- மஞ்சள் ஒரு வெப்ப மண்டலப்பயிர் ஆகும்.
- தண்டில் உள்ள முளையிலிருந்து கிளைத்து, மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்தான் மஞ்சள் கிழங்கு.
- இது இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருளாகும். இதனை இந்துக்கள் சடங்குகளின் புனிதப் பொருளாக உபயோகிக்கிறார்கள்.
- மஞ்சள் தமிழ் நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சித்த மருத்துவத்தின் பிரதான பகுதியாக பயன்படுத்தப்பட்டது.
- இது முதலில் வண்ணச் சாயம் எடுப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டது.
- இந்தியாவில் ஆந்திரா மற்றும் தமிழகத்தில் அதிக அளவு மஞ்சள் விளைவிக்கப்படுகிறது.
- தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் ஈரோடு மாவட்டத்தில் அதிக அளவு மஞ்சள் விளைவதால் ஈரோட்டிற்கு மஞ்சள் மாநகர் என்ற பெயரும் உண்டு.
மஞ்சள் எப்படி பயிரிடுவது…?
- கோ 1, பிஎஸ்ஆர் 1,2 (பவானிசாகர் 1,2) ரோமா, ஸ்வெர்ணா, சுதர்ஷனா, ரங்கா, ராஷ்மி, ராஜேந்திர சோனியா, கிருஷ்ணா, சுகுணா, சுகந்தம், சுரோமா, ஆலப்புழா, விரலி மஞ்சள், ஐஐஎஸ்ஆர் பிரபா, ஐஐஎஸ்ஆர் பிரதீபா, ஐஐஎஸ்ஆர் அலப்பி சுப்ரீம் மற்றும் ஐஐஎஸ்ஆர் கெடாரம் ஆகிய இரகங்கள் உள்ளன. இதில் கோ 1, பிஎஸ்ஆர் 1, 2 ஆகியவை தமிழ் நாட்டு இரகங்கள் ஆகும்.
- மஞ்சள் சாகுபடிக்கு வைகாசி முதல் ஆனி பட்டம் வரை சிறந்த பருவம் ஆகும்.
- நல்ல வடிகால் வசதியுடைய செம்மண் மற்றும் இருமண்பாட்டு நிலம் மஞ்சள் சாகுபடிக்கு ஏற்றது.
- முதலில் நிலத்தை களை இல்லாமல் குறுக்கு-நெடுக்காக இரண்டு முறை உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின் போது எக்டருக்கு 10 டன் மக்கிய தொழு உரம் இட்டு மண்ணுடன் நன்கு கலக்கவேண்டும். பின்பு, நான்கு அடி அகலத்துக்கு மேட்டுப்பாத்தி அமைக்க வேண்டும். பாத்தியின் நீளத்தை இடத்துக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம்.
- தாய் கிழங்கு மற்றும் விரலி கிழங்குகளை கொண்டு பயிர்ப்பெருக்கம் செய்யப்படுகிறது. ஒரு எக்டருக்கு 2000 கிலோ விதை கிழங்குகள் தேவைப்படுகின்றன.
- விதைப்பதற்கு முன் விதை கிழங்குகளை எமிசான் மருந்து கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும். ஒரு கிராம் எமிசான் மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து, அதில் விதை மஞ்சளை 10 நிமிடம் ஊறவைத்து, பின் நிழலில் உலர்த்தி விதைக்கவேண்டும். இதனால் கிழங்கு அழுகல் நோயைக் கட்டுப்படுத்தலாம்.
- நீரை நிலத்தில் பாய்ச்சி விதை மஞ்சளைப் பார்களின் ஓரத்தில் 15 முதல் 20 செ.மீ இடைவெளியில் 4 செ.மீ ஆழத்தில் நடவு செய்யவேண்டும்.
- மஞ்சள் நடவுக்கு முன்பு, நடவு செய்த மூன்றாம் நாள் உயிர்த்தண்ணீர் பாய்ச்சவேண்டும். பின்பு மண்ணின் தன்மைக்கேற்ப வாரம் ஒரு முறை நீர்ப்பாய்ச்சவேண்டும்.
- 200 கிலோ வேப்பம் (அ) கடலை புண்ணாக்கு, 25:60:108 கிலோ NPK, 30 கிலோ பெரஸ் சல்பேட் மற்றும் 15 கிலோ ஜிங்க் சல்பேட், 10 கிலோ அசோஸ்பைரில்லம், 10 கிலோ பாஸ்போபாக்டீரியா போன்றவற்றை நடவின் போது இட வேண்டும்.
- மேலுரமாக எக்டருக்கு 25:108 கிலோ தழை மற்றும் சாம்பல்சத்தினை நட்ட 30, 60, 120 மற்றும் 150வது நாளில் இட வேண்டும்.
- நுண்ணூட்டச் சத்து கலவையை இலை வழி தெளிக்கவேண்டும். அதற்கு சூப்பர் பாஸ்பேட் 15 கிலோவை 25 லிட்டர் தண்ணீரில் கரைத்து ஒரு நாள் இரவு ஊறவைக்கவேண்டும். மறுநாள் காலை அந்நீரில் இரும்பு சல்பேட் 375 கிராம், துத்தநாக சல்பேட் 375 கிராம், போராக்ஸ் 375 கிராம், யூரியா 375 கிராம் சேர்த்து 250 லிட்டர் தண்ணீர் ஊற்றி, இலைகளின் மேல் தெளிக்கவேண்டும்.
- நட்ட மூன்றாவது நாளில் பேஸலின் களைக்கொல்லி 2 லிட்டர் என்ற அளவில் தெளிக்கவேண்டும். நடவு செய்த 30வது நாளில் முதல் களையும், பின் 50, 120 மற்றும் 150 நாட்களிலும் களை எடுக்கவேண்டும். மேலுரம் இடும்போது மண் அணைக்கவேண்டும்.
- பயிர் மஞ்சள் நிறமாக மாறுதல், சாய்தல், உலர்ந்துவிடுதல் போன்றவை அறுவடைக்கான அறிகுறியாகும். கிழங்குகளை மண்வெட்டி அல்லது குழிதோண்டும் கருவி கொண்டு தோண்டி எடுக்க வேண்டும்.
- ஒரு எக்டருக்கு பதப்படுத்தப்படாத கிழங்குகள் 25-30 டன்கள் கிடைக்கும். பதப்படுத்தப்பட்ட கிழங்குகள் 5-6 டன்கள் வரை கிடைக்கும்.
- வரப்பு ஓரங்களில் வெங்காயம் பயிர் செய்யலாம்.
கிழங்கு பாதுகாப்பு முறைகள்
கிழங்குகளை வேகவைக்க சாண நீர் பயன்படுத்தக் கூடாது. சுத்தமான நீரில் தான் வேக வைக்க வேண்டும். கிழங்குகளைச் சரியான அளவு வேகவைக்கவேண்டும். அதிகமாக வேகவைத்தால் நிறம் மங்கிவிடும். குறைவாக வேக வைத்தால் கிழங்குகள் காயும் போது நொறுங்கி உடைந்து விடும். நீர் கொதிக்க ஆரம்பித்த பின்னர் சுமார் 45 முதல் 60 நிமிடங்களில் கிழங்குகள் நன்றாக வெந்துவிடும். இதனை சில குறிப்புகள் மூலம் கண்டறிலாம். முதலாவது நல்ல மஞ்சள் வாசனை வீசும். இரண்டாவது நீர் கொதிக்கும் போது நுரை தள்ளும். மூன்றாவது கிழங்கினை இலேசாக அமுக்கும்போது நெகிழ்ந்து கொடுக்கும். நன்கு வெந்த கிழங்கினுள் சிறு குச்சியினை நுழைத்தால் அது எளிதில் உள்ளே செல்லும். மஞ்சளை உடைத்துப் பார்த்தால் உட்பாகம் ஆரஞ்சு நிறம் மாறி மஞ்சள் நிறமாக இருக்கும். இந்த சமயத்தில் கிழங்குகளை எடுத்து ஆறவிடவேண்டும்.
தூய்மையான தரையில் சூரிய வெப்பத்தில் காய வைக்கவேண்டும். மழையில் நனைய விடக்கூடாது. ஒவ்வொரு நாளும் மூன்று அல்லது நான்கு முறை கிளறி விட்டு சீராக காயவிடவேண்டும். தினமும் மாலையில் கிழங்குகளை ஒன்றாகக் குவித்து தார்பாலினால் மூடிவிடவேண்டும். சுமார் 10 அல்லது 15 நாட்களில் மஞ்சள் காய்ந்துவிடும். கிழங்குகள் உறுதியாக மாறிவிடும்.
காய்ந்த மஞ்சளைப் பெரிய உருளைகளில் போட்டு மெருகூட்டலாம். இந்த உருளைகள் கையாலோ அல்லது மின்சாரத்தாலோ சுற்றப்படுகின்றன. மெருகூட்டும் போது மஞ்சள் கிழங்குகளின் மீதுள்ள செதில்கள், சிறு வேர்கள் நீங்கி மேற்புறம் பளபளப்பும் மெருகும் சேர்க்கிறது. இவ்வாறு மெருகூட்டும் போது நிறமிடுதல் செய்யவேண்டும். நிற மூட்டுவதற்கு இரசாயனங்களையோ, இதர பொருட்களையோ பயன்படுத்தக் கூடாது. நல்ல சுத்தமான உலர்ந்த மஞ்சள் பொடியினைச் சேர்த்து நிறமூட்டலாம்.
பதப்படுத்தப்பட்ட மஞ்சளைப் பாலித்தீன் உட்கொடுக்கப்பட்ட கோணிச் சாக்குகளில் அடைக்கவேண்டும். ஈரமற்ற தரைகளில் வைக்கவேண்டும். அவற்றிலிருந்து சுமார் ஒரு அடிக்கும் கூடுதலாக இடைவெளி விட்டு மஞ்சள் சிப்பங்களை அடுக்கவேண்டும். எலி, அணில், பறவைகள் உள்ளே நுழைய விடக்கூடாது. அவ்வப்போது சிப்பங்களை சூரிய வெளிச்சத்தில் காட்டுவதால் மஞ்சளின் சேமிப்பைக் கூட்ட முடியும். பூச்சி மருந்துகளை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது.
மஞ்சள் பயன்கள்
- மஞ்சள், வேப்பிலை ஆகியவற்றைச் சம எடையாக அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றுப் போட்டு வந்தால் அம்மை கொப்புளங்கள், சேற்றுப் புண் ஆகியவை குணமாகும்.
- மஞ்சளைச் சுட்டு புகையை நுகர்ந்தால் தலைநீரேற்றம், மூக்கடைப்பு குணமாகும்.
- மஞ்சளை அரைத்து, இரவில் முகத்தில் பூசி காலையில் கழுவி வந்தால் பெண்களுக்கு முகத்தில் வளரும் முடி உதிரும். இது ஒரு பாரம்பரிய முறையாக நமது மருத்துவத்தில் நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது.
- சளியினால் தொண்டை அடைப்பு ஏற்பட்டால் தேனுடன் மஞ்சள் தூள் கலந்து காலையும் மாலையும் இரண்டு வேளை சாப்பிட்டால் சளி அடைப்பு சரியாகி விடும்.
- சளித் தொல்லையில் இருந்து விடுபட நன்றாக காய்ச்சிய பாலில் மஞ்சள் தூள் கலந்து சாப்பிட வேண்டும்.
- மஞ்சள் ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினியாகும்.
Leave a Reply