நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித்தோட்டத்தில் பாலக்கீரை பயிரிடும் முறை யை இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்
- Grow Bags அல்லது Thotti
- அடியுரமாக இட மணல், தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம், செம்மண், பஞ்சகாவ்யா.
- விதைகள்
- பூவாளி தெளிப்பான்
தொட்டிகள்
இதற்கு தொட்டி அல்லது பைகளை எந்த வடிவமாக இருந்தாலும் பயன்படுத்தலாம். அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு இயற்கை உரம் ஆகியவற்றை கொண்டு தொட்டியை நிரப்ப வேண்டும். கீரைகள் வளர்ப்பதற்காக பைகளில் நிரப்பும்போது, அரை அடி ஆழத்திற்கு மேல் நிரப்பினால் போதுமானது.
விதைத்தல்
விதைகளை மணல் கொண்டு கலந்து பைகளில் தூவி கிளறி விட வேண்டும். விதைகள் சிறியதாக இருப்பதால் மணல் கொண்டு விதைத்தால் சீராக விழும். பின்னர் அதில் நிரப்பியுள்ள கலவையை கொண்டு மெல்லிய போர்வை போல் அமைக்க வேண்டும். விதைகளின் மீது செய்திதாள்களை கொண்டு மூடி விட வேண்டும். விதைகள் முளைத்தவுடன் நீக்கி விடலாம்.
நீர் நிர்வாகம்
விதைத்தவுடன் பூவாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும். பின்னர் தினமும் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
உரங்கள்
காய்கறி கழிவுகள், டீத்தூள், முட்டை ஓடு ஆகியவற்றை மக்கச்செய்து உரமாக போடலாம்.
பஞ்சகாவ்யா 10 மில்லியை இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து வாரம் ஒரு முறை ஊற்ற வேண்டும்.
பாதுகாப்பு முறைகள்
அதிகளவு வெய்யில் படுவதால் கீரைகள் வாடி விடும். இதை ஈடுகட்ட கீரை வளர்க்கும் பகுதியைச் சுற்றிலும் வலை அமைக்கலாம். இல்லையெனில் சிறிது நிழல் விழும் இடத்தில் மாற்றி வைக்கலாம்.
இலைகளில் பூச்சி தாக்குதல் காணப்பட்டால் வேப்பந்தூளை தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும். இது சிறந்த பூச்சி விரட்டியாக செயல்படும்.
அறுவடை
கீரைகளை முற்றி விடாமல் இளம் தளிராக இருக்கும் போது அறுவடை செய்ய வேண்டும். இது ஒருமுறை அறுவடை செய்யப்படும் கீரையாகும். எனவே சரியான பருவத்தில் கீரையை முழுவதும் அறுவடை செய்ய வேண்டும்.
பயன்கள்
- வைட்டமின் A அதிக அளவில் உள்ளதால் மாலைக்கண் மற்றும் கண்களில் அரிப்பு ஏற்படுதல் போன்றவற்றை வராமல் தடுக்க உதவுகிறது.
- இதில் இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின், போலிக் அமிலம், கால்சியம் போன்றவை இதில் அடங்கியுள்ளன.
- போலிக் அமிலம் அதிகளவில் உள்ளதால் கர்பிணிகள் இதனை அதிகம் எடுத்துக் கொண்டால் நல்லது மற்றும் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்களும் இதனை சாப்பிட்டால் பால் அதிகம் சுரக்க உதவுகிறது.
- மெக்னீசியம், காப்பர் மற்றும் வைட்டமின் கே அதிகளவில் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக உதவுகிறது.
- இக்கீரை இரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்வதால் அனிமீயா நோய் வராமல் இருக்க உதவுகிறது.
- இதன் சாற்றை வடிகட்டி 3 துளி காதில் விட்டால் காதில் இரைச்சல் இருப்பதைக் குணப்படுத்தும்.
Leave a Reply