“ஆடிப்பட்டம் தேடி விதை” – இது பழமொழி.
விளைநிலங்களுக்கான முதல் மழையைக் கொண்டுவரும் மாதம் ஆடி. ஆறுகளில் புது வெள்ளம் பாயும். இது புதிய விளைச்சலுக்குக் ஏதுவாக இருக்கும். விவசாயிகள் புதுவெள்ள நீரைத் தொழுது தங்கள் உழவுப் பணிகளைத் தொடங்குவர். இதனால்தான் நம் முன்னோர்கள் ஆடிப்பட்டம் தேடி விதை என்னும் பழமொழியை கூறியுள்ளார்கள்.
மேலும் ஆடி மாதத்தில் ஓரிரு முறை வயலுக்கு தண்ணீர் பாய்ச்சினால் போதும், புரட்டாசியில் இருந்து தொடர்ச்சியாக கிடைக்கும் மழையின் உதவியால் பயிர் வளர்ந்துவிடும். இந்த மாதத்தில்தான் மண்ணில் விழும் விதைகள் முழுமையாக முளைக்கத் தேவையான அருமையான தட்பவெப்ப சூழ்நிலை நிலவும்.
ஆடி 18-ம் தேதியும், அதற்குப் பிறகு விதைக்கும் விதைகள் நன்றாக முளைக்கும். தண்ணீர் பாய்ச்சி பயிர் செய்வதென்றால் குறுவை சாகுபடியில் நெல் விதைக்க தொடங்குவார்கள். ஆனால், மானாவாரி பயிர்களுக்கு ஆடிப்பட்டம் மிகவும் சிறந்த பட்டமாகும்.
கடும் கோடையில் இறுகி காணப்படும் மண், ஆனி மாத மிதமான மழையால் இளகத் தொடங்கிவிடும். ஈரமான வயல் மண்ணில் நுண்ணுயிரிகளும், மண் புழு, நத்தைகளும் உருவாகத் தொடங்கும். இதனால் மண் செழிப்பை பெறத்தொடங்கி விடும்.
புதிதாக முளைத்த சிறு செடிகளை மேய வரும் கால்நடைகளின் கழிவுகளும் மண்ணில் சேர்ந்து உரமாகும். இதனால் செழிப்பான மண் உழவுக்குத் தயாராகும்.
நமது பேஸ்புக் குழுவில் இணைந்து உங்கள் விவசாய சந்தேகங்களை கேட்க விரும்பும் நண்பர்கள் கீழுள்ள லிங்கில் இணையவும் FACEBOOK குரூப்பில் இணைய கிளிக் செய்யவும்
தமிழகத்தில் ஆனி, ஆடி, ஆவணி என்ற மூன்று மாதங்களே மிதமான மழை பொழியும் மாதம் என்பதால், இவைதான் வேளாண்மைக்கான மாதங்கள் எனப்படுகிறது. காரணம் அந்த மாதங்களில் பெரும்பாலும் நீர்ப்பற்றாக் குறை இருக்காது என்பதால்தான். அதிலும் ஆடியில் விதை விதைப்பது அற்புதமான விளைச்சலைத் தரும் என்பது பன்னெடுங்காலமாக விவசாயிகளிடையே இருந்து வரும் நம்பிக்கை. அதிலும் ஆடியில் விதைக்கப்படும் காய்கறிகள், கீரைகள், பழச்செடிகள் நல்ல விளைச்சலைத் தருகிறது என்பது கண்கூடாகப் பார்க்கிறோம்.
200 வகையான காய்கறிகள், பழங்கள், கீரைகள், மாடித்தோட்டம் பற்றிய தகவலை ஒரே இடத்தில அறிய விரும்பும் நண்பர்கள் இந்த லிங்கில் சென்று படிக்கவும். 200 காய்கறிகள், பழங்கள், கீரைகள், மாடிதோட்ட குறிப்புகள் அறிய கிளிக் செய்யவும்
இந்த மாதத்தில் விதைத்தால் பிந்தைய மாதங்களில் அதிக செலவோ, இழப்போ இருக்காது, பூச்சிகள், நோய்க்கிருமிகளின் தாக்கம் குறைவாக இருக்கும் என்பதும் ஒரு காரணம். கறையான்கள் அதிகம் உண்டாவதும் இந்த மாதத்தில் என்பதால், மண் அரிக்கப்பட்டு மென்மையாகி வளம் பெறுகிறது. விட்டு விட்டுப் பெய்யும் ஆடிமாத மழை விதைகள் வளர நல்ல சூழலை உருவாக்குகிறது. குறிப்பாக சிறப்பான ஆடி 18-ம் நாளும் அதன் பின்னர் வரும் நாள்களும் விதை விதைப்பதற்கு ஏற்ற காலமாக இருக்கிறது. எனவே, இந்த நாள்களை பெரியோர்கள் ஆடிப்பட்டம் என்றே அழைத்தனர். அதனால்தான் ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழி உருவானது.
ஆடியில் நடவுக்கு ஏற்ற பயிர்கள் :
உளுந்து, சோளம், கம்பு, குதிரைவாலி உள்ளிட்ட தானியங்கள் விதைக்கலாம். குறிப்பாக, சாமை விதைப்புக்கு ஏற்ற அருமையான பட்டம். அவரை, கத்திரி, தக்காளி போன்ற காய்கறி பயிர்களைச் சாகுபடி செய்யலாம். “வாழை” நடவுக்கு ஏற்ற மாதம். ஆனி மற்றும் ஆடிப்பட்டங்கள் “செம்பருத்தி” சாகுபடிக்கு ஏற்றவை.
பூச்சி நோய் மேலாண்மை:
ஆனி மாதம் விதைத்த பயிர்கள் இளம் பயிராக இருக்கும் என்பதால், அதில் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் தற்போது இருக்கும். அவற்றை இலைகளை உண்ண முடியாமல் செய்து விட்டால் போதும். பூச்சிவிரட்டி, வேப்பெண்ணெய் கரைசல் போன்றவற்றை பயன்படுத்தும்போது இலைகளில் அமரும் பூச்சிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு ஓடிவிடும். இயற்கை விவசாயத்தைப் பொறுத்தவரை “வரும்முன் காப்போம்” என்ற கோட்பாட்டின்படி, மாதத்தின் தொடக்கத்தில் இருந்து பூச்சி விரட்டிகளை தெளித்து வந்தால் பூச்சி தாக்குதலை குறைக்கலாம்.
ஆடியில் பெய்யும் மழையால் ஊரெங்கும் செழித்து குளுமை பரவி இருக்கும். இது பாம்புகளுக்கு ஏற்ற காலநிலை என்பதால் அவை வயல்களுக்குள் புகுந்து வசிக்கத் தொடங்கும். இதனால் விளைச்சலை கெடுக்கும் எலிகள் அழிந்து போகும். இப்படி சூரியனில் தொடங்கி, சிறு புழு பூச்சிகள் வரை ஆடியில் பெரும் தாக்கத்தை உருவாக்கி விதைகளை நன்கு வளரச்செய்யும் என்பதாலேயே பழந்தமிழர்கள் ஆடியில் விதைப்பதை பழக்கமாக கொண்டிருந்தனர்.
இன்று மழை குறைந்து, நீர் அரிதாகி மண் வளம் குறைந்து மாறிப்போனாலும், அசைக்க முடியாத நம்பிக்கையோடு இன்னமும் ஆடியில் விதைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் விவசாய மக்கள். அவர்களின் நம்பிக்கை நிஜமாகவும், நம் தேசம் செழிப்பாகவும் இறைவனிடம் வேண்டுவோம். ஆடியில் விதைக்கப்படும் எல்லா பயிர்களும் நன்கு வளர வாழ்த்துவோம்.
மாடித்தோட்டத்தில் காய்கறிகள், பழங்கள், கீரைகள், பயிரிட விரும்பும் நண்பர்கள் இந்த லிங்கில் சென்று படியுங்கள் மாடித்தோட்ட விவசாயம் பற்றி அறிய கிளிக் செய்யவும்