துளசி என்பது ஒரு மூலிகைச் செடியாகும். மூலிகைகளின் அரசி என்று அழைக்கப்படும் துளசியின் தாயகம் இந்தியா. அதன் பின் அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளுக்கு பரவியது.
இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் தன்னிச்சையாக வளர்ந்து காணப்படுகிறது.
ஏறத்தாழ 50 சென்டிமீட்டர் வரை வளரக் கூடிய இச்செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை.
இது கோயில் பூஜைகளில் பயன்படுத்தப்படுவதால் கோயில் பூந்தோட்டங்களில் வழக்கமாகக் காணப்படுகிறது. வீடுகளில் துளசியை வளர்த்து பூஜிக்கும் வழக்கமும் நம் நாட்டில் உண்டு.
எப்படி பயிரிடுவது…?
- இதனை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
- பேசிலிக்கம் இனம்: இச்செடிகள் மிகச்சிறியவைகளாகவும், மியூசிலேஜ் போன்ற வழவழப்புத் தன்மையுடைய இலைகளுடனும் காணப்படும்.
- சேங்டம் இனம்: 2 முதல் 3 ஆண்டுகள் வரை வாழ்பவைகளாகவோ அல்லது பல்லாண்டுவாழ் குத்துச் செடிகளாகவோ வளருபவை. இலைகளில் மியூசிலேஜ் போன்ற வழவழப்புத் தன்மை இல்லாமலும், சிறிய மலர்கள் உடனும் காணப்படும்.
- நடவு செய்ய மார்ச் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்கள் உகந்தவை.
- துளசி எல்லாவிதமான மண் வகைகளிலும் வளரும் என்றாலும் வடிகால் வசதியுள்ள செம்மண் மற்றும் செம்பொறை மண் மிகவும் ஏற்றது. அதிக உப்பு, காரத்தன்மை மற்றும் நீர் தேங்கும் பகுதிகளில் வளருவதில்லை.
- ஒரு ஏக்கருக்கு நாற்றங்காலில் நாற்றுகள் உற்பத்தி செய்ய 150 முதல் 200 கிராம் விதைகள் வீதம் தேவைப்படும்.
- நிலத்தை நன்கு உழுது தேவையான அளவிற்கு மேட்டுப்பாத்திகள் அமைக்க வேண்டும். விதைகளை மணலுடன் கலந்து மார்ச் மாதத்தில் விதைக்க வேண்டும். விதைத்தவுடன் நீர் தெளிக்க வேண்டும். 10 நாட்களில் முளைத்துவிடும்.
- நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின் போது 5 டன் தொழு உரம் இட்டு மண்ணுடன் கலக்க வேண்டும்.
- நாற்றுகள் 6 வாரங்களில் 4-5 இலைகளுடன் காணப்படும். அப்பொழுது நடவிற்கு பயன்படுத்த வேண்டும்.
- விதைகளை நேரடியாக விதைத்தும் சாகுபடி செய்யலாம். அதாவது விதைகளை மணலுடன் கலந்து 50 முதல் 60 செ.மீ இடைவெளியில் வரிசையில் சிறிது சிறிதாக விதைத்து அவற்றை மேல்மண் கொண்டு மூடிவிட வேண்டும்.
- தண்டுகள் மூலம் சாகுபடி செய்ய துளசியின் நுனிகளை வெட்டி அக்டோபர் – டிசம்பர் மாதங்களில் நடவு செய்தால் 90-100 சதவிகிதம் முளைத்துவிடும். இதற்கு 8-10 கணுக்கள் மற்றும் 10-15 செ.மீ நீளமுடைய துண்டுகள் தேவைப்படும். முதல் இரண்டு, மூன்று ஜோடி இலைகளைத் தவிர மற்றவற்றை அகற்ற வேண்டும். பிறகு அவற்றை நன்கு தயாரிக்கப்பட்ட நாற்றங்கால் படுக்கைகள் அல்லது பாலித்தீன் பைகளில் நடவு செய்ய வேண்டும். 4 – 6 வாரங்களில் வேர்கள் பிடித்துவிடும். அவற்றை வரிசைகளுக்கு இடையே 40 செ.மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
- நடவு செய்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். தாவரங்கள் நன்கு வளர ஒரு மாதத்திற்கு வாரம் இருமுறை பாசனம் செய்ய வேண்டும். பின் 7-10 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்தால் போதுமானது.
- ஏக்கருக்கு 20-25 கிலோ தழைச்சத்து, 10-15 கிலோ மணிச்சத்து உரங்களை நடவிற்கு பின் ஒரு மாதம் கழித்து மேலுரமாக கொடுக்க வேண்டும். இதே அளவு உரங்களை ஒவ்வொரு அறுவடைக்குப் பின்னரும் 10 முதல் 15 நாட்கள் கழித்து கொடுக்க வேண்டும்.
- ஏக்கருக்கு சாம்பல்சத்து 75 கிலோ அளவில் அடியுரமாக இடவேண்டும். நுண்ணூட்டச்சத்துக்களான தாமிரத்தை 50 பி.பி.எம். என்ற அளவில் இலைவழியாக தெளிப்பதன் மூலம் எண்ணெய் மகசூல் அதிகரிக்கிறது.
- முதல் களையெடுத்தல் நடவு செய்த ஒரு மாதம் கழித்து எடுக்க வேண்டும். அடுத்த 30 நாட்களில் இரண்டாவது முறையாக களையெடுக்க வேண்டும். பிறகு செடி வளர்ந்து புதர் போல் மண்ணை மூடி விடும். ஒவ்வொரு அறுவடைக்குப் பின்னரும் களையெடுத்தல் அவசியமாகும்.
- துளசியில் முதல் அறுவடையை நடவு செய்த 90 நாட்களுக்குப் பிறகு செய்ய வேண்டும். பிறகு ஒவ்வொரு 75 நாட்களுக்குப் பிறகும் அறுவடை செய்ய வேண்டும். பயிர் நன்கு வளர்ந்த பிறகு 15 செ.மீ அளவிற்கு வெட்டி அறுவடை செய்ய வேண்டும். அப்போதுதான் பயிர் அடுத்த அறுவடைக்கு தயாராகும்.
- ஒரு எக்டரில் 25-30 டன் தழை மகசூலும், 200 கிலோ எண்ணெய் மகசூலும் கிடைக்கும்.
பயன்கள்
- தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் துளசி இலையை சாப்பிட்டு வந்தால், அவை இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய நோய் வரும் அபாயத்தைக் குறைக்கின்றன.
- துளசி இலைகளை எலுமிச்சைச்சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதைத் தோலில் தடவி வந்தால் நாள்பட்ட சொறி, படை, சிரங்குகள் மறைந்துவிடும்.
- துளசி இலையை சாறு எடுத்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக பாதையில் ஏதேனும் தொற்று இருந்தாலும் குணமாகும்.
- வெட்டுக் காயங்களுக்குத் துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமடையும்.
- துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி உடலை நெருங்காது.
- துளசி இலைகளைத் தினமும் உண்டு வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் வாழ்நாள் முழுவதும் வராது.
முருகேசன் says
ஐயா
நான் என் வீட்டில் மாடியில் தோட்டம் அமைத்துள்ளேன் அதில் சில மருத்துவ செடிகள் வைத்து உள்ளேன் எனக்கு மருத்துவ குறிப்புகள் மற்றும் படங்கள் வேண்டும் தர முடியுமா அல்லது கிடைக்குமிடம் தெரிவிக்க வேண்டுகிறேன்
Navinkumar V says
உங்களுடைய ஈமெயில் க்கு அனுப்பி வைக்குறேன் நண்பா.