பேரிக்காய் ஆசியா மற்றும் ஐரோப்பா பகுதிகளை தாயகமாகக் கொண்டவை.
சீனா, இத்தாலி, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் இது பெரிதும் பயிரிடப்படுகிறது.
தமிழ்நாட்டின் சில இடங்களிலும், இலங்கையின் மலைநாட்டுப் பகுதிகளிலும், இந்தோனேஷியா உட்பட தென்கிழக்காசிய நாடுகளிலும் இது பயிரிடப்படுகிறது.
எப்படி பயிரிடுவது…?
இரகங்கள் :
வில்லியம், கீஃபர், நாட்டு பேரீ, நியூ பேரீ மற்றும் ஜார்கோ நெலி போன்ற இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.
மண்
நல்ல வடிகால் வசதியுடைய செம்மண் மற்றும் களிமண் நிலங்கள் பயிரிட ஏற்றது. மண்ணின் கார அமிலத்தன்மை 5.8 முதல் 6.2 வரை இருக்கவேண்டும்.
பருவம்
ஜீன் முதல் டிசம்பர் மாதம் வரை நடவுக்கு ஏற்ற பருவம் ஆகும்.
நிலம் தயாரித்தல்
சாகுபடிக்கு தேர்வு செய்த நிலத்தினை நன்கு உழுது சமன்படுத்திக் கொள்ள வேண்டும். பின்பு அதில் நீளம், அகலம் மற்றும் ஆழம் முறையே 60 செ.மீ x 60 செ.மீ x 60 செ.மீ அளவுள்ள குழிகளை எடுக்க வேண்டும். அதில் தொழுஉரத்தை மேல்மண்ணுடன் கலந்து இட்டு குழிகளை நிரப்பி ஆறவிட வேண்டும்.
விதை
நடவு செய்வதற்கு ஒட்டு கட்டிய செடிகள் மற்றும் வேர் பிடித்த குச்சிகளை பயன்படுத்த வேண்டும்.
விதைத்தல்
குழிகளுக்கிடையே உள்ள இடைவெளி 5 x 5 மீட்டர் அல்லது 6 x 6 மீட்டர் இருக்குமாறு கன்றுகளை குழியின் மத்தியில் நடவு செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம்
நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். செடிகள் நன்கு வளரும் வரை வாரம் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு மண்ணின் தன்மைக்கேற்ப நீர் பாய்ச்ச வேண்டியது அவசியம்.
உரங்கள்
காய்க்கும் மரங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 25 கிலோ தொழு உரம், 500 கிராம் தழைச்சத்து, 1 கிலோ சாம்பல் மற்றும் மணிச்சத்து அளிக்கவேண்டும். மேலும் 20 கிராம் யூரியாவை கலந்து அளிக்க வேண்டும். இதையே இரண்டாக பிரித்து அளிக்கலாம்.
பாதுகாப்பு முறைகள்
களை நிர்வாகம்
செடிகளை சுற்றி களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் கவாத்து செய்தல் மிகவும் அவசியம். மரங்கள் ஓரளவு வளர்ந்தவுடன் நடுக்கிளையின் நுனியை வெட்டி, பக்க கிளைகளின் வளர்ச்சியை அதிகப்படுத்த வேண்டும்.
பயிர் பாதுகாப்பு
பேரிக்காயை அதிக பூச்சிகளோ, நோய்களோ தாக்குவது இல்லை. எனினும் நோய்த் தடுக்கும் விதமாக, கவாத்து செய்தபின் காப்பர் பூஞ்சாணக் கொல்லி அல்லது மீத்தைல் டெமட்டான் ஒருமுறை தெளிப்பது நல்லது.
அறுவடை
குறுகிய கால இரகங்கள் மே – ஜீன் மாதங்களில் அறுவடைக்கு வரும். நீண்ட கால இரகங்கள் ஜீலை – அக்டோபர் மாதங்களில் அறுவடைக்கு தயாராகி விடும்.
மகசூல்
ஒரு வருடத்திற்கு மரம் ஒன்றில் இருந்து, நாட்டு பேரீ 100 முதல் 120 கிலோ, கீஃபர் மற்றும் நியூ பேரீ 70 முதல் 80 கிலோ வில்லியம் மற்றும் ஜார்கோநெலி 30 முதல் 40 கிலோ மகசூல் கிடைக்கும்.
பயன்கள்
- தினமும் ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் விரைவில் குணமாகும்.
- இதயப் படபடப்பு உள்ளவர்கள் தினமும் இருவேளை ஒரு பேரிக்காய் வீதம் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும்.
- பேரிக்காயில் உள்ள நார்ப் பொருட்கள் குடல் புற்றுநோய்க்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகின்றன.
- எலும்புகள் மற்றும் பற்கள் பலவீனமாக உள்ளவர்கள் பேரிக்காய் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
- கர்ப்பிணி பெண்கள் அன்றாட உணவில் பேரிக்காய் சேர்த்து உண்டு வந்தால், பிறக்கும் குழந்தை வலுவாக பிறக்கும். மேலும், இது தாய்ப்பால் தரும் தாய்மார்களுக்கும் பால் சுரக்க உதவுகிறது.
- பேரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை மற்றும் கொழுப்பின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

Thanks
Looking New
Nattu Perikkai kanrugal/plant vendum…engu kidaikkum? please share the details