திப்பிலி எனும் பல பருவத்தாவரமானது பைபிரேசியே (Piperaceae) குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் கொடி ஆகும்.
இது ஒரு மூலிகைத் தாவரமாகும். இது அதிகமாக பழத்திற்காகவே பயிரிடப்படுகிறது. பொதுவாக அப்பழத்தை உலர்த்தி, மசாலா மற்றும் சுவையூட்டியாகப் பயன்படுத்தப்படுகிறது.
திப்பிலி பல மிகச்சிறிய பழங்களை கொண்டது. அவை கூர்முனைக் கொம்பு போன்ற ஒரு பூவின் மேற்பரப்பில் நெருக்கமாக பதிக்கப்பட்டிருக்கும்.
கிரேக்க மருத்துவர் ஹிப்போகிரட்டீஸ் இதை ஓர் மசாலாவாக அல்லாமல் மருந்தாக விவாதித்தபோதிலும், இது கி.மு ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டில் கிரேக்கம் வரை சென்றடைந்தது.
ஐரோப்பியர்கள் அமெரிக்க கண்டங்களை கண்டுபிடிக்கும் முன்னதாக, கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்களிடையே திப்பிலி ஒர் முக்கியமான மற்றும் நன்கு அறியப்பட்ட மசாலாவாக திகழ்ந்தது.
திப்பிலி எப்படி பயிரிடுவது…?
இரகங்கள் :
விஸ்வம் திப்பிலி, ஏற்காடு பி.எல் 9 ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.
பருவம்
ஜுன் – ஜுலை அல்லது செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் நடவு செய்ய ஏற்ற பருவம் ஆகும்.
மண்
செம்மண் அல்லது இருமண் கலந்த பொறை மண் வகைகள் சாகுபடிக்கு மிகவும் ஏற்றவை.
நிலம் தயாரித்தல்
நிலத்தை நன்றாக உழுது ஒரு ஏக்கருக்கு 20 டன் தொழு உரம் இட்டுப் மண்ணை பண்படுத்தவேண்டும். மலைப்பகுதிகளில் சோலை மண் உள்ள இடங்களில் 10 டன் தொழு உரம் போதுமானது. மலைப்பகுதிகளில் 2 மீ x 2 மீ அளவிலான பாத்திகள் அமைக்க வேண்டும். சமவெளிப் பகுதிகளில் மூன்று அடி இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும். குறிப்பாகத் தண்ணீர் வசதி இருக்கின்ற இடங்களை நடவிற்குத் தேர்வு செய்யவேண்டும்.
விதை
திப்பிலியை ஓரிரு கணுக்களுடைய தண்டுகள் மூலம் பயிர்ப்பெருக்கம் செய்யலாம். கணுக்கள் எளிதாக வேர்ப்பிடிக்கும் தன்மை உடையவை. திப்பிலிக் கொடிகளின் ஓரிரு கணுக்களை உடைய தண்டுகளைப் பதித்தால் 60 நாட்களில் வேர்கள் முழுவதும் பிடித்துவிடும். வேர்ப்பிடித்த தண்டுகளை நடவிற்குப் பயன்படுத்தலாம்.
விதைத்தல்
செடிகளை 15 செ.மீ ஆழத்தில், செடிக்குச் செடி 60 செ.மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். தென்னந்தோப்புகளில் நடவு செய்வதாக இருந்தால் மூன்று அடி இடைவெளியில் பார்களை அமைத்து செடிகளை ஓர் அடி இடைவெளியில் நெருக்கமாக நடவேண்டும்.
திப்பிலிக் கொடிகளின் வளர்ச்சிக்கு நிழல் ஓரளவு இருப்பது அவசியம். சமவெளிப்பகுதிகளில் தென்னந்தோப்பு மற்றும் பாக்குத் தோப்புகளிலும், மலைச்சரிவுகளில் வாழை, சவுக்கு போன்ற மரங்கள் உள்ள இடங்களையும் தேர்வு செய்து அவற்றினுள் செடிகளை நடவு செய்யவேண்டும்.
நீர் நிர்வாகம்
நடவு செய்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். சமவெளி மற்றும் மலைப்பகுதிகளில் வாரம் ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.
உரங்கள்
ஒரு ஏக்கருக்கு 60 கிலோ தழைச்சத்து மற்றும் 80 கிலோ சாம்பல் சத்து தரவல்ல உரங்களை ஆண்டுக்கு இருமுறை சம அளவில் பிரித்து இடவேண்டும். முதலில் பாதியை அடியுரமாகவும் மீதியை செடிகள் நட்ட ஆறு மாதங்கள் கழித்தும் இடவேண்டும்.
பாதுகாப்பு முறைகள்
களை நிர்வாகம்
செடிகள் நட்ட ஒரு மாதத்தில் முதல் களை எடுத்து சுற்றி மண் அணைக்க வேண்டும். செடிகளை நட்ட முதல் மூன்று மாதங்களுக்கு அதாவது கொடிகள் படரும் வரை களைகள் வராத வண்ணம் பராமரிக்க வேண்டும்.
பயிர் பாதுகாப்பு
இலைப்புள்ளி நோய்
இதனைக் கட்டுப்படுத்த இரண்டு கிராம் மேன்கோசெப் மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
சாம்பல் நோய்
சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த நனையும் கந்தகம் 0.3 சதவிகிதம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
அறுவடை
செடிகளை நட்ட முதல் ஆண்டில் குறைந்த அளவிலான காய்கள் கிடைக்கும். நன்றாக விளைந்த கரும்பச்சை நிறமுடைய காய்களை காம்புகள் நீக்க அறுவடை செய்ய வேண்டும்.
திப்பிலி பயிரை வேர்களுக்காவும் அறுவடை செய்யலாம். வேர்களை அறுவடை செய்வதற்கு 18 முதல் 24 மாதங்கள் வயதுடைய கொடிகளை வேரோடு பிடுங்கி எடுக்கவேண்டும். எனினும் நல்ல தரமுடைய வேர்கள் மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகள் வயதுடைய கொடிகளில் தான் கிடைக்கும். வேர்களைச் சேதமின்றி பிடுங்கி 2.5 முதல் 5.0 செ.மீ நீளமாக வெட்டி அவற்றின் பருமனைப் பொறுத்து விற்பனை செய்யலாம்.
மகசூல்
முதல் ஆண்டில் 750 கிலோ உலர்ந்த காய்களும், இரண்டாவது ஆண்டிலிருந்து சராசரியாக 1500 கிலோ காய்களும் மகசூலாகக் கிடைக்கும். வேர்களுக்குகாக பயிர் செய்தால் செடிகளை நட்ட இரண்டாவது ஆண்டில் 5 முதல் 7 டன் உலர்ந்த வேர்களும், மூன்றாவது ஆண்டில் 6 முதல் 8 டன் உலர்ந்த வேர்களும் கிடைக்கும்.
பயன்கள்
- திப்பிலிப் பொடியை பசுவின் பாலில் விட்டு காய்ச்சி அருந்தி வந்தால் இருமல், வாய்வுத் தொல்லை நீங்கும்.
- திப்பிலியைத் தூள் செய்து அரை தேக்கரண்டியளவு எடுத்து தேன் கலந்து 2 வேளையாக 1 மாதம் சாப்பிட்டு வர தேமல் குணமாகும்.
- திப்பிலியை வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் எடுத்து தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர இருமல், தொண்டைக் கமறல், வீக்கம், பசியின்மை, தாது இழப்பு குணமாகும்.
- திப்பிலியானது பசியை தூண்டும் தன்மை கொண்டது. இருமல், ஜுரம், தோல் நோய்கள், மூட்டு வலி, மூல தொந்தரவு, கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கங்களை நீக்க உதவுகின்றது.
- திப்பிலி உடலில் ஏற்படும் தசை வலி, வயிற்றுப்போக்கு, தொழு நோய் ஆகியவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. முக்கியமாக இருமல், கபம், சுவாசக்குழல் அடைப்பு, மார்புச்சளி ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
Suriyanarayanan Chennai says
Very useful thank you
Navinkumar V says
Thanks Nanba
Shanmugam says
🙏… sir /Madam could you tell me how to use thippili for joint pain in leg part..