு எக்டருக்கு 2000 கிலோ மலர்கள் கிடைக்கும். டெல்லி கனகாம்பரம் இரகத்தில் ஒரு எக்டருக்கு ஒரு வருடத்தில் 2800 கிலோ மலர்கள் வரை கிடைக்கும்.
கனகாம்பரம் பயன்கள்:
- மாலைகளில் பிற மலர்களுடன் சேர்த்துப் பிண்ணவும், வழிபாட்டின் போது பயன்படுகிறது.
- அலங்காரப் பொருட்களிலும் கனகாம்பரம் பூவை பயன்படுத்தலாம்.
- கனகாம்பரம் பூவை தலையில் சூடுவதால் தலைவலி, ஒற்றை தலைவலி வருவதில்லை.
- கனகாம்பரம் மாலை அணியும் போது நம் இருதயத்தின் சக்தியால் இது உடல் முழுவதும் பரவுகிறது. பிராண சரீரம் பலம் பெறுகிறது. இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படுகிறது.
கனகாபரம் ஊடு பயிராக சம்பங்கி தோட்டத்தில் பயிரிடலாமா???
பயிரிடலாம்
உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை எங்களின் முகப்புத்தக குழுவில் எங்களிடம் கேட்கலாம். நாங்கள் உங்கள் சந்தேகங்களுக்கு உடனுக்குடன் பதில் அளிக்கிறோம்.
இது நம்முடைய முகப்புத்தக குழு. இங்கு உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்
https://www.facebook.com/groups/agriculturetripiyarkaivivasayam