ஜாதிக்காய் இந்தோனேஷியாவின் மொலுக்காஸ் அல்லது ஸ்பைஸ் தீவுகளில் உள்ள பான்டா தீவுகளைப் பிறப்பிடமாகக் கொண்டவை.
மிரிஸ்டிகா ஃபிராக்ரன்ஸ் என்ற இனத்தைச் சேர்ந்த பசுமையான இம்மரமானது, வணிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
ஜாதிக்காய் மலேசியா போன்ற நாடுகளில் இயற்கையாக வளர்கின்ற மரமாகும்.
இலங்கையிலும், இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் பயிர் செய்யப்படுகின்றது.
எப்படி பயிரிடுவது…?
இரகங்கள்
விஷ்வ ஸ்ரீ, கொங்கன் சுகந்தா மற்றும் கொங்கன் ஸ்வாட் ஆகிய இரகங்கள் சாகுபடி செய்ய ஏற்ற இரகங்கள் ஆகும்.
பருவம்
இதற்கு மிதமான சீதோஷ்ண நிலை தேவை. ஆனால், அதிகப் பனி கொட்டும் பகுதியில் வளராது. ஈரக்காற்று வீசும் பகுதிகளில் வளரும் தன்மை கொண்டது. அனைத்து மாதத்திலும் நடவு செய்யலாம். ஆனாலும் கார்த்திகை மாதம் நடவு செய்ய சிறப்பானது.
மண்
களிமண் கலந்த இருமண்பாடு நிலத்தில் நன்கு வளரும் தன்மை கொண்டது. மண்ணின் கார அமிலத்தன்மை 4.5 முதல் 7.5 வரை இருக்க வேண்டும்.
நிலம் தயாரித்தல்
நிலத்தை நன்கு உழுது 2 அடி நீள அகல ஆழத்தில், குழிகள் எடுத்து ஒவ்வொரு குழியிலும் 2 கிலோ சாணம், 100 கிராம் வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை மண்ணுடன் கலந்து இட்டு நிரப்ப வேண்டும்.
ஜாதிக்காய் மரங்களை சமவெளிப் பகுதிகளில் பயிரிட விரும்புவோர் தென்னைக்கு ஊடுபயிராக பயிரிட வேண்டும். ஏனெனில் ஜாதிக்காய் மரங்களுக்கு நிழற்பாங்கான சூழல் அவசியம்.
விதை
விதைகள் மூலம் வளர்ந்த செடிகள் அல்லது ஒட்டுக்கன்றுகள் மூலம் நடவு செய்யப்படுகிறது.
விதைத்தல்
தயார் செய்துள்ள குழிகளில் கன்றுகளை குழியின் மையத்தில் நடவு செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம்
கன்றுகளை நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு 4 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது.
உரங்கள்
பொட்டாசியம், யூரியா, வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை கலந்து செடி ஒன்றிற்கு 20 கிலோ என்ற அளவில் மூன்று முறை கொடுக்க வேண்டும் அல்லது ஆண்டுக்கு இரண்டு முறை, அடியுரமாக 30 கிலோ ஊட்டமேற்றிய தொழுவுரம் கொடுக்க வேண்டும்.
பாதுகாப்பு முறைகள்
களை நிர்வாகம்
செடிகள் வளரும் வரை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும்.
பயிர் பாதுகாப்பு
ஜாதிக்காய் இயல்பிலேயே அதிக நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டது என்பதால் நோய்த் தாக்குதல் இருக்காது.
அறுவடை
காய்கள் வெடிக்கத் தொடங்கும் போது அறுவடை செய்ய வேண்டும். அறுவடை செய்த காய்களில் இருந்து பத்ரியை தனியாகவும், காயைத் தனியாகவும் பிரித்தெடுக்க வேண்டும். பத்ரியை நிழலிலும், காயை வெயிலிலும் காய வைத்து சேமித்து, தேவைக்கு ஏற்ப விற்பனை செய்யலாம்.
மகசூல்
10 வயதான ஒரு மரத்தில் இருந்து சராசரியாக 10 கிலோ ஜாதிக்காயும், 2 கிலோ பத்ரியும் கிடைக்கும்.
ஊடுபயிர்
தென்னை மற்றும் ஜாதிக்காய் ஆகியவற்றை கலப்பு பயிராக பயிரிடலாம்.
பயன்கள்
- ஜாதிக்காய் பாதியளவு உடைத்து ஒரு டம்ளர் நீரில் போட்டுக் காய்ச்சி அதில் ஒரு அவுன்ஸ் தண்ணீர் வீதம் கலந்து குடிக்க காலரா முதலிய வாந்தி பேதி நோய்களுக்குச் சிறந்த மருந்தாகும்.
- முதியோர்களின் மூட்டு வலி, தசை வலி போன்ற பிரச்னைகளை நீக்குவதற்கு, ஜாதிக்காய் எண்ணெயை பயன்படுத்தலாம்.
- ஜாதிக்காயை தூளாக அரைத்து அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டால், உடல் சூடு குறைவதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- ஜாதிக்காய் பொடியை பாலில் கலந்து குடித்தால், நன்றாக உறக்கம் வரும். மூளையின் செயல்பாட்டை தூண்டுகிறது.
- முகத்தில் ஏற்படும், பருக்கள், கிருமிகளை அறவே போக்கும் தன்மை இதற்கு உண்டு. ஜாதிக்காய் பொடியுடன் தயிர் சேர்த்து முகத்தில் தடவினால், கிருமிகளை முழுமையாக நீக்கிவிடும்.
- ஜாதிக்காய் பொடியை, அன்றாடம் தலைக்கு பயன்படுத்தும் எண்ணெயில் கலந்து தேய்த்து வந்தால், பொடுகு தொல்லை நீங்கும்.
Leave a Reply