தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கடந்த நூறு வருடங்களில் 854 ரகங்களை வெளியிட்டுள்ளது. இந்த வருடம் 11 புதிய ரகங்களை வெவ்வேறு வானிலை மண்டலங்களுக்கும் ஏற்றவாறு வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பல புதிய பயிர் ரகங்களை வெளியிட்டு வருகிறது. இந்த வருடம் 2021-ம் ஆண்டு பொங்கல் பரிசாக, 11 புதிய ரகங்களை வேளாண் மற்றும் தோட்டக்கலை விவசாயிகளுக்காக வெளியிட்டுள்ளது. 6 வேளாண் பயிர்கள், 4 தோட்டக்கலைப் பயிர்கள், ஒரு வனப் பயிர் என மொத்தம் 11 ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு
அரசு பரிந்துரைக்கும் பயிர் மற்றும் காய்கறிவகைகளை பயிரிட சொல்வதற்கான முக்கிய காரணம் அந்தந்த மாவட்ட காலநிலையை பொறுத்து நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட பயிர் வகைகளை தான் அரசாங்கம் பயிரிட பரிந்துரை செய்கிறது. எனவே அரசாங்கம் பரிந்துரைக்கும் பயிர் வகைகளை பயிரிடுவோம்
200 வகையான காய்கறிகள், பழங்கள், கீரைகள், மாடித்தோட்டம் பற்றிய தகவலை ஒரே இடத்தில அறிய விரும்பும் நண்பர்கள் இந்த லிங்கில் சென்று படிக்கவும். 200 காய்கறிகள், பழங்கள், கீரைகள், மாடிதோட்ட குறிப்புகள் அறிய கிளிக் செய்யவும்
1. கோ-54 (நெல்)
தமிழ்நாட்டின் சொர்ணவாரி, கார், குறுவை மற்றும் நவரை பருவங்களில் வளரக்கூடிய குறுகிய கால (110 – 115 நாள்கள்) ரகம். ஒரு ஹெக்டேர் நிலத்தில் 6,400 கிலோ மகசூல் கொடுக்கக்கூடியது. மத்திய சன்னமான அரிசியைக் கொடுக்கும். இந்த ரகம் சமைப்பதற்கு மிகச் சிறந்தது. தமிழ்நாட்டின் குறுவை மற்றும் மற்ற பருவங்களுக்கும் ஏற்றது.
2. ஏடிடீ- 55 (நெல்)
கார், குறுவை மற்றும் கோடை பருவத்திற்கு மிகவும் ஏற்ற ரகம். 115 நாள்கள் வயதுடையது. ஒரு ஹெக்டேர் பரப்பில் 6,000 கிலோ மகசூல் கொடுக்கக்கூடியது.
பாக்டீரியல் கருகல் நோய்க்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது. சன்ன அரிசியைக் கொண்ட ரகம். சமைப்பதற்கு நல்ல ரகமாகும். இந்த ரகம் பாக்டீரியா இலையுறை கருகல் நோய் பாதிக்கும் பகுதிகளான திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கும் ஏற்றது.
3. டிஆர்ஒய்-4 (நெல்)
களர் மற்றும் உவர் நிலங்களுக்கு மிகவும் ஏற்றது. மத்திய கால (125 – 130 நாள்கள்) ரகம். சம்பா, தாளடி மற்றும் பின் சம்பா பருவங்களுக்கு ஏற்றது.
ஒரு ஹெக்டேர் நிலத்தில் 5,800 கிலோ மகசூல் கொடுக்கக்கூடியது. மத்திய சன்ன அரிசியைக் கொண்ட இந்த ரகம் சமைப்பதற்கு ஏற்றது. பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு மிதமான எதிர்ப்புத்திறன் கொண்டது.
4. ஏடிஎல்-1 (கேழ்வரகு)
இந்த ரக கேழ்வரகு, இறவையில் ஹெக்டேருக்கு 3,130 கிலோவும் மானாவாரியில் 2900 கிலோவும் கொடுக்கவல்லது.
வயது 110 நாள்கள். குலை நோய்க்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது. சாயாமல் முதிர்வடையும் தண்டு திறனும், கதிரில் தானியங்கள் எளிதாகப் பிரியும் தன்மையாலும் இயந்திர அறுவடைக்கு ஏற்றது. தமிழ்நாட்டில் கேழ்வரகு பயிரிடப்படும் அனைத்து பகுதிகளிலும் பயிரிடலாம்.
5. ஏடிஎல்-1 (வரகு)
வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை கொண்ட உயர் விளைச்சல் ரகம். வயது 110 நாள்கள்.
ஒரு ஹெக்டேர் நிலத்தில் 2,500 கிலோ தானிய மகசூல், 4,400 கிலோ தட்டை மகசூலும் கொடுக்கவல்லது. உறுதியான தண்டுகள் கொண்டு, முதிர்ச்சியில் சாயாமல் இருப்பதால், இயந்திர அறுவடைக்கு ஏற்றது. தமிழ்நாட்டில் கரிசல் மண் கொண்ட பகுதிகளுக்கு ஏற்ற ரகம்.
6. கோ-7 (உளுந்து)
ஆடி மற்றும் புரட்டாசி பட்டத்திற்கு ஏற்றது. வயது 60 முதல் 65 நாள்கள்.
ஒரு ஹெக்டேர் நிலத்தில் 880 கிலோ மகசூல் கொடுக்கவல்லது. பருமனான விதையுடையது. குறிப்பாக மஞ்சள் தேமல் நோய்க்கு எதிர்ப்புத் திறன் கொண்டது. தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மற்றும் நீலகிரி தவிர அனைத்து மாவட்டங்களுக்கும் ஏற்றது.
7. விஎம்ஆர் 2 (கத்திரி)
வயது 140 நாள்கள். காய்கள், அடர் ஊதா நிறத்துடன் அடிப்பகுதியில் பச்சை புள்ளிகளோடு இருக்கும்.
காயின் எடை 100 – 150 கிராம். செடிக்கு 2 முதல் 2.5 கிலோ வரை மகசூல் மற்றும் ஹெக்டேருக்கு சுமார் 50 டன் மகசூல் கொடுக்கும் திறன் கொண்டது. குறிப்பாக முள்ளில்லா தன்மை கொண்டதால் காயின் தரம் காத்தல், அறுவடை, பின் அறுவடை மதிப்புக் கூட்டுதல் மற்றும் தொலைதூர விற்பனைக்கு ஏற்றது. தமிழ்நாட்டில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் சாகுபடி செய்ய சிறந்த ரகமாகும்.
8. பிஎல்ஆர்-3 (பாலில்லா பலா)
பல வருட ரகமான இது, பாலில்லா பலா ரகம். ஜூலை முதல் டிசம்பர் வரை மகசூல் கொடுக்கும்.
இதன் பழம் சுமார் 5 கிலோ அளவில் மரத்திற்கு சுமார் 200 பழங்கள் வரை காய்க்கும். பலாக் காய் மற்றும் பழங்களில் மிகக் குறைந்த பால் தன்மை காணப்படும். பழங்களில் `அஸ்கார்பிக்’ அமிலம், கிராமுக்கு 4.35 மி.கி என்ற அளவில் இருக்கும். சுளைகள் நல்ல இனிப்புத் தன்மை கொண்டவை. வீட்டுத் தோட்டத்திலும், வணிக ரீதியாகவும் பயிரிட ஏற்ற ரகமாகும்.
9. பிபிஐ(கு) 1 (குடம் புளி)
பல வருடப் பழப்பயிர் ரகம். சமையலுக்கு ஏற்றது. காய்கள் புளிப்புத் தன்மை கொண்டிருக்கும். மரத்திற்குச் சராசரியாக 750 பழங்கள் வீதம் 120 கிலோ மகசூல் கொடுக்கவல்லது. முதிர்ந்த பழத்தில் `ஹைட்ராக்சி சிட்ரிக்’ அமிலம் 20.67 என்ற சதவிகிதத்தில் உள்ளது.
இந்த அமிலம் உடல் பருமனைக் குறைக்கும் தன்மை கொண்டது. மருந்துகளுக்கு மூலப்பொருளாகவும் பழத்தின் சாறு உணவைக் கெடாமல் பாதுகாக்கும் வேதிப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. மரத்திற்கு 120 கிலோ மகசூல் கொடுக்கவல்லது. அதிக மழை பெய்யும் பகுதிகள் (வருடத்திற்கு 750 மிமீ) மற்றும் கடல் மட்டத்திலிருந்து 1,000 மீட்டர் உயரம் வரை உள்ள பகுதிகளில் சாகுபடி செய்ய ஏற்றது. வீட்டுத் தோட்டத்திலும், வணிக ரீதியாகவும் பயிரிடலாம்.
10. டபில்யுஎப்எல்-3 (விளாம்பழம்)
பல வருடப் பழப்பயிர் ரகம். மரத்திற்கு 140 கிலோ மகசூல் கொடுக்கவல்லது. பழங்கள் பெரிய அளவில் 450 கிராம் எடையுடன் சிறந்த மணத்துடன் குறைவான புளிப்பு மற்றும் நல்ல இனிப்புடன் இருக்கும்.
புரதச்சத்து, பொட்டாசியம், கால்சியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிக அளவில் கொண்டுள்ளது. தமிழகத்தில் தரிசு, களர் மற்றும் உவர் நிலங்களுக்கு ஏற்ற பழப்பயிராகும். மரத்திற்குச் சராசரியாக 300 பழங்கள் வீதம் ஹெக்டேருக்கு 28 டன் மகசூல் கொடுக்கும். வீட்டுத் தோட்டத்திலும், வணிக ரீதியாகவும் பயிரிட ஏற்ற ரகம்.
11. எம்டிபி-3 (மலைவேம்பு)
வேகமாக வளரக்கூடிய இலையுதிர் மரம். குறிப்பாக, இது முகப்பு மரத்தகடு (0.4 மிமீ) உற்பத்திக்காக வெளியிடப்படும் முதல் ரகமாகும்.
இந்த மரம் நேராக வளரும் தன்மை கொண்டது (15 மீட்டர்). 8 முதல் 10 வருடங்களுக்குள் அறுவடை செய்ய ஏற்றது. ஒரு மரத்திற்கு 500 – 700 கிலோ வீதம் ஹெக்டேருக்கு 50 – 70 டன் மகசூல் கொடுக்கவல்லது. வேளாண் காடுகளாக வளர்க்கும்போது வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களை ஊடுபயிராக வளர்க்கலாம். வேளாண் காடுகள் மூலம் உழவரின் வருமானத்தை ஈட்ட இது ஒரு சிறந்த மூலப் பயிராகும். தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களுக்கும் குறிப்பாகப் பாசன வசதி பெற்ற நிலங்களுக்கு இந்த ரகம் ஏற்றது.
புதிய ரகங்களை வெளியிட்டுப் பேசிய தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர். நீ. குமார், “தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கடந்த நூறு வருடங்களில் 854 ரகங்களை வெளியிட்டுள்ளது. இந்த வருடம் 11 புதிய ரகங்களை வெவ்வேறு வானிலை மண்டலங்களுக்கும் ஏற்றவாறு வெளியிட்டுள்ளது. விவசாயிகள் இந்தப் புது ரகங்களைப் பயிரிட்டு நன்மைகளைப் பெற வேண்டும்” என்றார்.
மாடித்தோட்டத்தில் காய்கறிகள், பழங்கள், கீரைகள், பயிரிட விரும்பும் நண்பர்கள் இந்த லிங்கில் சென்று படியுங்கள் மாடித்தோட்ட விவசாயம் பற்றி அறிய கிளிக் செய்யவும்
நமது பேஸ்புக் குழுவில் இணைந்து உங்கள் விவசாய சந்தேகங்களை கேட்க விரும்பும் நண்பர்கள் கீழுள்ள லிங்கில் இணையவும் FACEBOOK குரூப்பில் இணைய கிளிக் செய்யவும்
நன்றி vikatan
[WPAC_LIKE_SYSTEM]
Leave a Reply